(click heading to learn how to read)

முன்னுரை:-

"என்னிடம் நூறு இளைஞர்களை தாருங்கள் நான் இந்தியாவையே மாற்றி காட்டுகிறேன்" என்றார் சுவாமி விவேகானந்தர். அத்தகைய அசைக்க முடியாத நம்பிக்கையை இளைஞர்கள் மேல் வைத்தார்கள் முன்னோர்கள். நம் நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நாட்டின் பொருளாதாரம்:-

ஒரு நாட்டின் வளர்ச்சி அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தான் இருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் மேம்பட வேண்டுமாயின் அங்குள்ள உழைக்கும் வர்க்கம் மிகவும் ஆர்வத்துடன் உழைக்க வேண்டும். இளைஞர்களுடைய கடினமான முயற்சிகள் தான் நமது நாட்டின் பொருளாதாரத்தை பல மடங்காக அதிகரிக்க உதவுகிறது.

சமுதாய தொண்டு:-

இளைஞர்கள் புதுமையான மற்றும் ஆக்கப் பூர்வமான சிந்தனைகள் உடையவர்கள். தேசத்தின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை இளைஞர்களால் சிறப்பாக செயல்படுத்த முடியும். நம் சமுதாயம் வறுமை, கல்வியின்மை, தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சிதைந்துள்ளது. சமுதாயத்தின் உறுப்பாய் விளங்கும் இளைஞர்கள் சமுதாய மேம்பாட்டுக்காக பல்வேறு தொண்டுகள் செய்கிறார்கள்.

உலக அளவில் இந்தியா:-

இன்று உலக அரங்கில் இந்திய இளம் சமுதாயத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கல்வி, அறிவியல், விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் சர்வதேச வணிகம் என்பவற்றில் இந்திய இளைஞர்கள் தடம் பதிக்கின்றனர்.

வளர்ந்த நாடுகள்:-

அறிவு, ஆற்றல், அனுபவம், துணிவு போன்றவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகளில் மட்டுமல்ல அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் கூட இளைஞர்களின் செயல்பாடுகள் பெரிய மாற்றங்களுக்கு வித்திடும். இன்றைய உலகில் இளைஞர்கள் மாற்று சக்திகளாக உருவாகி நிற்கிறார்கள்.

முடிவுரை:-

இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வளர்ச்சி தூதுவர்களாக கருதப்படுகின்றார்கள். இளைஞர்களை சரியான திசையில் பயன்படுத்தினால் அவர்கள் விரைவான முன்னேற்றத்தை உறுதி செய்ய முடியும்.

நன்றி!!
முன்னுரை:-

பாரதப்பெருநாடு பல்வேறு மதம், இனம், மொழி, கலாச்சாரம், தட்பவெப்பநிலை முதலியவற்றைக் கொண்டு விளங்குவதாகும். அதனால் தான் இதனைத் துணைக் கண்டம், என்று வரலாற்று ஆசிரியர் கூறினார். ஒரு துணைக் கண்டத்து மக்கள் ஓரின மக்களாக வாழ்வதற்கு இன்றியமையானது தேசிய ஒற்றுமை ஆகும். இதனையே 'தேசிய ஒருமைப்பாடு' என்று அழகுறக் கூறுகிறோம்.

ஒருமைப்பாட்டுணர்ச்சி:-

இந்த ஒருமைப்பாட்டு உணர்ச்சி தமிழ்ப் புலவர்களிடத்தில் சங்க காலத்திலேயே அரும்பி விட்டது. தம் நூலின் தொடக்கத்தில் உலகத்தை எடுத்தாண்ட புலவர் பலராவர். யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்ற பூங்குன்றன் பொன்மொழி உச்சி மேற்கொண்டு போற்றத்தக்கதாகும். திருவள்ளுவரும் கம்பரும் சேக்கிழாரும் உலக நோக்குமிக்க பெரும் புலவர்கள்.

விடுதலை பெற்றோம்:-

அந்நியர் படையெடுப்பால் நம் நாடு சீர்கேடுற்றது. எங்கும் பிரிவினை உணர்ச்சியை வேற்று நாட்டவர் தூண்டி விட்டு இலாபம் கண்டனர். அந்நியரிடமிருந்து விடுதலை பெற நம் காந்தியடிகளின் தலைமையில் ஒருமைப்பாட்டுடன் போராடி வெற்றி கண்டோம்.

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை:-

ஒவ்வொரு தனிமனிதனும் தத்தம் மொழி, மதம், கலை இவற்றைப் பேணிக்காப்பதற்கு வாய்ப்புத் தர வேண்டும். பிரிவினைக் கருத்து உடையவர்களின் குறைகளைப் போக்க நடுவரசு முயலுதல் வேண்டும். எல்லா மாநிலத்தார்க்கும் சரிசமமான வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். நாட்டு நல திட்டங்கள் மாநிலமெங்கும் பரவலாக நிறைவேற்றப் பட வேண்டும். ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்துடன் உறவு கொள்ள வேண்டும். ஒரு மாநிலத்திடம் மற்றொ மாநிலம் தன் தேவைகளைக் கேட்டுப் பெறுதல் வேண்டும். வியாபாரம், கல்வி போக்குவரவு முதலியவற்றால் மாநிலத்துக்கு மாநிலம் நட்புறவை வளர்க்க வேண்டும். குறுகிய மனப்பான்மை விடுத்து பெரிய பரந்த மனப்பண்பு பெறுதல் வேண்டும்.

ஒருமைப்படுவோம்:-

வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்ற தீய எண்ணத்தை வேரோடு சாய்ப்போம். இந்தியப் பெருமொழியாம் இந்தியை இந்தியர் அனைவரும் கற்போம். உயர் தனிச் செம்மொழி ஆன தமிழை வடமாநில நண்பர்களுக்கு கற்றுக் கொடுப்போம். வங்கத்து நீரால் தென் மாநிலங்களை வளப்படுத்துவோம். இனப்பகை, மொழி, மறந்து பாரத மணிக் கொடிக் கீழ் ஒன்று கூடுவோம்.

முப்பது கோடி முகமுடையாள் - உயிர் மொய்ம்புற வொன்றுடையாள்

செப்பு மொழி பதினெட்டுடையாள் - எனில் சிந்தனை ஒன்றுடையாள் பாரதத்தாய் என்பதை நாம் உணர்ந்து விட்டோமாயின் ஒருமைப்பாட்டுணர்ச்சி தழைத்தோங்குவது உறுதி ஆகும்.

முடிவுரை:-

ஆகவே பாரதப் பெருநாடு உலக அரங்கில் தன்னிறைவு பெற்று புகழ்மிக்கு விளங்கிட ஒருமைப்பாட்டுணர்ச்சி ஒவ்வொரு இந்தியக் குடிமகன் இதயத்தும் தழைத்தோங்க வேண்டுவது இன்றியமையாத தாகும்.

தேசிய ஒருமைப்பாடு கட்டுரை | deaiya orumaipadu katturai | Tamil katturai
தேசிய ஒருமைப்பாடு கட்டுரை | deaiya orumaipadu katturai | Tamil katturai
முன்னுரை

குடும்பத்தின் மீதான நேசம் போல் இயல்பாக உருவாகும் உணர்வுதான் நாட்டின் மீதான அன்பு. அந்த அன்பின் முக்கியத்துவம், விளைவு பற்றி இக்கட்டுரையில் விரிவாக் காண்போம்.

இயற்கையான உணர்வு

நம் நாட்டின் மேல் இருக்கும் நேசம் என்பது மக்களின் மனதில் ஆழ வேரூன்றி இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள இயற்கைமான உணர்வு. அதனால் தான் நாம் தேசியகீதம் பாடும்போதெல்லாம் நம்மை அறியாமல் தேசபக்தியை உணர்கிறோம்.

நேசத்தால் கிடைத்த சுதந்திரம்

மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், வ.உ.சி போன்ற பல சுதந்திரப் போராட்ட வீரர்களாளும் மற்றும் அன்று நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மக்களாளும் தான் இன்று நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம். நமது தேசத்தை வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற்ற வேண்டும் என்று தன்னலமின்றி அவர்கள் போராடினார்கள். தாய் நாட்டிற்காக தங்கள் குடும்பம், மகிழ்ச்சி, உயிர் என அனைத்தையும் தியாகம் செய்தார்கள்.

உண்மையான காதல்

நாட்டின் மீதான காதல் என்பது ஒருவரின் தேசத்துடன் தொடர்புடைய கலாச்சாரம், அரசியல், பாரம்பரியம் மற்றும் வரலாற்று அம்சங்களின் கலவையானது. தேசத்தை நேசிப்பது என்பது நிலத்தின் மீது இருக்கும் ஈர்ப்பு அல்ல அது தேசத்தின் குடிமக்கள் மீதான அன்பு மற்றும் பாலினம், இனம், சாதி, மதம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அனைவருடனும் ஒற்றுமையாக வாழ்வது. நம் நாட்டின் சட்டங்களை கடைப்பிடிப்பதும் மற்றும் வரி செலுத்துவதும் நம் நேசத்தின் வெளிப்பாடுதான்.

நேசத்தின் விளைவு

நாம் வாழும் நாடு நமக்கு என்ன கொடுத்திருக்கிறது என்று எண்ணுவதைவிட, நம் நாட்டிற்கு நாம் என்ன கொடுக்க முடியும் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதன் மூலம் சிறந்த கல்விமுறை, மேம்பட்ட சுகாதாரம், சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் நிலையான பொருளாதாரம் உருவாகும். நாம் எப்போதும் ஒற்றுமையாகவும் அர்ப்பணிப்புடனும் இருந்தால் நம் நாடு முன்னேற்றம் அடையும்.

இராணுவ வீரணும் விவசாயியும்

இந்திய ராணுவ வீரர்கள் தன்னலமின்றி நாட்டுக்காகப் போராடவில்லை என்றால் எதிரிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற முடியாது. தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காவும், தங்கள் சக உயிரினங்களின் நலனணுக்காகவும். விவசாயிகள் நம் தாய்மண்ணையும் இயற்கை வளங்களையும் நேசித்தும் அதை பாதுகாக்கிறார்கள். அவர்கள் நாட்டை நேசித்ததால் அதை சிறந்த இடமாக மாற்றுகிறார்கள்.

முடிவுரை

நம் நாடு, உலக நாடுகளிடையே வளர்ந்து வரும் நாடாக மாறிக்கொண்டு வருவதற்கு முக்கிய காரணமே நம் நாட்டு மக்கள் நம் தேசம் மீது வைத்திருக்கும் நேசமே. நான் என் நாட்டை நேசிக்கிறேன், என் மக்களை நேசிக்கிறேன்.

முன்னுரை:-

மனித மனதை சிதைத்து மனித இனத்தை அழிக்கும் பேரபாயமான வேலையை சுலபமாக செய்வது போதைப் பொருட்கள். இன்றைய சமுதாயம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்று போதைப்பொருள்.

போதை ஒரு பேய்:-

மது, புகையிலை ஆகியவை முதலில் வழி கொடுத்து பிறகு அதையும் தாண்டி கஞ்சா, பிரவுன் சுகர், கொகைன், ஹெராயின் போன்ற மனிதனை அழிக்கும் போதைப் பொருட்கள் பல.

போதைக்கு அடிமை:-

வீட்டில் வசிக்கும் யாராயினும் ஒரு நபர் மதுபானம், புகையிலை போன்றவற்றை பயன்படுத்துவோராக இருந்தால், அவ்வீட்டில் வசிக்கும் சிறுவர்களும் அதனைப் பயன்படுத்த தூண்டப்படுகிறார்கள். சிலர் நாகரீகமோகத்தினால் மதுவைப் பயன்படுத்துவோரும் உள்ளனர். போதைப்பொருட்களானவை பயன்படுத்தப்படும் போது அவற்றிக்கு அடிமையாகி நாளடைவில் அவை இன்றி வாழ முடியாத நிலையை உருவாக்கும்.

போதை ஒழிப்பு:-

ஆண்டுதோறும் ஜீன் 26 ஆம் நாள் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் மற்றும் சித்ரவதைக்கு ஆளானவர்களுக்கான ஆதரம் தினம் அனுசரிக்கப்படுகிறது. போதைப் பொருட்களின் அதிக வரியினை விதிப்பதும் சட்டதிட்டங்களை கடுமையாக்குவதும் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான வழியாகும்.

போதையற்ற உலகம் அவசியம்:-

மனச்சிதைவு, உடல்நலக் கோளாறு, நாள்பட்ட நோய்கள், தீராத வலி இவை தான் போதைப் பொருள் பயன்பாடு நமக்கு தரும் பரிசுகள். "இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்" என்பார்கள். அவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் நாடு எப்படி முன்னேற்றம் அடையும்? மனித ஆற்றலை உருக்குலைத்து, அந்த மனித சக்தியை ஒன்றுக்கு உதவாததாக மாற்றும் சக்தி படைத்தவை போதைப் பொருட்கள். இது மட்டுமின்றி சமூகத்திற்கு எதிரான சீர்கேடுகளை செய்ய தூண்டுகிறது.

முடிவுரை:-

போதைப் பொருட்களால் ஏற்பட்டிருக்கும் களங்கத்தை துடைப்போம் என்றும் பாகுபாடு காட்டாமல் போதைப் பொருட்களை தடுப்போம். இந்த விவகாரத்தில் அடுத்தவர்களின் கண்டிப்பும் அணுகுமுறையும் நமக்கு பலன் தராது, போதை இல்லா உலகை உருவாக்க வேண்டும் என ஒவ்வொருவரும் முடிவு செய்தால் மட்டும் போதை ஒழிப்பு சாத்தியம்.

போதைப் பொருளை ஒழிப்போம்.
மாணவ சமுதாயத்தை காப்போம்.
எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம்.
முன்னுரை:-

"மாற்றம் ஒன்றே மாறாதது" என்பது தத்துவம். மாற்றத்தை உருவாக்கும் ஆற்றலும் மாற்றத்தை எதிர்கொள்ளும் சக்தியும் உடையவர்கள் இளைஞர்கள். இந்தியா மனித வளம் மிகுந்த நாடு. அதிலும் இளைஞர்கள் நிறைந்த தேசம் ஆகையால் ஸ்மார்ட் இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது.

இளைஞர்களின் சக்தி:-

அன்று நடந்த இந்திய விடுதலை போராட்டமா? இந்தி எதிர்ப்புப் போராட்டமா? இன்று ஜல்லிக்கட்டு போராட்டமா ? எல்லாமே இளைஞர்களின் எழுச்சியில்தான் நடந்தது; நடக்கிறது; நடக்கும். காந்தியடிகள், பகத் சிங் விவேகானந்தர் முதல் காமராஜர், அண்ணா வரை எல்லோருமே இளமையிலேயே பொதுப்பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்தாம். நம் நாடு ஸ்மார்ட் இந்தியாவாக மாற வேண்டும் என்று கனவு காண்பது பெரியவர்களாக இருந்தாலும் அதனை நிறைவேற்றும் பொறுப்பு இளைஞர்கள் கையில் உள்ளது. இளைஞர்களைப் புறக்கணித்து விட்டு எதுவும் நடைபெறாது என்பது உண்மை.

நாட்டின் பொருளாதாரம்:-

ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றால் அந்நாட்டின் பொருளாதாரம் உயர வேண்டும். இந்தியாவின் பொருளாதாரமானது விவசாயம், கைவினைப் பொருட்கள், தொழில் துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை போன்ற பலவற்றை சார்ந்துள்ளது. இளைஞர்களிடம் இருக்கும் மன உறுதி நம்பிக்கை, ஆற்றல், குழுப்பணி, விடா முயற்சி மூலம் பல புதுமைகளை உருவாக்கி எல்லா துறைகளிலும் வெற்றி காண முடியும்.

நாட்டின் முதுகெலும்பு:-

ஸ்மார்ட் இந்தியா என்றால் மக்கள் அனைவரிடமும் நாகரிகம் வளர்ச்சி அடைந்த வாழ்க்கை மற்றும் பணம் இருந்தால் மட்டும் போதாது. மக்கள் அனைவரும் பசியின்றி ஆரோக்கியமான வாழ்க்கையும் வாழ வேண்டும். கணினியைப் பிடிக்கும் கரங்கள் மட்டும் போதாது மண்ணையும் பிடிக்கும் கரங்கள் வேண்டும். என்னிடம் நூறு இளைஞர்களை தாருங்கள் நான் இந்தியாவையே மாற்றி காட்டுகிறேன் என்றார் சுவாமி விவேகானந்தர். அத்தகைய ஆற்றல் உடைய இளைஞர்கள் நம் மண்ணில் கால் வைத்து உழைத்தால் பஞ்சம் என்ற சொல் தமிழ் அகராதியிலே அழிந்து போய்விடும்.

இயற்கை அன்னையின் குழந்தைகள்-
நாட்டின் இயற்கை வளங்கள் காப்பது

மிக எளிதானது அல்ல. மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க இயற்கை அன்னையின் செழிப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. இதனை மாற்ற இளைஞர்கள் கண்டுபிடித்த கருவிகள் பல. உதாரணமாக குப்பைகளை மறுசுழற்சி செய்து கண்டுபிடித்த புதிய பொருட்கள் ஏராளம், காற்றை மாசுபடுத்தாமல் சூரிய ஒளியால் இயங்கும் வாகனங்கள் மற்றும் பல.

சமுதாய தொண்டு:-

இளைஞர்களிடம் நான் என்ற எண்ணம் விட நாம் என்ற எண்ணம் அதிக அளவில் இருக்கும். சாதி, மதம், சமூக வேறுபாடுகள் என எதையும் பார்க்காமல் அனைத்தையும் சரிசமமாக பார்க்கும் கண்களை உடையவர்கள். தேசத்தின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை இளைஞர்களால் சிறப்பாக செயல்படுத்த முடியும். நம் சமுதாயம் வறுமை, கல்வியின்மை, தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சிதைந்துள்ளது. இளைஞர்களின் புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளால் ஒரு அன்பான சமுதாயம் உருவாக்க முடியும்.

முடிவுரை:-

இந்தியாவை ஒரு முன்னணி நாடாக உருவாக்க இளைஞர்கள் அனைவரும் தங்களின் பங்களிப்பை செலுத்த வேண்டும் .

இளைஞர்களின் ஆற்றல், அறிவு மற்றும் ஆர்வம் மூலம் நமது இந்தியா விரைவில் "ஸ்மார்ட் இந்தியா "ஆக மாற்றமடையும்.

நன்றி!

குறிப்பு சட்டகம்
முன்னுரை
இளைஞர்களின் சக்தி
நாட்டின் பொருளாதாரம்
நாட்டின் முதுகெழும்பு
இயற்கை அன்னையின் குழந்தைகள்
சமுதாய தொண்டு
முடிவுரை

ஸ்மார்ட் இந்தியா என்பது நம் நாடு புதிய தொழில் நுட்பத்துடன் விவசாயம், கல்வி, மருத்துவம், தொழிற்சாலை, விஞ்ஞானம் போன்ற எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடைவதே.

விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு. நம் நாட்டின் பொருளாதாரம், மக்களின் அடிப்படை தேவையான உணவு மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் அனைத்தும் விவசாயத்தை சார்ந்துள்ளது. ஆகையால் அரசு விவசாயத் துறையில் கவனம் செலுத்தி வெற்றி காண வேண்டும். விவசாயத்திற்கு தேவையான இயற்கை வளங்களான மண். ஊற்று, குளம், ஆறு போன்றவற்றை பாதுகாக்க வேண்டும். விவசாய வளர்ச்சிக்கு எதிராக இருக்கும் எந்தவொரு திட்டத்தையும் அரசு அனுமதிக்க கூடாது. நம் தேசத்தை வளமாக்கும் விவசாயத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும்.

ஒரு நாடு முன்னேற அந்நாட்டின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும். ஏழை மாணவர்கள் தங்கள் கனவுகளை அடைய எல்லா வசதிகளும் கொண்ட அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் பல்கலை கழகங்கள் கட்டவேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வியை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு தரமான கல்வியை கொடுத்து நாளைய சிறந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

எல்லா தொழிற்சாலைகளும் மக்களுக்கு தேவையான பொருட்களை விரைவாக செய்து தருகிறது. தொழிற்சாலைகள் சுற்றி வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்புகளும் தகுகிறது. தொழிற்சாலையின் கவர்ச்சியால் தம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது. தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவுகளை சரியான முறையில் அகற்றி நம் இயற்கை அன்னையை பாதுகாக்க வேண்டும்.

பல தொழில்நுட்பத்துடன் வளர்ந்து கொண்டு இருக்கும் மருத்துவம் எல்லா மக்களுக்கும் உதவியாக இருக்க வேண்டும். மலிவான விலையில் மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம் நாடு பல கலாச்சாரம் மற்றும் பண்பாடு நிறைந்த நாடு. நாம் முன்னேறி செல்லும் போது அவற்றை மறக்காமல் கட்டிக்காப்பது நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

இன்று வளர்ந்து வரும் அனைத்து தொழில்நுட்பங்களும் மக்களின் வாழ்க்கையை எளிமையாக்குகிறது. தினம் தினம் புதிய கண்டுப்பிடிப்புகள் புதிய தொழில்நுட்பங்கள் இந்தியாவை முன்னேற்றி கொண்டு செல்கிறது. ஆனால் இந்த புதிய பாதைகள் இயற்கை வளங்களை சிதைக்காமல் வளர வேண்டும்.

மக்கள் தொகை அதிகம் கொண்ட நம் நாட்டில் குப்பைகளை சரியான முறையில் அகற்றுவது சவாலான ஒரு செயல். ஆகையால் மக்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். முடிந்தவரை மக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்துங்கள். மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை தனியாக பிரித்து குப்பையில் போட வேண்டும்.

நம் நாடு ஸ்மார்ட் இந்தியாவாக மாற அரசு எல்லா வேலைகளையும் பார்க்கும் என்று நாம் இருக்ககூடாது. இந்திய குடிமகன் ஒவ்வொருவர்க்கும் இந்த பொறுப்பு உள்ளது. ஆகையால் அரசுடன் மக்கள் நாம் அனைவரும் இணைந்து ஸ்மார்ட் இந்தியாவை உருவாக்குவோம் .

நன்றி!

வாக்களிப்பதே சிறந்தது நிச்சயம் வாக்களிப்பேன்
முன்னுரை
வாக்குரிமை முக்கியத்துவம்
இன்றைய நிலை
வாக்காளர் தினம்
வாக்களிப்பதே சிறந்தது
என் வாக்குரிமை
முடிவுரை
முன்னுரை

ஜனநாயகத்தின் கூர்மையான ஆயுதம் வாக்குரிமை, அதன் முனை மழுங்காமல் காப்பது நம் கடமை. நாட்டை ஆள்வதற்குரிய எல்லா அரசியல் அதிகாரங்களும் நாட்டின் குடிமக்களுக்கே உண்டு என்பது குடியரசின் தத்துவம். குடிமக்கள் தங்கள் அதிகாரத்தை வாக்குரிமை மூலம் செலுத்துகின்றனர்.

வாக்குரிமை முக்கியத்துவம்

மக்களாட்சி நடைபெறும் நம் நாட்டில் வாக்குரிமை மிக இன்றியமையானது. வாக்கு செலுத்துவதன் மூலம் நாம் நல்ல தலைவர்களை தேர்வு செய்கிறோம்.

"கருப்பு காந்தி காமராஜரையே தோற்கடித்தவர்கள் வாக்காளர்களே !". வாக்குரிமை என்னும் சக்தியால் பலம் வாய்ந்த அரசுகளும், தலைவர்களும் தேர்தல் தோல்வியைத் தழுவியுள்ளனர். புதிய சட்டங்கள் பிறந்திருக்கின்றன. அடுத்த முறை மக்களிடம் போய் ஓட்டு கேட்க வேண்டும் என்ற கட்டாயத்தில் சில நல்ல நிகழ்வுகள் நந்துவிடுகின்றன.

இன்றைய நிலை

மக்களின் வாக்குகள் அடுத்த பெரிய மாற்றமாக இருக்கலாம். அத்தகைய மாற்றத்தை உருவாக்கக்கூடிய வாக்குகள் இன்று விற்கப்படுகின்றன. தேர்தல் அன்று வன்முறைகள் நடக்கின்றன. வாக்குக்கு பணம் கொடுக்கிறார்கள், பணம் வாங்குகிறார்கள் நேர்மையற்ற முறையில் வாக்குகளைப் பதிவு செய்கிறார்கள் இது ஒரு நாட்டின் ஜனநாயகத்தை அழிக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

வாக்காளர் தினம்

வாக்களிப்பதன் முக்கியத்துவத்தையும், தேர்தலின் அவசியத்தையும் எல்லோருக்கும் உணர்த்துவதற்காக ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

வாக்களிப்பதே சிறந்தது

நம்பிக்கையின் அடிப்படையிலும், சாதி, இன, பேதம் பார்க்காமல் சமூகத்தை உயர்த்துவதற்கான உயர்ந்த தலைவனை தேர்ந்தெடுக்க மக்களுக்கு ஆயுதமாக இருப்பது அவர்களின் வாக்குரிமையே. சமத்துவத்தை நிலை நிறுத்த நம் நாட்டில் ஒவ்வொரு குடிமகணுக்கும் வாக்குரிமை உள்ளது.

என் வாக்குரிமை

நூட்டிற்கு தேவை - நேர்மையான ஆட்சியாளர்கள் அல்ல, நேர்மையான வாக்காளர் என்பதை நாம் உணராத வரை. நாமெல்லாம் அடிமைகள் தான்.

மாற்றம் என்னிடமிருந்து ஆகையால் பணம் இதர சலுகைகள் எதையும் எதிர்பார்க்காமல் என் நாட்டை மாபெரும் ஜனநாயக நாடாகக் கட்டமைக்க நான் என் வாக்குரிமையை சிந்தித்து பயன்படுத்துவேன் என்று உறுதி செய்கிறேன்.

முடிவுரை

'விரல் நுனியில் தேசத்தின் தீர்ப்பை எழுதுவோம் !'

ஒவ்வொரு வாக்கும் ஒரு நாட்டின் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே, நம் வாக்குரிமையை விழிப்புணர்வுடன். பயன்படுத்த வேண்டும்

முன்னுரை

காந்தி அவர்கள் வளமான இந்தியாவை உருவாக்க படித்த இளைஞர்களை தங்கள் கிராமங்களுக்குத் திரும்பி செல்லுங்கள் என்று கூறினார். ஊருக்காக உழைப்பதன் முக்கியத்துவம் மற்றும் சிறப்புகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விவசாயியும் இராணுவ வீரணும்

என் மண் என் உயிர் என்று தன் மண்னை விட்டு போகாமல் வாழும் விவசாயி தான் நம் நாட்டின் தூண்கள். தன் உயிர் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தன் ஊரையும் மண்ணையும் பாதுகாத்து நிற்கும் இராணுவ வீரர்களின் தியாகம் எதற்கும் ஈடாகாது. மண்ணையும் ஊரையும் நேசிக்கும் இவர்களால் தான் நாம் பசியின்றி மற்றும் பாதுகாப்பாக இருக்கிறோம்.

ஊருக்காக தலைவன்

அன்று அந்நியர்கள் நம் நாட்டை ஆட்சி செய்யும் போது நம் மண்ணையும் மதிக்கவில்லை மக்களையும் மதிக்கவில்லை. அதனால் நம் முன்னோர்கள் அடைந்த வேதனைகள் பல. தன் ஊரின் வளங்களை பாதுகாத்து மற்றும் மக்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு ஊருக்காக உழைக்கும் ஒரு தலைவன் இருந்தால் மட்டுமே அந்த ஊர் செழிப்படையும்.

நம் தாய்மண்

'சொர்க்கமே என்றாலும் அது நம் ஊர் போல வருமா' என்ற வரிகளுக்கு ஏற்ப நம் ஊர் ,நம் மண் நமக்கு தரும் ஆனந்தங்கள் எண்ணற்றவை. நம் ஊரில் இருக்கும் போது நம் சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் சுற்றி இருப்பதால் சவால்களை எதிர்கொள்ள முடியும். நம் மொழி, கலாச்சாரம் பழக்க வழக்கங்கள் அனைத்தும் பாதுகாக்க முடிகிறது.

ஊருக்காக நம் பங்களிப்பு

மரங்கள் நடுதல், வீதிகள் அனைத்தும் சுத்தம் செய்தல், தேவை இல்லாத கருவேல் மரங்களை அகற்றுதல், மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல் மற்றும் கல்வி, சுகாதாரம், மருத்துவம் ஆகியவற்றில் மக்களுக்கு உதவும் சில முயற்சிகள் எடுத்து நம் ஊரை பாதுகாக்கலாம்.

இன்றைய நிலைமை

நம்மில் பலர் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு இடங்களில் வாழ்வாதாரம் தேடி செல்கிறோம். ஆகையால் சின்னஞ் சிறு ஊர்கள் அழிந்து கொண்டே வருகிறது. கலாச்சாரம் மற்றும் நாகரிகமும் மாறிக்கொண்டே வருகிறது.

நம் புகழும் நம் ஊரும்

பெருந்தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் உலக அளவில் புகழ் பெற்றாலும் அவர்கள் வெற்றியை தமது வெற்றி போல் கொண்டாடுவது அவர்கள் பிறந்த ஊர் மட்டுமே. நாம் வயதாகும் போது நாம் வளர்ந்த இடத்துடன் ஒருவித உணர்ச்சிபூர்வமான தொடர்பு ஏற்படும். அதுதான் நமக்கும் நம் ஊருக்கும் இருக்கும் இணைப்பு.

முடிவுரை
ஊருக்கு உழைத்திடல் யோகம்
நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்

- என்றார் பாரதியார். எல்லோரும் தம் ஊருக்காக சிறு முயற்சிகள் எடுத்து உழைத்தால் ஊர் முன்னேற்றம் அடையும், அந்த நாடும் முன்னேற்றம் அடையும்.

நன்றி!

முன்னுரை:-

'படித்த இளைஞர்களே நீங்கள் உங்கள் கிராமங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள்' என்று ஆணையிட்டார் அண்ணல் காந்தியடிகள். கிராமங்கள் முன்னேறினால் தான் மக்கள் வாழ்வு வளம் பெறும் என்பது அவரது நம்பிக்கை. அவரது நம்பிக்கை மட்டும் அல்ல அதுதான் உண்மை. கிராமத்தின் உயர்வுதான் ஒரு நாட்டை வளர்ச்சி அடைய செய்யும் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

இந்தியாவின் நிலை:-

இந்தியா ஒரு வேளாண்மை நாடு. இங்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. ஒரு சில நகரங்களின் முன்னேற்றம் மிகப் பெரு முன்னேற்றம் ஆகாது. கிராமங்கள் முன்னேறினால் தான் பாரத பூமி பாரினில் பட்டொளி வீசிச் சிறக்க நன்னிலமாக முடியும்.

இந்தியாவின் முதுகெலும்பு:-

நம் நாட்டின் முதுகெலும்பான கிராமங்களில் இருந்து தான் ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறையிடத்திற்குத் தேவையான மூலப்பொருட்கள் கிடைக்கிறது. இன்று கற்றவர் அறிவியல் தொழில்நுட்பம், தகவல் துறை, விஞ்ஞானம் ஆகியவற்றில் வளர்ச்சி அடைவதால் நாடு உயர்வு அடைகிறது என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்களுக்கு கிராமங்களில் உழவர்கள் சேற்றில் கைவைக்கவில்லை என்றால் கற்றவர்கள் கூட சோற்றில் கைவைக்க முடியாது என்று புரிந்துக் கொள்ள வேண்டும். கிராமங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை அளிக்கிறது. இந்தியாவின் பொருளாதாரத்தின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை விவசாயத்தை அதிகம் நம்பியுள்ளது. சுற்றுச்சூழலில் சமநிலையை பராமரிப்பதிலும் கிராமம் முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமங்களில் பெரும்பாலும் மரங்கள், செடிகள் மற்றும் கண்ணுக்கு எட்டிய தூரம் பசுமையான வயல்கள் இருக்கும். அவை பல விலங்குகள், பறவைகள் தங்குமிடமாகவும் விளங்குகின்றது.

கிராமங்களின் இன்றைய நிலை:-

கிராம மக்கள் பெரும்பாலும் வேளாண்மைத் தொழிலையே நம்பி வாழ வேண்டியுள்ளது. இயற்கையின் கொடுமையால் வேளாண்மை தற்போது உழவர்களுக்குப் போதிய வசதிகளைக் கொடுப்பதாய் இல்லை. உழுபவன் கணக்குப் பார்த்தால் ஏரும், கலப்பையும் தான் மிச்சம் என்ற நிலைமை இன்னும் நீடித்து வருகிறது. இதனால் பெரும்பாலோர் நகரங்களுக்குச் சென்று வேலை பார்த்தும், அலுவலகங்களில் பணியாற்றியும் வாழ விரும்புகிறார்கள். மூட்டை தூக்கிப் பிழைத்தாலும் பரவாயில்லை என்று நினைப்பவரும் ஏராளம். கெட்டும் பட்டணம் சேர் என்ற பழமொழியும். இதனால் தான் பிறந்தது போல.

கிராமங்கள் முன்னேற திட்டங்கள்:-

வேளாண்மைக்கு தேவையான தண்ணீரை அரசு அணைகள் கட்டி தருவது, ஆறுகளை இணைப்பது போன்ற திட்டங்கள் மூலம் விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யலாம். கிராமங்களில் உழவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களால் கொள்ளை லாபம் பெறுபவர் நகரத்து வியாபரிகளே ஆவார். இத்தீமைகளில் இருந்து விடுபட தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமை. கிராம மக்கள் எதற்கெடுத்தாலும் நகரங்களை எதிர்பார்த்து ஓடாமல் அங்கு மருத்துவ வசதி, கல்வி வசதி, சுகாதார வசதி போன்றவைகளைச் செய்து தருதல் வேண்டும்.

முடிவுரை:-

கிராமம் இயற்கை வாழ்வுக்கும் அமைதியான வாழ்வுக்கும் ஆதாரமான இடம். கிராமங்களே நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம். அதனால் கிராமங்களை முன்னேற்ற படித்தவர்கள் பாடுபட வேண்டும். அவ்வாறு பாடுபட்டால் தான் பாரதப் பொருளாதாரம் சிறக்கும்.

நன்றி!

முன்னுரை

ஒரு நாட்டின் தனித்த அடையாளம் என்பது அதன் தேசியக் கொடியே ஆகும். ஒரு நாட்டின் தேசியக் கொடிக்குக் காட்டும் மரியாதை அந்த தேசிசத்திற்கே காட்டுவதாகும். தமிழகத்தில் ஆட்சி செய்த மூவேந்தர்களும் தங்களுக்கென்று தனிப்பட்ட கொடிகளைக் கொண்டு ஆட்சி செய்தனர்.

கொடியின் அமைப்பு

நம் தேசத்தின் விடுதலைக்குப் பிறகு மக்களாட்சியை உணர்த்தும்படி திகழ்வது நமது தேசியக்கொடி ஆகும். நம் தேசியக் கொடி மூன்று பங்கு நீளமும், இரண்டு பங்கு அகலமும் உடையது. மூன்று வண்ணங்கள் உள்ளன. ஒவ்வொரு வண்ணமும் நீண்ட செவ்வகப் பட்டையாக உள்ளன. மேல்புறம் காவி நிறமும், மத்தியில் வெள்ளை நிறமும், கீழ்பாகம் பச்சை நிறமும் கொண்டது. வெள்ளை நிறத்தின் மத்தியில் நீலநிற அசோகச் சக்கரம் உள்ளது.

வண்ணங்கள் போதிப்பவை

காவி நிறம் தியாக மனப்பான்மையின் அடையாளமாகும். தாய்நாட்டிற்காகத் தியாக மனப்பான்மையுடன் விளங்க வேண்டும் என்பதை அது உணர்த்துகிறது.

வெள்ளை நிறம் தூய்மையைக் குறிப்பதாகும். உடலளவில் மட்டுமன்றி மனதளவிலும் நாம் தூய்மையையும் ஒழுக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்பதை அது உணர்த்துகிறது.

பச்சைநிறம் பசுமையைக் குறிக்கிறது. நாட்டின் வளமையைக் காக்க வேண்டியது நம் கடமை என்பதை உணர்த்துகிறது.

அசோகச் சக்கரத்தில் 24 ஆரங்கள் உள்ளன. அவை தர்மங்களை உணர்த்துபவையாகும்.

விதிகள்

தேசியக்கொடியை அரசு அலுவலங்களிலும், பள்ளிக்கூடங்களிலும், நம் வீடுகளிலும் கூட ஏற்றலாம். சுதந்திர தினம், குடியரசு தினங்களில் பொதுவான இடங்களில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செய்ய வேண்டும். சூரிய உதயத்திற்கு பின் ஏற்றி சூரிய அஸ்தமனத்திற்கு முன் இறக்கிவிட வேண்டும். கொடியேற்றி பின் கொடி வணக்கம் செய்ய வேண்டும்.பேரணிகளில் வலது தோளிற்கு மேல் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

தேசிய அளவில் துக்கம் ஏற்பட்டால் மட்டும் தேசியக் கொடியானது அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும். கொடியை தலை கீழாகப் பறக்கவிடுதல் அதனை அவமதிப்பாகும். தேசியக் கொடியை மிதித்தல், கிழித்தல், மழையில் நனையவிடுதல், தரையில் போடுதல் கூடாது.

முடிவுரை

தேசியக்கொடியைக் காப்பது நம்மானத்தை காப்பது போன்றதாகும். எல்லா நாட்களிலும் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்த வேண்டும். தேசியக்கொடியின் பெருமையை உணர்ந்து அதைப்போற்றி மரியாதை செய்வோமாக.

Reference videos:

Reference tags:

Tamil katturai | தமிழ் கட்டுரை | katturai eluthum murai | katturai eluthuvathu eppadi | கட்டுரை எழுதுவது எப்படி | கட்டுரை எழுதும் முறை | Tamil katturaigal | தமிழ் கட்டுரைகள்