முன்னுரை:-

மக்களாட்சி தந்துள்ள மகத்தான உரிமை வயது வந்த யார் வேண்டுமானாலும் நாட்டின் முதலமைச்சர் ஆகலாம். நாட்டின் நிர்வாகத்தை நிலை நாட்டலாம். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை மனதில் கொண்டு மக்கள் நலம் நோக்கியே எனது கால்கள் நடக்கும். நான் முதலமைச்சர் ஆனால் தமிழக வளர்ச்சியில் என்னென்ன திட்டங்கள் செய்ய அக்கறை காட்டுவேன் என்பதை இக்கட்டுரையில் தருகின்றேன்.

இரு கண்கள்:-

தமிழையும் தமிழ்நாட்டையும் இருகண்களாக மதிக்கிறேன். தமிழகம் மேலும் எழுச்சி பெற வேண்டும் என்ற ஆசையில் என்னால் நாட்டிற்கும் மக்களுக்கும் நல்ல திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்துவேன்.

கல்விப்பணி:-

நான் முதலமைச்சர் ஆனவுடன் முதல் பணியாகக் கல்வித் துறையில் கவனம் செலுத்துவேன். அடிப்படை ஆரம்பக் கல்வியைத் தாய்மொழிக் கல்வியாக்கச் சட்டம் கொண்டு வருவேன். விரும்பும் பிறமொழிகளை விருப்ப மொழியாகத் தேர்வு செய்ய வாய்ப்பளிப்பேன்.

கணினி வசதி:-

கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான ஒதுக்கீடுகளைப் பெற்றுத் தருவேன். காசு இருப்பவர் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலைமை மாற்றி தமிழ் இணையத்தின் வழி வீட்டிலிருந்தே கல்வி கற்கும் வாய்ப்பாக அரசு செலவில் கிராம ஊராட்சியில் கணினி வசதியும் இணையத்தள வசதியும் செய்து கொடுப்பேன்.

கிராமமே உயிர்நாடி:-

கிராம மக்களின் அடித்தளமான உழவுத்தொழில் சிறக்க நீர்ப்பாசன வசதியைச் செய்து கொடுப்பேன். சாலை வசதி, மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி, யாவும் செய்து கொடுப்பேன். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியும், சத்துணவு வசதியும் ஏற்படுத்தித் தருவேன்.

வேலை வாய்ப்பு:-

தமிழ் வழியில் கற்போருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமைதர சட்டம் இயற்றுவேன். மருத்துவக் கல்வி, பொறியியல் கல்வி, சட்டக் கல்வி, வேளாண்மைக் கல்வி யாவற்றையும் தமிழ்வழியில் கொண்டு வருவேன்.

குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வருவாய் தரும் வகையில் தொழிற்திட்டங்கள் தீட்டுவேன். கிராமப் புறங்களில் வசிக்கும் மக்களின் மனிதவள ஆற்றல் முறையாகப் பயன்படுத்த உரிய பயிற்சி கொடுப்பேன்.

தொண்டு நிறுவனங்களுக்கு ஊக்கம் :-

கிராமத்தைத் தத்து எடுத்து சகல வசதியுடன் கூடிய கிராமமாக மாற்றிக் காட்டும் தொண்டு நிறுவனங்களை ஊக்குவித்து அரசு நிதிகளை மக்களுக்குச் சென்றடையச் செய்வேன். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தக் கூடுதல் குழந்தைகள் பெறுவதைத் தடை செய்து, பெற்றால் வரி செலுத்தும் திட்டத்தைக் கொண்டு வருவேன்.

லஞ்சத்தை ஒழிப்பேன்:-

இலவசமாக தருவதை நிறுத்தி மக்கள் பங்களிப்பும் அரசு பங்களிப்பும் உரியவர்களுக்குச் சமமாக இருக்குமாறு பார்த்துக் கொள்வேன். காவல் துறை, வருவாய்த் துறை, பதிவுத் துறை, வரித் துறை, போக்குவரத்துத் துறை ஆகியவற்றில் கவனம் செலுத்தி லஞ்சம் வாங்குவதைத் தடைசெய்து மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்குவேன்.

அரசியலில் தூய்மை:-

அமைச்சர்கள், அதிகாரிகள் கையூட்டுப் பெற்றது நிரூபிக்கப்பட்டால் உடனடியாக மாற்றுவேன். அரசியலில் தூய்மை நிலவப்பாடுபடுவேன். தேர்தல் முறையில் அதிகம் பணம் செலவாவதைத் தடை செய்து அங்கீரிக்கப்பட்ட நன்கொடை மூலம் தேர்தல் செலவினம் செய்ய பரிந்துரை செய்வேன்.

வருவாயைப் பெருக்க முயல்வேன்:-

நதிகளை இணைக்கப் பெருமுயற்ச்சி செய்வேன். சட்டமன்றத்தில் சட்டமியற்றி மத்திய அரசுக்கு அனுப்புவேன். மக்களுக்கு வரிச்சுமையை அதிகம் ஏற்றாமல் வணிகவரி ஏமாற்று, ஆடம்பரச்செலவு, அரசுச் செலவினங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருவாயைப் பெருக்குவேன்.

முடிவுரை:-

மக்களாட்சியின் மாண்புகளை மக்கள் பெறுவதற்கு எல்லா வழிகளையும் செய்வேன். பத்திரிக்கை, நீதிமன்றம், காவல் துறை, கல்விக் கூடங்களில் உரிமைகளில் அரசு தலையீடு இல்லாமல் இருக்க விழிப்புணர்வு கொண்டு செயல்படுவேன். நல்லாட்சி தந்து நல்ல முதலமைச்சராக வரலாற்றில் இடம் பிடிப்பேன்.

நன்றி!

முன்னுரை:-

நமது இந்திய நாட்டின் விடுதலைக்காகவும், ஆங்கிலேயரின் கொடுமைக்கு எதிராகவும் போராடி தன் உடல், பொருள், உயிர் அனைத்தையும் துறந்த உன்னத தலைவர்களுள் ஒருவர் வ.உ.சிதம்பரனார் அவர்கள் தென்னாட்டு திலகர் என்றும் செக்கிழுத்தச் செம்மல் என்றும் போன்ற்றப்பட்ட வ. உ.சி யே நான் விரும்பும் தலைவர் ஆவார்.

இளமைப் பருவம்:-

தமிழகத்தின் ஓட்டப்பிடாரம் என்னும் ஊரில் 1872ம் ஆண்டு செப்டம்பர் 5ம் நாள் சிரம்பரனார் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் உலகநாத பிள்ளை, தாயார் பரமாயி அம்மாள் ஒட்டப்பிடாரத்தில் பள்ளிக்கல்வியை முடித்த அவர் திருச்சியில் 1896 ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞரானார்.

பொதுத்தொண்டு:-

வழக்கறிஞராகப் பணியாற்றியபோது ஏழைகளுக்காக இலவசமாக வழக்குகளை வாதாடியவர் வ.உ.சி அவர்கள். ஏழைகள் மேல் அன்பும் கருணையும் கொண்டவர். ஆங்கிலேயர் இந்திய மக்களின் மேல் புரிந்து வந்த ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் கண்டு நெஞ்சம் பதைத்து விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

சுதேசி இயக்கம்:-

நம் நாட்டு கடலில் கப்பல்விட நமக்கு உரிமை இல்லையா? உப்பு எடுக்க உரிமை இல்லையா? என்று நெஞ்சம் கொதித்த வ.உ.சி நவாய் சங்கத்தைத் தொடங்கினார். சுதேசி இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

இந்தியர்கள் கடல் கடந்து வணிகம் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வ. உ.சி தொடங்கியதே சுதேசிக்கப்பல் கம்பெனி. இதனால் இந்திய வாணிகம் உலக அளவில் பெருகியது. அதைக் கண்டு மனம் மகிழ்ந்த இந்திய மக்கள் வ.உ.சியை கப்பல் ஓட்டிய தமிழன் என்று சிறப்புற அழைத்தனர்.

தியாக உள்ளம்:-

வ.உசி.யின் தேசப்பற்றையும் விடுதலை உணர்வையும் கண்டு மனம் பொறுக்காத ஆங்கில அரசு வ.உ.சியை சிறையில் அடைத்தனர். சிறையில் அவரை கொடுமைப் படுத்தினர், செக்கிழுக்க வைத்து துன்புறுத்தினர். இந்திய மக்களின் விடுதலைக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்த தியாகச் செம்மலாக விளங்கினார் வ.உ.சி.

முடிவுரை:-

அஞ்சா நெஞ்சம் கொண்ட வ.உ.சி 1936 ஆம் ஆண்டு இந்த உலக வாழ்வைத் துறந்தார். அவர் மறைந்தாலும் அவர் மக்களுக்கு தந்த தேசப்பற்றும் சுதேசப் பற்றும் நம்மைவிட்டு மறையவில்லை. அவரது தொண்டினை நாமும் தொடர்ந்து செய்து நம் தேசத்திற்கு வளம் சேர்க்க வேண்டும்.

நான் விரும்பும் கவிஞர்- பாரதியார்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
பிறப்பு
நாட்டுப்பற்று
மொழிப்பற்று
சமூகப்பற்று
முடிவுரை
முன்னுரை

ஆங்கிலேயரின் அடக்குமுறையில் இந்திய மக்கள் அளவில்லா துன்பம் அடைந்தனர். வேதனையில் வாழ்ந்த மக்களிடையே சுதந்திர உணர்வையும், எழுச்சியையும் வீரம் மிகுந்த தன்னுடைய பாடல்களால் ஏற்படுத்திய பாரதியாரே நான் விரும்பும் கவிஞர்

பிறப்பு

மகாகவி பாரதியார் தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டையாபுரத்தில் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி சின்னசாமி- இலக்குமியம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன் ஆகும்

நாட்டுப்பற்று

பாரதத் தாயின் அடிமைத்தளையைத் தகர்த்தெறிய இவர் எழுதிய பாடல்கள் இளைஞர்களை வீறு கொண்டு எழச் செய்தது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் மேடைகளிலும் வீதிகளிலும் இவருடைய பாடல்களையே பாடினர்.

"ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா

உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா"

என்று மக்களை சுதந்திர போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

மொழிப்பற்று

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் "

என்று தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துரைத்துள்ளார்.

"செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே "

என்னும் பெருமையோடு கூறியதோடு நில்லாமல்

"சேமமுற -வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!"

என்று ஆணையிட்டார்.

சமூகப்பற்று

சாதிக்கொடுமைகள், பெண் அடிமை, சமூக ஏற்றத்தாழ்வு என்று அனைத்தையும் இந்நாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவேன்" என்று பெண் உரிமைக்காகப் போராடினார்.

முடிவுரை

வளமான, வலிமையான பாரதத்திற்கு தேவையான சிறந்த வழிகள் யாவும் அவருடைய பாடல்களில் உள்ளன. அவற்றை நாம் பின்பற்றினால் அவர் கனவில் கண்ட பாரதத்தை நாம் நிகழ்காலத்தில் உருவாக்க முடியும்.

பாட்டுக்கொரு புலவன் பாரதியின் புகழ் ஓங்குக!

நான் விரும்பும் கவிஞர்-பாரதியார்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
பிறப்பும் இளமையும்
இலக்கிய பணி
விடுதலை உணர்வு
தமிழ் பற்று
முடிவுரை
முன்னுரை

"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று "

என்னும் வள்ளுவரின் வாக்கு ஏற்ப இவ்வுலகில் புகழ் பெற்றவர்கள் சிலர். அவ்வரிசையில் நமது இந்திய நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் போராடியவர் சி.சுப்பிரமணிய பாரதியார் ஆவார்.

பிறப்பும் இளமையும்

மகாகவி பாரதியார் தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டையபுரத்தில் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி சின்னசாமி - இலக்குமியம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன் ஆகும். இளமையிலேயே 'பாரதி' என்னும் பட்டம் பெற்றார். மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்தார். எட்டையபுர மன்னரின் அரசவைக் கவிஞராக விளங்கினார்.

இலக்கிய பணி

கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் என்னும் முப்பெரும் பாடல்களையும், நாட்டுப்பற்றும் சமுதாய சீர்திருந்த உணர்வும் ஊட்டுகின்ற பாடல்களையும் பாடினார்.

விடுதலை உணர்வு

பாரதியார் வாழ்ந்த காலத்தில் நம் நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அப்போது நம் இந்திய மக்களைத் தம் பாடல்களால் விடுதலை உணர்வை ஊட்டி எழுப்பினார்.

தமிழ்பற்று

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி

போல் இனிதாவது எங்கும் காணோம்"

எனப் பாடி தமிழ் மொழியின் பெருமையை உலகம் அறியச் செய்தவர்.

முடிவுரை

முண்டாசுக் கவி, தேசியக் கவி எனப் புகழ்ப்பட்ட பைந்தமிழ்ப் பாவலன் மக்கள் மனதில் விடுதலை உணர்வைத் தூண்டி புதுயுகம் படைத்த தலைவன் 11 09.1921 இல் மறைந்தார். அவரது வழியை நாமும் பின்பற்றி நாட்டுக்கு உழைப்போம்.

முன்னுரை

"ஓடி விளையாடு பாப்பா

நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா"

என்று பாடினார் பாரதியார். நாம் அனைவரும் கூடி விளையாடும் போது கிடைப்பது பேர் ஆனந்தம். அத்தகைய ஆனந்தத்தை கொடுக்கும் கிரிக்கெட் விளையாட்டு எனக்கு பிடித்த விளையாட்டு ஆகும்.

கிரிக்கெட்

கிரிக்கெட் விளையாட்டை தமிழில் துடுப்பாட்டம் என்று கூறுவர். கிரிக்கெட் இங்கிலாந்தில் ஒரு தேசிய விளையாட்டாக உருவாக்கப்பட்டது. இது சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான வெளிப்புற விளையாட்டு ஆகும். ஒரு மட்டை மற்றும் பந்தை கொண்டு விளையாடும் விளையாட்டாகும். 11 வீரர்கள் கொண்ட இரண்டு அணிகளுக்கு இடையே நடக்கும் விளையாட்டு. அதிக ரன்கள் எடுக்கும் அணியே வெற்றி பெறும்.

நானும் கிரிக்கெட்டும்

நான் 8 வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். நான் பள்ளி முடிந்ததும் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் எனது நண்பர்களுடன் விளையாடுவேன். உலக அரங்கில் இந்திய அணி கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க எனக்கு பிடிக்கும்.

கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பதே எனது நோக்கம். என் பெற்றோர் எப்போதும் என்னை நன்றாக விளையாட ஊக்குவிப்பார்கள்.

விளையாட்டின் முக்கியத்துவம்

நான் கிரிக்கெட் விளையாடுவதன் மூலம் எனது மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடிகிறது. ஒழுக்கம், பொறுமை, விடாமுயற்சி, குழுப்பணி ஆகிய பண்புகள் வளர்ந்துள்ளது. தோல்வியை எதிர்த்து நிற்கவும், வெற்றியை கொண்டாடவும் கற்றுக் கொடுத்தது. எனக்கு பல புது நண்பர்களை தந்தது.

முடிவுரை

போட்டி நிறைந்த இவ்வுலகில் வெறும் பாடப் புத்தகங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடி மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும். வாழ சிறிது நேரம் செலவிட வேண்டும்.

திருவிழா அல்லது உற்சவம் என்பது ஆண்டுக்கு ஒருமுறை அல்லது குறிப்பிட்ட சில தினங்களில் மக்கள் ஒன்று கூடி கொண்டாடுவது. எங்கள் ஊரின் திருவிழா பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

எங்கள் ஊர் மீனாட்சிபுரம். பசுமை நிறைந்த அழகிய கிராமம். எங்கள் ஊரில் உள்ள அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா பங்குனி மாதம் நடைபெறும். இந்த திருவிழாவானது பத்து நாட்கள் நடைபெறும். முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா நாட்களில் எங்கள் ஊர் மக்கள் எந்த ஊரில் இருந்தாலும் இங்கே வந்து திருவிழாவைக் கொண்டாடுவார்கள். திருவிழா என்றாலே தனி உற்சாகம் தான். எங்கு பார்த்தாலும் பந்தல்கள், கடைகள், வானவேடிக்கை, ராட்டினங்கள், வண்ண விளக்குகள், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என ஊரே களைகட்டி காணப்படும்.

திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக பூஜைகள் நடைபெறும். திருவிழாவின் அனைத்து நாட்களிலும் மக்கள் குடும்பத்துடன் வந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபாடு செய்வார்கள். பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி, தீச்சட்டி எடுத்து தங்கள் நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.

பங்குனி மாதத்தில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வு விடுமுறை என்பதால் சிறுவர், சிறுமியர் கூட்டத்திற்கு பஞ்சமே இருக்காது. திருவிழா நாட்களில் மயிலாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நிகழ்ச்சிகளை ரசிப்பார்கள். திருவிழாவின் பத்தாம் நாளன்று தேரோட்டம் நடைபெறும். மக்கள் அனைவரும் தேர் இழுத்து திருவிழாவை நிறைவு செய்வார்கள்.

இதுபோல் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். அனைவரும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடி அம்மன் அருள் பெறுவோம்.

நன்றி!

பாடப்புத்தகங்கள் தேர்வு, பள்ளி என்று படித்துக் கொண்டே இருக்கும் மாணவர்களுக்கு தங்கள் தனிப்பட்ட திறமைகளை வெளிபடுத்த அவ்வப்போது கலைத்திருவிழா நடத்துவது உண்டு. அண்மையில் நான் கண்டு மகிழ்ந்த நெல்லை கலைத்திருவிழா பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களின் கலைத்திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் ஆண்டுதோறும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. பல குரல் பேச்சு, மாறுவேடம், பாடல், நடனம், ஓவியம், கதை கூறுதல், கவிதை மற்றும் கட்டுரை எழுதுதல் உட்பட்ட பல்வேறு போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

நான் கட்டுரை போட்டியில் கலந்து கொண்டேன். எனக்கு கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு "நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு'. என்னுடன் சேர்ந்து 65 மாணவர்கள் எழுதினர். என் போட்டி முடிந்தவுடன் நான் மற்ற நிகழ்ச்சிகளை பார்க்க சென்றேன்.

என்னை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி நாட்டுப்புற நடன நிகழ்ச்சி‌ மாணவர்கள் அனைவரும் பரதநாட்டியம், காவடி ஆட்டம், கரகாட்டம், கோலாட்டம் என பல நாட்டுப்புற நடனங்கள் ஆடினர். பார்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. பார்பதற்கு மிகவும் ரசிக்க கூடியவை சின்னஞ்சிறு குழந்தைகளுக்கான போட்டிகள் மழலை பேச்சில் குழந்தைகள் கதை கூறியது கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது. மாறுவேட போட்டியில் ஒரு குழந்தை பாரதியார் போல் வேடமிட்டு தாய்மொழி தமிழைப் பற்றி பேசினான். அவன் பேசியது உணர்ச்சிப் பூர்வமாக இருந்தது.

போட்டிகள் நடந்து முடிந்தபின் மாலையில் போட்டிகளின் முடிவுகளை அறிவித்து பரிசுகளை வழங்கினார்கள். மாணவர்கள் முடிவுகளை அறிவிக்கும் போது தங்களுடைய போட்டிகளின் முடிவுகளை அறிய மிக பதற்றத்துடன் இருந்தாலும் முடிவுகளை அறிவித்தவுடன் தங்களுக்கு கிடைக்காமல் தன் நண்பர்களுக்கு கிடைத்தாலும் அதை கொண்டாடி மகிழ்வதை பார்ப்பதற்கு மிகவும் அழகு. போட்டி, கோபம், பேராசை என்ற எந்த தீய எண்ணங்களும் இல்லாத குழந்தைகள் அனைவரும் வெற்றியாளர்கள் தான்.

என் பள்ளி

1. என் பள்ளியின் பெயர் சாரதா மேல்நிலைப் பள்ளி.

2. என் பள்ளி ஒரு ஆங்கில வழிப் பள்ளி.

3.எனது பள்ளி என் வீட்டிற்கு மிக அருகில் உள்ளது.

4 எனக்கு எனது பள்ளி மிகவும் பிடிக்கும்.

5. எனது பள்ளி ஆசிரியர்கள் மிகவும் அன்பானவர்கள்.

6. எனக்கு பள்ளியில் பல நண்பர்கள் உள்ளனர்.

7. எனது பள்ளியில் ஒரு அறிவியல் ஆய்வகம் உள்ளது.

8. என் பள்ளியில் பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது.

9.எனது பள்ளியில் நூலகம் உள்ளது.

10. நான் ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்வதை ரசிக்கிறேன்.

Reference tags:

Tamil katturai | தமிழ் கட்டுரை | katturai eluthum murai | katturai eluthuvathu eppadi | கட்டுரை எழுதுவது எப்படி | கட்டுரை எழுதும் முறை | Tamil katturaigal | தமிழ் கட்டுரைகள்

Reference videos: