அன்புள்ள நண்பனுக்கு,

உன் அன்பை என்றும் மறவாத உன் நண்பன் கண்ணன் எழுதுவது. உன் உடல் நலம் பற்றி உன் தந்தையார் எனக்கு மடல் எழுதியிருந்தார். அது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். எப்போதும் சுறு சுறுப்புடன் இருக்கும் நீ, உடல் நலமின்றி படுத்த படுக்கையில் இருப்பதை அறிந்து எனக்கு அழுகையே வந்து விட்டது. கவலைப்படாதே, மலேரியா காய்ச்சல் 2 வாரங்களில் குணமாகும்.

மருத்துவர் தரும் மருந்துகளை நேரத்திற்கு சாப்பிடு, வரும் தேர்வைப் பற்றி கவலைப்படாதே. நீ உடல் நலம் பெற்றதும் பாடங்களை படிக்க நான் உதவுகிறேன். நீ விரைவில் உடல் நலம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.

நாகர்கோவில்,
4.9.2024.
இப்படிக்கு
உன் அன்பு நண்பன்,
சுந்தர் கண்ணன்.
உறைமேல் முகவரி
பெறுநர்
வி.சுந்தர்,
15, பொன்னகர்,
நாகர்கோவில்.

அன்புள்ள தோழிக்கு,

நீ அங்கு நலமா ? இங்கு நானும் என் குடும்பத்தாரும் நலமாக உள்ளோம். சென்ற வருடம் உனது பள்ளியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியைக் குறித்து எனக்கு எழுதியிருந்தாய். அதுபோல் இந்த வருடம் எங்கள் பள்ளியிலும் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

பல அறிஞர்கள் எழுதிய நூல்கள், அறிவியல், பொது அறிவு, வரலாறு, சிறுகதைகள், நாவல்கள், புதுக்கவிஞர்களின் படைப்புகள் ஆகிய பல புத்தகங்கள் இருந்தன. சிறுவர்களுக்கான வண்ண வண்ண சித்திரங்கள் கொண்ட கதைப் புத்தகங்கள், வண்ணம் தீட்டும் புத்தகங்கள் புதிர் புத்தகங்கள் இருந்தன. நானும் சில புத்தகங்களை வாங்கினேன். உனக்கு ஏதாவது புத்தகங்கள் வேண்டும் என்றால் கூறு என்னிடம் உள்ள புத்தகங்களை உனக்கு அனுப்புகிறேன். விரைவில் விடுமுறையில் சந்திப்போம்.

விருதுநகர்,
24.10.2024.
இப்படிக்கு
உன் அன்பு தோழி,
வசந்தி.

உறைமேல் முகவரி
பெறுநர்
வி.அபிநயா,
15,அம்மன் வீதி,
காரியப்பட்டி.

அன்புள்ள தோழிக்கு,

நலம், நலமறிய ஆவல். உன் கடிதம் கிடைத்தது. என்னுடைய பிறந்த நாள் 23.10.2024 அன்று வருகிறது. என் பிறந்த நாளை என் தந்தை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளார். என் பிறந்தநாள் விழாவில் நீயும் கலந்து கொள்ள வேண்டும், என நான் விரும்புகிறேன். எனவே, நீ உன் பெற்றோருடன் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உன் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

திருச்சி,
10.10.2024.
இப்படிக்கு,
உன் அன்பு தோழி,
விமலா.
உறை மேல் முகவரி
பெறுநர்
வி.கவிதா,
15 கங்கை தெரு,
திருச்சி -4