முன்னுரை

தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதே மொழி. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய தாய்மொழி மிகவும் இன்றியமையாததாகும். தாய்மொழிப் பற்றிய முக்கியத்துவத்தை இக்கட்டுரையில் காண்போம்.

மொழிப்பற்றிய விளக்கம்

மனிதன் தனது கருத்தைப் பிறருக்கு அறிவிக்க மொழியைக் கண்டுபிடித்தான். விலங்கில் இருந்து மனிதனை வேறுபடுத்துவது மொழியே. தெளிவான எண்ணங்களின் சரியான வெளிப்படை மொழி எனலாம். மொழியை நிலைபெறச் செய்ய எழுத்துகள் உருவாக்கப்பட்டது.

தாய்மொழி

நாம் பிறந்தது முதல் அறிந்து பேசி வரும் மொழியைத் தாய்மொழி என்கிறோம். உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் யாவரும்

தாய்மொழியிலேயே தம் கருத்துகளை நூலாகப் படைத்துள்ளார்கள்.

தாய்மொழிப் பற்று

அனைவரும் தாய்மொழிப் பற்று கொண்டு வாழ வேண்டும். ஒரு மொழி வாழ்ந்தால், அம்மொழி பேசும் இனம் வாழும், மொழி வீழ்ந்தால் அம்மொழி சார்ந்த இனமும் வீழும். பெற்ற தாயைக் காட்டிலும் உற்ற தாய்மொழி உயர்ந்ததாகும். தன்னைப் பழித்தவனைத் தாய் தடுத்தால் விட்டுவிடு, தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே, என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.

தாய்மொழிப் பற்றுக் கொண்ட சான்றோர்கள்

பன்மொழி புலவர்களாய் திகழ்ந்தோரெல்லாம் தாய்மொழிப் பற்றுக் கொண்டவர்களாக விளங்கினர். அண்ணல் காந்தியடிகள் தன் வாழ்க்கை வரலாற்றை தம் தாய்மொழியில் எழுதினார். ஆங்கிலத்தில் எழுதும் ஆற்றல் பெற்ற தாகூர் கீதாஞ்சலியை தம் தாய்மொழியான வங்க மொழியில் எழுதிய பின்னரே ஆங்கிலத்தில் எழுதினார்.

நமது கடமை

ஒரு மொழியை வாழ்வாங்கு வாழச் செய்யும் கடமை அதனைப் பேசும் ஒவ்வொருவருக்கும் உண்டு. எனவே நம் தாய்மொழியைக் காப்பது நமது கடமையா

முடிவுரை

நாம் ஒவ்வொரு வரும் தாய்மொழிப் பற்றுடன் இருந்து எல்லாத் துறைகளிலும் தமிழ் ஏற்றமுறச் செய்ய வேண்டும் . எனவே நம் தாய்மொழியாம் தமிழை காத்து வளர்த்திட வேண்டும்.

தமிழ் என்பது தாய்மொழி
முன்னுரை

அறிதலுக்கும், தெரிதலுக்கும் புரிதலுக்கும் உணர்தலுக்கும், ஆராய்தலுக்கும் காரணமான உயிர் ஊடகம் மொழிதான். மொழியில்லாத வாழ்க்கை ஒளியில்லாத வாழ்க்கை. எல்லா மொழிகளின் தாய் தமிழ் மொழி என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பழமையான மொழி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுப் பெற்று பெருமையுடைய மொழி தமிழ் மொழி மட்டுமே . கல்வெட்டுகளில் அதிகம் இடம்பெற்றுள்ள மொழி தமிழ்.உலகில் முதல் முதலாக தோன்றிய மொழி தமிழ் மொழியே என்பது பல்வேறு மொழியியல் அறிஞர்கள் கூற்றாகும்.

தமிழின் சிறப்பு

தாய்மொழி என்பது வாழ்வின் வழியைக்காட்ட வேண்டும். தமிழ் மொழியானது மனித வாழ்க்கையை அகம், புறம் என இருவகைப்படுத்தி இலக்கணங்கள் மற்றும் இலக்கியங்கள் கொண்டு உள்ளது செந்தமிழ், கொடுந்தமிழ், முத்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், இயற்றமிழ் தனித்தமிழ் நற்றமிழ் ஆட்சித்தமிழ், அறிவியல் தமிழ், கொங்கு தமிழ் என பல பல பரிமாணங்களில் தமிழ்மொழி சிறப்பு பெற்று விளங்குகிறது.

காலங்கள் கண்ட தமிழ்

கால வெள்ளத்தை கடக்க முடியாமல் எத்தனையோ மொழிகள் அழிந்துவிட்டன. தமிழ் மொழி அழியாத மொழியாக சிதைமாத மொழியாக அன்று முதல் இன்று வரை ஒரே நிலையில் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. கல்வெட்டிலிருந்து கணினி வரை பார்த்த மொழி தமிழ் மொழி மட்டுமே.

முடிவுரை

எத்திசையும் புகழ் மணக்க எல்லோராலும் விருப்பப்படும் மொழியான தமிழ்மொழி, இந்த நூற்றாண்டிலும் இளமையாகவும் இனிமையாகவும் உயிர்ப்போடும் இருக்கிறது. ஆகையால் உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியே எல்லா மொழிகளின் தாயாகும்.

முன்னுரை

ஒருவனின் அழியாத செல்வம் என்றால் அது அவனுடைய கல்வி ஆகும். காலங்கள் மாற மாற கல்வியின் நிலையும் மாறிக்கொண்டே இருக்கிறது. இன்றைய கல்வியின் நிலையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

கல்வியின் சிறப்பு

கல்வி என்பது வளர்ந்து கொண்டு இருக்கும் ஒரு சமுதாயத்தின் அடித்தளமாகவும் தனிமனிதனின் வெற்றிக்கான முதல் படிக்கல்லாகவும் இருக்கிறது. குருக்குலம் சென்று இயற்கையோடு படிக்கப்பட்ட கல்வி இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் கல்வி நவீன முறையில் கற்கப்படுகின்றன. பல மாற்றங்களை கண்டாலும் கல்வி ஒரு மனிதனின் அறியாமையை அகற்ற சிறந்த கருவியாகும்.

நல்ல மாற்றங்கள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு. நமக்கு அறியாத பல விஷயங்களை இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் மாணவர்கள் எளிதில் கற்க முடிகிறது. இதனால் மாணவர்களின் படைப்பாற்றல் உயர்கிறது. உலக சிந்தனையாளர்கள் பலர் தம் நாட்டை உயர்த்த கல்வி கொள்கையில் புதுமையை நடைமுறைப்படுத்துகிறார்கள்.

அவலநிலை

சமூக, பொருளாதார வேறுபாடுகள் காரணமாக அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகள் கிடைப்பதில்லை. கல்வி மாணவர்களின் திறமையை வெளிக் கொண்டு வருவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் ஆனால் இன்றைய கல்வி முறையில் மாணவர்கள் பெற்றோரின் கட்டாயத்திலும் சமுதாயத்தின் கட்டாயத்திலும் மதிப்பெண்களுக்காக படித்து வருகிறார்கள். சில படிப்புகள் எட்டா உயரம் சென்றுவிட்டது. திறமை இருந்தாலும் பணம் இல்லாததால் அவற்றை படிக்க முடியவில்லை.

தீர்வுகள்
  1. அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும்.

  2. அரசு பள்ளிகளில் தரத்தை மேம்படுத்த வேண்டும்.

  3. ஒரு சிறந்த ஆசிரியரால் மட்டுமே நல்ல கல்வியை தர முடியும். ஆகையால் அரசு சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

முடிவுரை

கரையில்லாத கல்வியை இலவசமாகவும் சமமாகவும் அனைவருக்கும் தந்து கல்வி வரலாற்றில் புரட்சி செய்தவர் நமது பெருந்தலைவர் காமராசர். அவரை போல் நமது இன்றை அரசாங்கமும் கல்வி முறையில் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து ஒரு வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும். நாட்டிற்கு நிலையான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக குழந்தைகளுக்கு சரியான கல்வி வழங்கப்பட வேண்டும்.

கல்வி
முன்னுரை
கல்வியின் பொருள்
கல்வியின் சிறப்பு
கல்வியும் அறிஞர்களையும்
கல்வியின் பயன்
முடிவுரை
முன்னுரை

கல்வி என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையையும் சமூகத்தையும் வடிவமைக்க தேவையான ஒரு கருவி. அத்தகைய கல்வியைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

கல்வியின் பொருள்

கல்லுதல் என்றால் தோண்டுதல் என்று பொருள். மனிதனின் உள்ளத்தில் புதைந்து கிடக்கும் அறியாமையைத் தோண்டி எடுத்து விட்டு, அறிவால் நிரப்புவதே கல்வி என்பர் அறிஞர்கள்.

கல்வியின் சிறப்பு

பூமியில் வாழும் மற்ற உயிரினங்களிலிருந்து நம்மை வேறுபடுத்துவது கல்விதான். ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வியானது ஏழு பிறப்பிலும் தொடர்ந்து வந்து உதவும். வெள்ளத்தால் அழியாது, தீயினால் வேகாது, கள்வரால் எடுக்க முடியாது கொடுத்தாலும் குறையாதது கல்வி செல்வம் மட்டுமே. கல்வி கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பும் பெருமையும் வந்து சேரும்.

கல்வியும் அறிஞர்களும்

கல்வியால் உயர்ந்தவர்கள் பலர். அம்பேத்கர், திருவள்ளுவர். பாரதியார் முதல் அப்துல் கலாம், கல்பனா சால்வா, சுந்தர் பிச்சை வரை அனைவரும் கல்வியில் சிறந்து விளங்கி உலகப் புகழ் பெற்றவர்கள்.

எதையும் பழித்து கூறாத திருவள்ளுவர். கல்வியை கற்காதவர்களின் கண்களை புண் என்று இழித்து கூறியுள்ளார்.

அன்னதான சத்திரங்கள் ஆயிரம் கட்டுதலை விட ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் சிறந்த அறம் என்றார் பாரதியார்.

உலகத்தை மாற்ற நீங்கள் பயன்படுத்தக் கூடிய மிக சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி, என்றார் அப்துல்கலாம்.

கல்வியின் பயன்

கல்வி என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகவும் அவசியமானது. கல்வியால் மட்டுமே ஒரு தனிமனிதன் பலவற்றை சாதிக்க முடியும். மக்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்து கொள்ள கல்வி உதவுகிறது. அடிப்படை எழுத்து அறிவிலிருந்து ஆழமான அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கருத்துக்கள் வரை கல்வி ஒரு மனிதனுக்கு பிரச்சனைகளைத் தீர்க்கவும் அவன் உலகில் வாழவும், வேலைகளைச் செய்ய தேவையான கருவிகளையும் வழங்குகிறது. எனவே ஒரு நாட்டில் கல்வித்தரம் உயர்ந்தால் மட்டுமே அந்நாடு உயரும்.

முடிவுரை

நாடும், வீடும், நாமும் நலம் பெற ஒரே வழி நல்லறிவு பெறுவதே. அதற்குக் கல்வி கற்றலே சிறந்த வழியாகும்.

கல்வி கற்போம் ! கற்பிப்போம்!

நன்றி!

பெண் கல்வி
முன்னுரை:-

'மாதர்தமை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்றார் புரட்சிக் கவிஞர் பாரதியார். இந்த மடமை நாட்டிவிருந்து அகல்வதற்குச் சரியான தீர்வு பெண் கல்வியே ஆகும். அதற்காக மேற்கொள்ளப்பட்ட செயல் பற்றி இங்குக் காண்போம்.

பெண்கல்வியின் தேவை:-

கல்வியைக் கண்ணாகப் போற்றும் நம் நாடு கல்விக்குக் கடவுளாகக் கலைமகளையே கொண்டிருந்தும் பெண் கல்வி முன்னேற்றத்தில் பின்தங்கிய நிலையிலே பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தது. ஔவையார், கோப்பெருந்தேவியார், காக்கைப்பாடினியார், பொன் முடியார், ஒக்கூர், மாசத்தியார் போன்ற பெண்பாற் புலவர்கள் வாழ்ந்து கல்வி செழித்த சங்ககாலத் தமிழகம் தாழ்ந்தது ஏன்? என்பது வியப்பாகவே உள்ளது.

பெண் கல்விப் பின்னேற்றம்:-

இடைக்காலத்தில் சமண, பௌத்த சமயங்கள் பெண்களை இழிபிறவிகளாகக் கருதியதால் பெண் கல்வியில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதே கொள்கையையே பின்பற்றி வந்த பெருமக்கள் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்றே வாதம் பேசி வந்தார்கள். அதனால் பெண்கள் புறம் தள்ளப்பட்டார்கள், இழிநிலை உற்றார்கள்.

பெண் கல்வியின் சிறப்பு:-

பெண்கள் கல்வி அறிவு பெற்றால் தம் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவார்கள். குடும்பத்தைத் திறம்பட நடத்துவார்கள். வீட்டு உபயோகப் பொருளகளாம் அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி நன்மை காண்பார்கள். பொருளாதாரம் அறிந்து சிக்கன வாழ்க்கை மேற்கொள்ளுவார்கள். பொழுதைப் போக்காமல் சம்பாதித்து வீட்டைக் காக்கவும் தன் காலில் நிற்கவும் சக்தி பெறுவார்கள்.

நாட்டில் பெண்கல்வி:-

இன்று கல்வியில் பெண்கள் முன்னிலை வகித்து வருகிறார்கள்.

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்"என்றபடி நாட்டுத் தலைவர்களாகவும், சிறந்த மருத்துவர்களாகவும், ஆட்சியாளர்களாகவும், அரசியல் மேதைகளாகவும், சட்ட வல்லுனர்களாகவும் - பெண்கள் திகழ்கிறார்கள். பெண்களுக்கு என்று தனிப் பள்ளிகளும், கல்லூரிகளும் ஏற்பட்டுள்ளன.

முடிவுரை:-

'மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்மா',என்று கவிமணி கண்ட கனவு நனவாகிக் கொண்டு வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இந்நிலை மேலும் வளர்ந்து நாட்டில் பெண் சிசுக் கொலையும் வரதட்சணைக் கொடுமையும் நிகழாதவாறு பார்த்துக் கொள்ளுவது அறிவறிந்தோர் செயல் ஆகும்.

முன்னுரை

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்கிறது பொன்மொழி ஒன்று. கல்வி தொழிற்கல்வியாக அமைந்தால் படித்த உடனேயே நம்மால் பணியில் ஈடுபட முடியும். மிகுந்த பயனைத் தரும் தொழிற்கல்வியின் சிறப்பைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

ஏட்டுக்கல்வி

பல ஆண்டுகளாகவே நம் நாட்டில் இருந்துவரும் பிரச்சனை வேலையில்லாத் திண்டாட்டம் ஆகும். இதன் அடிப்படை காரணம் என்ன என்று பார்த்தால் அது ஏட்டுக்கல்வியே ஆகும்.ஏட்டுக்கல்வி கற்றவர்கள் உடம்பில் அழுக்கு படாத பணியாக எதிர்பார்க்கிறார்கள்.

தொழிற்கல்வி

தொழிலில் எந்த தொழிலும் தாழ்ந்தது இல்லை இதை இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும். அவரவர் ஆர்வத்திற்கும் திறமைக்கும் ஏற்ப தொழிற்கல்வியைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு கற்றுக்கொண்டால் பின்னாளில் வேலையில்லாத் திண்டாட்டம் வராது.

தொழிற்கல்வியின் சிறப்பு

தலைவர்களும், சாதனையாளர்களும் ஏட்டுக்கல்வியுடன் மாணவர்கள் கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்கள் நம் தேசத்தந்தை காந்தியடிகள் பாரிஸ்டர் பட்டம் பெற்றும் இராட்டினம் சுற்றி நூல் நூற்கும் கைத்தொழிலைச் செய்து வந்தார். தொழிற்கல்வியாது கற்பவர்க்கு மட்டும் வேலை வாய்ப்பைத் தருவதில்லை. கூடவே, பலருக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது. ஒரு நாட்டின் செல்வச் செழிப்பு அதன் தொழில் வளத்தைப் பொறுத்தே அமைகிறது. அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகிறது. அதனால் தொழிற்கல்வியானது தனி மனித முன்னேற்றத்தையும் தேசத்தின் முன்னேற்றத்தையும் ஒருங்கே இணைந்து தருகின்றது என்பதில் ஐயமில்லை.

முடிவுரை

இன்று தொழிற்கல்வி கற்க பல கல்வி நிறுவனங்கள் தோன்றிய வண்ணம் உள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி நாம் தொழிற்கல்வி கற்றால் நாம் செழிப்படைவதோடு, நாட்டையும் முன்னேற்றப் பாதையில் செலுத்த இயலும்.

குழந்தை பருவத்தில் இருந்தே எழுதுதல் என்பது மனிதனின் அன்றாட வாழ்க்கையில் ஒரு செயலாகும் எழுதுதல் என்பது வெறும் செயலல்ல, அது மனிதர்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கான ஒரு அடிப்படையான கருவி ஆகும்.பலர் தங்கள் எண்ணங்களை எழுதியதால் தான் இன்று நமக்கு வரவாறு, பாரம்பரியம், கலாச்சாரம் கலைகள், அறிவியல் போன்ற பல உண்மைகள் தெரியவந்துள்ளது.

நம் தாய்மொழியான தமிழையும், ஆங்கிலத்தையும் வாசிக்கவும் எழுதவும் நமக்கு பள்ளியிலே கற்று தரப்படுகிறது. எழுதுவது நமது பள்ளிப் பருவத்திலே முடிவு பெறுவதில்லை. எதிர்காலத்தில் நமது வாழ்க்கை நம்மை எங்கு அழைத்துச் சென்றாலும் எழுதுவது முக்கியத்துவமானது. அனைத்து தொழில்களிலும், தகவல் தொடர்புக்கும் எழுதுவது மிகவும் அவசியமானது.

எழுதுவது என்பது வெறும் காகிதத்தில் வார்த்தைகளைப் போடுவது மட்டுமல்ல, நம் சிந்தனையை வளர்க்கும், எண்ணங்களைத் தெளிவாக்கும். இங்கு எழுதுதல் என்பது நம் பணிகளுக்காக எழுதுவது மட்டுமல்ல, நம் தனிப்பட்ட வாழ்க்கையில் தினமும் எழுதுவதும் தான். என்ன எழுதுவது? தினமும் நாட்குறிப்பேட்டை எழுதலாம், நமக்கு கிடைத்த வெற்றிகளை எழுதலாம், நம் நண்பர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு கடிதங்கள் எழுதலாம், அல்லது நமது வாழ்க்கையில் கிடைத்த ஒவ்வொன்றுக்கும் நன்றி தெரிவித்து எழுதலாம். தினமும் நாம் எழுதுவது நம் வாழ்க்கையில் மிக முக்கியமான மாற்றத்தை உருவாக்கும்.

தினசரி எழுதுவது புதிய யோசனைகளைக் கொண்டு வர தூண்டும். நாம் தனிப்பட்ட வாழ்க்கையில் எழுதியதை சிறிது காலம் கழித்து அதை படிக்கும் போது அது நமக்கு மகிழ்ச்சி அளிக்கும். நம் வாழ்க்கையில் நடந்த மாற்றத்தை பிரதிபலிக்கும். நாம் ஆயிரம் எண்ணங்களை ஆயிரம் விதமாக மனதில் நினைத்தாலும், அதில் ஒரு எண்ணத்தை எழுதும் போது நமக்கு கிடைக்கும் தெளிவு அதிகம். தூங்கும் முன் குறைந்தது ஐந்து நிமிடங்கள் கைப்பட எழுதுவது தூக்கம் வரவழைக்க உதவும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்

"மக்களை விட காகிதத்திற்கு அதிக பொறுமை உள்ளது", என்கிறார் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆன் ஃபிராங்க். ஆம் நம் வாழ்க்கையில் நிகழும் கசப்பான நிகழ்வுகளை எழுதும் போது நம்மில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் வெளியேறி மன அழுத்தத்திலிருந்து விடுபடமுடியும், மகிழ்ச்சியாக வாழ முடிவும்.

இன்று டிஜீட்டல் உலகில் நாம் கையால் எழுதுவது குறைந்து கொண்டே போகிறது. இதனால் மனிதனின் யோசனை திறனும் தன் எண்ணங்களை வெளிப்படுத்த தெளிவும் குறைந்து கொண்டே வருகிறது. ஆகையால் நம் வாழ்வில் எழுதுதல் நமக்கு அளிக்கின்ற மகிழ்ச்சியையும் முக்கியத்துவத்தையும் நாம் உணர்ந்து அதை மேம்படுத்த வேண்டும்.

Reference tags:

Tamil katturai | தமிழ் கட்டுரை | katturai eluthum murai | katturai eluthuvathu eppadi | கட்டுரை எழுதுவது எப்படி | கட்டுரை எழுதும் முறை | Tamil katturaigal | தமிழ் கட்டுரைகள்

Reference videos: