முன்னுரை:-

அறிவியல் உலகம் நமக்கு அளித்துள்ள பெருங்கொடைதான் கணினி. சுமைகளைச் சுகமாக்கித் தரும் அதிசயக் கருவி. நினைவாற்றலின் தொகுப்பு தான் கணினி. நொடிப் பொழுதில் உலகத்தையே இருக்கும் இடத்திலிருந்து தொடர்பு கொண்டு சாதனை படைத்திடக் களம் அமைத்துக் கொடுத்துள்ள உறவுபாலம்தான் கணினி. நமக்கு எங்கும் பிரகாசமாய் ஆனந்த வாழ்வை தந்துள்ளது கணினி என்றால் மிகையாகாது.

முக்காலம் உணர்த்தும் முடிமன்னன் கணினி:-

அறிவியலின் அற்புதப் படைப்பான கணினி இன்று மனித மூளையையும் விஞ்சிவிட்டது. கண் இன்றியமையாத ஓர் உறுப்பு என்போம். கணினி கண்ணினும் மேலாகச் செயல்படுகிறது. கடந்த காலத்தகவல்களைத் தன்னுள் தங்க வைத்தும் நிகழ்காலத் தகவல்களை அவ்வப்போது கொடுத்தும் வருங்காலத்துக்கு வேண்டியவற்றை உருவாக்கியும் கணினி செயல்படுவதால் முக்காலத்தையும் அது தன்னுள் கொண்டு விளங்குகிறது எனலாம்.

தோற்றம்:-

கணினி முன்னோடி எனப்படுவது அபேக்ஸ் எனப்படும் சீனர்களின் அறிவியல் சாதனமாகும். மின்னனு கணினியை டாக்டர் ஆலன் எம் டூரிங் 1824 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். ஹார்வர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் ஹோவன்ட் தற்போதையை கணினியை 1944 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். ஆனால் சூப்பர் கணினியை 1976 ஆம் ஆண்டு அமெரிக்கரான வானடேஸஸ் உருவமைத்தார்.

உலகையே ஆட்சி செய்யும் வல்லமை:-

அறிவியல், கணிதம், மருத்துவம், வணிகவியல் என அனைத்துத் துறைகளிலும் பயன்படும் நிலை கணினிக்கு உள்ளது. நூறு மில்லியன் கணக்குகளைச் சரிபார்க்கும் அளவிற்கு கணினி வளர்ந்துள்ளது. மாற்ற இயலாத நாழிகை, நிமிடம், மணி, நாள், வாரம், வருடம், ஏன் ஆயுள் இவைகளையெல்லாம் தன்னுள் அடக்கி இவ்வுலகையே கைக் கொள்ளும் திறன் கணினிக்கு உண்டு.

கணக்கிட இயலாதவற்றையும் கணக்கிடும் கணினி:-

கணக்கிட இயலாதவற்றையும் கணக்கிடும் கணினி, ஏவுகணைகளையும், செயற்கைக் கோள்களையும் ஓரிடத்தில் இருந்தபடியே கட்டுப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இணையம் வழியாக மின் அஞ்சல் அனுப்பவும், நேரில் உரையாடவும் பயன்படுத்துகிறோம்.

பயன்கள்:-

மருத்துவத்தில் அறுவைச் சிகிச்சையை நேரில் திரையில் பார்க்கும் வாய்ப்பு வந்துவிட்டது. உடலின் உட்பகுதியைத் துல்லியமாகக் கணக்கிட உதவுகின்றது. வேளாண்மைத் துறையில் மண்ணின் தரம் அறியவும் உரங்களின் வேதியியல் கலவை நுட்பம் உணரவும் வானிலை அறிந்து செயல்படவும் கணினி உதவுகின்றது. காவல் துறையில் தடயங்களை வைத்து உருவங்களை உருவாக்கி குற்றவாளிகளைக் கண்டறியும் வகையில் பெரிதும் உதவுகின்றது. சிறைச்சாலை கண்காணிப்பிற்கும் கணினி துணைபுரிகின்றது.

முடிவுரை:-

21ம் நூற்றாண்டில் வானொலிப் பெட்டியைப் போல் எல்லா இடங்களிலும் கணினியைப் பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது. வாழ்வின் பயணத்தைச் சுகமாக்கி பெரும் பயன் விளைவிக்க வந்த அட்சயப் பாத்திரமாம் கணினியைப் போற்றிச் செயல்படுத்துவோம்.

நன்றி!

தற்காப்பு கலையில் பெண்கள்
முன்னுரை:-

இயற்கையாகவே பெண்கள் மிகவும் மென்மையானவர்கள். பெண்கள் இந்த உலகத்தை அணுக தற்காப்பு கலை மிகவும் அவசியமானது. தற்காப்பு கலையில் பெண்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தற்காப்பு கலை:-

தற்காப்புக்காக ஒருவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள பிரயோகிக்கும் கலை. இதில் ஆயுதத்துடன் அல்லது ஆயுதமில்லாமலும் இருக்கலாம். தற்காப்புக் கலை என்பது ஒவ்வொருவருக்கும் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய முக்கிய கலையாகும்.

தற்காப்பு கலைகளின் வகைகள்:-

அடிமுரை, கூட்டு வரிசை, வர்மக்கலை, அடிதடி, மல்யுத்தம், களரிபையட்டு, உள்ளிட்ட பல்வேறு தற்காப்புக் கலைகள் உள்ளன. மற்றும் கராத்தே, ஜூடோ, குங்-ஃபூ, குத்துச்சண்டை, கபோயிரா போன்ற வெளிநாடு தற்காப்பு கலைகள் உள்ளன. இதில் கராத்தே மிகவும் பிரபலமானது.

பெண்களுக்கு அவசியம்:-

அன்று அரசிகள் தங்களையும் தங்கள் நாட்டையும் எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்ள தற்காப்பு கலைகளைப் பயின்றனர். இன்று பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள ஏதேனும் ஒரு தற்காப்பு கலையை பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

தற்காப்பு கலையை கற்று கொள்ளும் பெண்களுக்கு அந்த கலை ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கிறது. ஆகையால் வாழ்க்கை என்னும் போராட்டத்தில் அவர்களால் எளிதில் வெற்றிப் பெறமுடியும். பெண்கள் வீட்டு வேலைகளையும் அலுவலக வேலைகளையும் பார்ப்பதால் மன உளைச்சலை சந்திந்து வருகின்றன. தற்காப்பு கலையை கற்றுக்கொண்டால் தவறான பாதைக்கு செல்லும் எண்ணங்கள் வராது. உடலும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த கலைகள் மூலம் பெண்கள் அவர்களது வாழ்க்கையை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.

பயன்கள்:-

தற்காப்பு கலை பயில்வது மூலம் முறையான பயிற்சிகளை நாம் பெற முடியும். அத்துடன் எதையும் முறையாகவும் காலத்தோடும் செய்து முடிக்கும் பக்குவத்தை நாம் இதன் மூலம் அடைய முடியும். மேலும் இத்துடன் நமது பாரம்பரியக் கலையை காக்கவும் உதவுகிறது.

முடிவுரை:-

இத்தனை நன்மைகளை தரக்கூடிய தற்காப்புக் கலையை நாம் கற்றுக் கொள்வது அவசியமாகும். மற்றும் நாம் கற்ற கலையை ஒரு நாளும் தவறான செயல்களில் பயன்படுத்தக் கூடாது.

நன்றி!

tharkappu kalai tamil katturai | importance of martial arts | தற்காப்பு கலையில் பெண்கள்
tharkappu kalai tamil katturai | importance of martial arts | தற்காப்பு கலையில் பெண்கள்
முன்னுரை

கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம் நிரம்பியவரை சான்றோர் என்பர் . இதில் ஒழுக்கம் இல்லாவிடில் அவன் பெற்றுள்ள கல்வியும் அறிவும் அவனுக்கு ஒரு பயனும் அளிக்கப் போவதில்லை. ஒழுக்கமே ஒரு மனிதனுக்கு உயர்வு தரும். போதைக்கு அடிமையாகுவது ஒழுக்கம் கெட்ட செயலாக கருதப்படுகிறது. போதை என்பது அழிவின் பாதையே என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

போதை என்னும் பேய்

தற்போது வயது வரம்பு இன்றி சமுதாயத்தில் போதை பழக்கம் வேரூன்றியுள்ளது. இந்தியா மட்டுமன்றி உலக நாடுகள் பலவற்றிலும் போதைப் பொருள்கள் கள்ளச் சந்தையில் விற்றகப்படுவதும், அவற்றைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போதை பொருட்களில் மது, ஹெராயின், போதை ஊசி, கஞ்சா, புகையிலை, பான்மசாலா இன்னும் பல அடங்கும். தற்காலிக மகிழ்ச்சிக்காக மற்றும் சிலரின் தவறான நட்பு போன்ற பல காரணங்களால் போதை பழக்கம் ஏற்படுகிறது.

போதையால் ஏற்படும் தீமைகள்

போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் எண்ணற்றவை. மக்கள் சமுதாயத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் எதிராக உலகளாகிய அளவில் எழுந்திருக்கும் பிரச்சனைகளில் இதும் ஒன்று. போதைப் பொருள் எடுத்துக் கொள்பவர்கள் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதய பிரச்சனைகள் அல்லது புற்றுநோய் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். சிறிது சிறிதாக போதைப் பழக்கமானது அதிகரித்து அந்த அற்ப இன்பத்தைப் பெற்றுக் கொள்ள திருடுதல், பொய் பேசுதல் மற்றும் தவறான செயல்களை செய்யத் துணிந்து விடும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது. போதையின் கோரப் பிடியில் அகப்படுபவர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு பெண்களின் வாழ்க்கையை சிதைத்துவிடுகிறார்கள்.

சிதையும் குடும்பங்கள்

போதை தனிமனிதனை மட்டும் பாதிக்கும் பழக்கம் என எண்ணிவிட இயலாது. இதனால் அவரின் குடும்பமும் பாதிக்கப்படுகின்றது. பெற்றோர்கள் போதைக்கு அடிமையாகி தங்கள் பிள்ளைகளுக்கு தவறான எடுத்துக்காட்டுகளாக வாழ்கின்றனர். போதைப் பொருட்களால் அவர்களுக்கு உடல்நலம் சரியில்லாமல், வேலை செய்ய முடியாமல் அவர்கள் குடும்பம் வறுமைக்கு தள்ளப்படுகின்றனர். சிலர் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து இளம் வயதில் இறந்து அவர்கள் குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

போதைக்கு தீர்வு

ஒருவர் ஏன் போதை மருந்துகளை தேடிப் போகிறார் என்பதற்கு பின்னால் உள்ள அறிவியல் ரீதியான தகவல்கள் இல்லை என்றாலும் இதற்கு சில மன ரீதியான அழுத்தங்கள் காரணமாக உள்ளன. பிரச்சனைகள் மற்றும் குறைகளை போதைப் பழக்கத்தால் மறந்து நிம்மதியாக இருக்கலாம் என்று பலர் தவறாக கருதுகிறார்கள். மன நிம்மதியும், மன தைரியமும் பெற நம் நாட்டின் பாரம்பரியமான யோகா, மூச்சுப்பயிற்சி, தியானம் அல்லது உடற்பயிற்சி, விளையாட்டு என்று நல்ல பழக்கத்தை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். போதையால் ஏற்படும் தீமைகள் அதன் தொடர் தீங்கு விளைவுகள் குறித்து மக்களுக்கு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

முடிவுரை

ஒரு நாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய இளைஞர்கள் இன்று போதைப் பொருள்களை உட்கொண்டு தள்ளாடுகிறார்கள். இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத் தலைவர்களை இழந்து கையை விரிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆகையால் நாட்டை அழிவின் பாதைக்கு எடுத்துச் செல்லாமல் மக்களுடன் சேர்ந்து அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னுரை

இன்று உலகம் விரல் நுனிக்குள் வந்துவிட்டது என்று கூறலாம். இதற்கு முக்கிய காரணம் இணையம் என்கிற இன்டெர்நெட். நம் வாழ்க்கையில் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட இணையத்தையும் அதை கையாளும் இளைஞர்களைப் பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.

இணையத்தின் வளர்ச்சி

சில ஆண்டுகள் முன் நம் இணைய தேடல்களுக்காக பிரவுசிங் சென்டர்களுக்கு சென்றோம். ஆனால், இப்போது நம் கையடக்க அலைபேசிலேயே இணைய வழி சேவைகளை பயன்படுத்துகிறோம். சமூக வலைதளங்கள் பெருகிவிட்டன. கல்வி, மருத்துவம், வணிகம், வங்கி, தொழிற்சாலை போன்ற எல்லாதுறைகளிலும் இணையம் இன்றியமையாததாக மாறியுள்ளது.

இணையத்தின் நேர்மறைகள்

இணையத்தைப் பற்றிய நன்மைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இணையத்தில் தெரிந்து கொள்ள இயலாத விஷயங்களே இருக்க முடியாது. உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அந்த நபரை, இணையத்தின் வாயிலாக நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்க முடிய முடியும், பேச முடியும். பொது அறிவை வளர்த்து கொள்ளவும், பல திறன்களை கற்றுக்கொள்ளவும் இணையம் உதவுகிறது.

இணையமும் இளைஞர்களும்

தற்போதைய இளைய சமுதாயம் இணையம் என்னும் மாய வலைக்குள் சிக்கி மூழ்கிக் கொண்டிருக்கிறது. இணையம் என்பது பரந்து விரிந்த விஷயமாக இருந்தாலும் அதன் ஒரு புள்ளிக்குள்ளேயே இளைய சமுதாயம் சுற்றி சுற்றி வருவதால் அவர்களின் சிறகுகள் பறப்பதற்கு பதிலாக முடமாக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் இணையம் என்னும் போதைக்கு அடிமையாகி விட்டனர். பேருந்துக்காக காத்திருக்கும் அந்த குறுகிய காலத்தில் கூட வெளி உலகை ரசிப்பதில்லை. அப்போதும் அவர்கள் தங்கள் கைபேசியில் மூழ்கி திளைக்கிறார்கள்.

இணையத்தின் எதிர்மறைகள்

இப்பொழுது இளைஞர்கள் பலர் நேரத்தை இணையத்தில் தொலைத்துவிட்டு வாழ்க்கையில் தோற்கிறார்கள். வெளிப்புற உலகத்தை மறந்து இணையத்தில் வாழ்வது மன அழுத்தம் மற்றும் உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இணையத்தில் வரும் ஆபாசக் காட்சிகளைப் பார்த்து இளைஞர்கள் பாலியல் தூண்டலுக்கு ஆளாகின்றனர்.

முடிவுரை

இணையம் தகவல் தொடர்புக்கும், மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பயன்படும் என்ற எண்ணம் தற்போது மறுக்கப்பட்டு இளைய சமுதாயத்தின் சீரழிவுக்கே இதுதான் காரணமாக உருமாறிவிட்டது. இணையத்தை அளவோடும், தெளிவாகவும் பயன்படுத்தவேண்டும்.

முன்னுரை:-

மாதர் தமை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்.

என்ற பாரதியின் புரட்சி வரிகளில் பீறிட்டு எழுவது பெண்விடுதலையாகும். பெண்டிர் விடுதலை மூலமே உண்மையான சுதந்தரத்தைக் காண முடியும் என்று கருதினார் பாரதி. அவர் கண்ட பெண் விடுதலை பற்றி இங்குச் சிறிது காண்போம்.

தாய்மை போற்றிய பாரதி:-

பெண் விடுதலையில் நாட்டம் கொண்ட பாரதி தாய்நாட்டைப் பெண்மை வடிவில் பாரத தேவியாக வணங்கிப் போற்றினார்.

தாய்த்திரு நாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா

என்பது அவர் குழந்தைகளுக்குக் கூறும் அறிவுரை.

புதுமைப் பெண் :-

பாரதி எதிர்கால பாரதத்தை உருவாக்கும் புதுமைப் பெண்ணைப் படைத்து மகிழ்ந்தார்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டும் அறிவினில் ஆளணுக்கிங்கே பெண் இளைப்பிலை காணென்று கும்மியடி

என்று பெண்கள் இனி மேற்கொள்ள வேண்டிய பணிகளைக் கோடிட்டுக் காட்டி வீறு கொள்ளச் செய்தார்.

ஆணும் பெண்ணும் சமம்:-

"பாஞ்சாலி சபதம்", பெண் விடுதலை பேசும் பாரதியின் புதுமைப் படைப்பாகும். காவியம் முழுவதுமே பெண் விடுதலையையே வற்புறுத்துகிறது. கண்ணனைத் தாயாகவும், கண்ணம்மாவை இனிய காதலியாகவும் போற்றிப் பெண்மையின் பெருமையைப் பறை சாற்றும் காவியம் கண்ணன் பாட்டு. அவரது உரை நடை நூல்களில் பெண் முன்னேற்றம் பற்றிய கருத்துகள் ஏராளம். பிறப்பில் ஆண்களும் பெண்களும் இணையானவர்களே என்பது பாரதியார் கொள்கை. கற்பென்று சொன்னால் அதனை இருகட்சிக்கும் பொதுவில் வைப்போம் என்று பேசும் புரட்சியாளர் பாரதி ஒருவரேயாவார்.

விந்தை மனிதர் வீழ்க:

வீட்டுக்குள் பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதரை தலை கவிழச் செய்யும்படி நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும், ஞானச் செருக்கும் பெற்றுப் பெண்கள் வாழ வேண்டும் என வழி காட்டும் பாரதி ஒரு பெண் விடுதலை விரும்பியாவார்.

முடிவுரை :-

ஆண் இல்லையேல் பெண் இல்லை; பெண் இல்லையேல் ஆண் இல்லை. முன்னதை உணரும் சமூகம் பின்னதை மதிக்க மறப்பதும், மறுப்பதும் ஏனோ? தெரியவில்லை. தெய்வத்தையே சிவசக்தியாகக் கண்டு வழிபடும் நம் நாடு பாரதி வழியில் பெண்மையைப் போற்றினால் உலகத்தில் சிறந்து திகழும் என்பது உறுதி.

முன்னுரை

கடிதம் எழுதுவது நம் பாரம்பரிய தொடர்பு முறையாகவும், உணர்வுகளின் வெளிப்பாடாகவும் செயலாற்றுகிறது. ஆகையால் இந்த டிஜிட்டல் உலகில் கடிதத்தின் முக்கியத்துவத்தை இக்கட்டுரையில் காண்போம்.

இன்றைய நிலை

உலகத்தில் எந்தவொரு மூலையிலும் இருப்பவர்களிடம் நாம் ஒரு வினாடியில் அவர்களுக்கு குறுஞ்செய்திகள் (SMS) அல்லது மின் அஞ்சல் மூலம் தகவல் பரிமாற்றம் செய்ய முடிகிறது. அத்தகைய முன்னேற்றம் அடைந்துவிட்டதால் கையால் எழுதும் கடிதம் முறை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது.

தனித்துவம்

எப்போதும் காலம் பழமையை மீட்டுருவாக்கம் செய்து,அந்தப் பழமையின் மீதான புதிய ஈர்ப்புகளை சமகாலத்தில் ஏற்படுத்தும். ஆகையால் கையால் எழுதப்பட்ட கடிதங்கள் இன்றும் மிகவும் தனித்துவமாக விளங்குகிறது, மற்றும் மரியாதைக்குரியதாகவும் கருதப்படுகிறது. கடிதத்தை பெறுபவர்கள் அந்த கடிதத்தை பொக்கிஷமாக வைத்திருப்பார்கள். தனித்துவம் பெற்று விளங்கும் கையால் எழுதப்பட்ட கடிதங்களை கொண்டாடவும் அங்கீகரிக்கவும் உலக கடிதம் எழுதும் தின தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 1 அன்று குறிக்கப்படுகிறது.

முக்கியத்துவம்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்னர் ஒருவருக்கொருவர் இடையிலான தகவல் தொடர்பாக இருந்தது கடிதம் எழுதுதல் தான். காதல் தொடங்கி யுத்தம் வரை கடிதத்தின் பங்கு வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வரலாறுகளை புரிந்து கொள்வதற்கு கடிதங்கள் விலைமதிப்பற்ற ஆவணங்களாக விளங்குகின்றன.

நம்பகத்தன்மை

ஒவ்வொரு நபரின் கையெழுத்தும் தனித்துவமானது. ஆனால் டிஜிட்டல் முறையில் எழுதும் போது வார்த்தைகளை மற்றவர்கள் சேர்ப்பதும், நீக்குவதும் மிகவும் எளிது. எனவே, கையால் எழுதும் கடிதங்களே மிகவும் நம்பிக்கை உரியதாக விளங்குகிறது.

உணர்ச்சியின் வெளிப்பாடு

மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தியைக் காட்டிலும் கையால் எழுதப்படும் கடிதங்கள் மிகவும் அதிகமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். எழுதுபவர்களின் மன உணர்வுகளின் பிரதிபலிப்பாக கடிதம் அமைகிறது. அன்பு, நன்றி, மரியாதை, பாசம் போன்ற எல்லா உணர்வுகளையும் ஒன்று சேர்த்து வலுவான பிணைப்பை ஏற்படுத்துகிறது கடிதங்கள்.

முடிவுரை

தகவல் தொடர்பில் தொழில்நுட்ப வளர்ச்சியில் எண்ணற்ற மாற்றங்கள் மற்றும் புதிய முன்னேற்றங்கள் இருந்தாலும் கடிதங்கள் அன்பின் மற்றும் ஆழமான கருத்துக்கள் பரிமாற்றத்தில் என்றும் அழியாத ஒரு சின்னமாக உள்ளது.

நம் நாட்டில் மது அருந்தும் பழக்கம் பண்டைய காலம் தொட்டு இருந்துவரும் பழக்கம் ஆகும். ஆனால் மதுவின் கொடுமையை அன்று முதல் இன்று வரை பல சான்றோர்கள் கூறிவருகிறார்கள். மதுவின் கொடுமையறிந்தே வள்ளுவரும் திருக்குறளில் `கள்ளுண்ணாமை' என்ற அதிகாரத்தை இயற்றினார். ஆனால் மது அருந்தும் பழக்கம் இன்றளவும் பலரிடம் காணப்படுகிறது. அது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனைக்குரியது.

குடி குடியைக் கெடுக்கும் என்பது சான்றோர் மொழி. காரணம் மது குடிக்கும் பழக்கமானது ஒருவனது குடும்ப வாழ்வைச் சீரழித்துவிடும். குடிப்பழக்கத்தினால் ஆண்கள் தங்கள் வருமானத்தில் பெரிய பங்கை மதுவிற்காகச் செலவழிக்கின்றனர். அதனால் அவர்களது குடும்பம் வறுமையில் தவிக்கின்றது. குடிப்பழக்கத்தினால் பல வித நோய்களும் ஆரோக்கியச் சீர்கேடுகளும் வந்த வண்ணம் இருக்கின்றது. பெரியவர்கள் மட்டுமின்றி இன்று இளைஞர்களும் பெண்களும் மது அருந்தும் பழக்கத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இது நாட்டின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் பாதிக்கும்.

மது குடிக்கும் பழக்கத்தின் கொடுமையை அறிந்து நம் தேசத்தந்தை காந்தியடிகள் மதுவிலக்கை ஒரு கொள்கையாகவே கருதினார்.

1906ம் ஆண்டு கள்ளுக்கடை மறியலைத் தொடங்கினார். அவரைப் பின்பற்றி தேசத்தின் பல தவைவர்களும் பல இடங்களில் மதுவிலக்கு பற்றி முழக்கமிட்டனர். தமிழகத்தில் இராஜாஜி அவர்கள் முழு மதுவிலக்கை அமல்படுத்தினார். தந்தை பெரியாரும் மதுவிலக்கை

அமல்படுத்தினார். ஆனால் இன்று மீண்டும் மது நாட்டிற்குள் புகுந்து விட்டது.

காந்தியடிகள் கூறியது போன்று மதுவிலக்கு நம் நாட்டில் நடந்தேற வேண்டும். மதுவிலக்குச் சட்டம் இயற்றப்பட வேண்டும். அரசிற்கு இதனால் வருவாய் இழப்பு நேரிடினும் சமுதாயத்தின் நலன் கருதியும் தேசத்தின் எதிர்காலம் கருதியும் மதுவிலக்கை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும். அதுபோல் கள்ளச்சாராயம், மது குறித்த விளம்பரங்கள் போன்றவற்றையும் கடுமையாக நீக்க வேண்டும். மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தனிமனிதனுக்கும் அவரது குடும்பத்திற்கும் இந்த சமுதாயத்திற்கும் கேடு தருவதே மது குடிக்கும் பழக்கம்.அதை அரசும் அரசோடு சேர்ந்து பொதுமக்களும் ஒழிக்கப் போராட வேண்டும். தனிமனிதனும் மது அருந்தும் பழக்கத்தை எப்பாடு பட்டேனும் கைவிட வேண்டும். அன்றே உண்மையான சமுதாயம் மலரும்.

முன்னுரை

கலை என்பது மன உணர்வுகளின் வெளிபாடு. குறிப்பாக நாட்டுப்புற கலைகள் நமது மண்ணோடும், நம் உணர்வுகளுடனும் தொடர்புடையவை. அத்தகைய நாட்டுப்புற கலைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நாட்டுப்புற கலைகள்

நாட்டுப்புற கலைகள் ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும். நாட்டுப்புற கலைகளில் இசை,நடனம் மற்றும் கதை வடிவங்கள் அடங்கும். நாட்டுப்புற கலைகள் பொதுவாக விவசாயிகள், கிராம மக்கள், சிறுபான்மை சமூகங்கள் போன்றோரால் உருவாக்கப்பட்டவை. இவை தனக்கே உரியதான தனித்தன்மைகளையும் சிறப்புகளையும் கொண்டவை.

தமிழ்நாட்டின் கலைகள்

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் பல நாட்டுப்புற கலைகளைக் கொண்டுள்ளது. தமிழகத்தின் நாட்டுப்புற கலைகள் பல உள்ளன. அவற்றுள் சில ஒயிலாட்டம், கோலாட்டம், கரகாட்டம், வில்லுப்பாட்டு, களரி, தெருக்கூத்து, சிலம்பாட்டம், மண்பாண்டக் கலை, கோலக் கலை ஆகும்.

நாட்டுப்புற கலைகளின் முக்கியத்துவம்

நாட்டுப்புற கலைகள் சமூக வளர்ச்சிக்கும் மன எழுச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் சிறந்தது. நாட்டுப்புற கலைகள் என்பது பொழுது போக்கிற்காக மட்டுமின்றி தகவல் ஊடகமாகவும், கலாச்சாரத்தின் பாலமாகவும் திகழ்கின்றது.நமது முன்னோர்களின் நம்பிக்கைகள், எண்ணங்கள் சிந்தனைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை நாட்டுப்புற கலைகள் மூலம் அறியமுடிகிறது.

நாட்டுப்புற கலையின் சிறப்புகள்

நாட்டுப்புற கலைகள் எளிமையும் அழகும் கொண்டது. அங்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் எளிமையானது, சுற்றுச்சூழலை பாதிக்காதவை. நாட்டுப்புற கலைகள் இயற்கையை சார்ந்தவை. இயற்கையைப் பற்றிய விரிவான அறிவும், வாழ்க்கைச் சிக்கல்களை கலை வழியாகக் கூறும் திறனும் வெளிப்படுத்தும்.

இன்றைய நிலை

இன்று தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாலும், தகவல் தொடர்பிற்கும் பொழுது போக்கிற்கும் பல்வேறு ஊடகங்கள் உருவானதால் பழமையான கலைகள் அழிந்து வருகின்றன. இன்றைய இளைஞர்கள் நாட்டுப்புற கலைகள் பற்றி எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் உள்ளன. நகர்புரங்களில் இக்கலைகள் முழுமையாக அழிந்து வரும் நிலையில் உள்ளது.

முடிவுரை

நம்முடைய பாரம்பரிய கலைகளை அழித்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவருக்கும் கடமையும் பொறுப்பும் உள்ளது. அனைவரும் சேர்ந்து பாதுகாப்போமாக!

Reference tags:

Tamil katturai | தமிழ் கட்டுரை | katturai eluthum murai | katturai eluthuvathu eppadi | கட்டுரை எழுதுவது எப்படி | கட்டுரை எழுதும் முறை | Tamil katturaigal | தமிழ் கட்டுரைகள்

Reference videos: