Never Stop Learning
மகாத்மா காந்தி
(Click the heading to learn to read)
மகாத்மா காந்தி பற்றி 10 வரிகள் :-
1. மகாத்மா காந்தி 1869 அக்டோபர் 2 ஆம் தேதி குஜராத்தின் போர்பந்தர் நகரில் பிறந்தார்.
2. மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் கரம்சந்த் காந்தி மற்றும் அவரது தாயின் பெயர் புட்லி பாய்.
3. காந்தி ஜி தனது 15 வயதில் திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவியின் பெயர் கஸ்தூரி பாய்.
4. காந்தி ஜி லண்டன் பல்கலைகழகத்தில் சட்டம் பயின்று தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
5. அவர் தனது முழு வாழ்க்கையையும் நாட்டுக்காக அர்ப்பணித்தார்.
6. பாலகங்காதர திலகரின் மறைவிற்குப் பின்னர் இந்திய சுதந்திர வீரர்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
7. சத்தியமும் அகிம்சையும் அவரது வாழ்க்கையின் கொள்கைகள்.
8. காந்திஜி ஒத்துழையாமை இயக்கம், தண்டி மார்ச், உப்பு சத்தியாகிரகம் மற்றும் வெள்ளையனே வெளியேறு ஆகிய இயக்கங்களை வழிநடத்தினார்.
9. அவரது தலைமையின் கீழ் இந்தியா ஆகஸ்ட் 15, 1947 அன்று சுதந்திரம் பெற்றது.
10. காந்திஜியை 1948 ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி கோட்சே என்பவர் சுட்டுக் கொன்றார்.
நன்றி.
மகாத்மா காந்தியடிகள் பற்றிய 10 வரிகள்:-
1. காந்தியின் முழுப்பெயர் மோகன்தாசு கரம்சந்த் காந்தி.
2. காந்திஜி "இந்திய தேசத்தின் தந்தை" என்று போற்றப்படுகிறார்.
3. காந்தி ஜிக்கு மகாத்மா என்னும் கௌரவத்தை வழங்கியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார்.
4. மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை நினைவு கூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதி "காந்தி ஜெயந்தி" தினம் கொண்டாடப்படுகிறது.
5. காந்தியின் பெருமையை உலகமே அறியும் வண்ணம் அக்டோபர் 2 ஆம் தேதியை சர்வதேச அகிம்சை தினமாக ஐக்கிய நாடுகள் பொது சபை அறிவித்துள்ளது.
6. மக்கள் அவரை அன்புடன் பாபு என்று அழைப்பார்கள்.
7. அவர் இந்திய சுதந்திர போராட்டத்திற்காக "சத்தியாகிரக" இயக்கத்தை தொடங்கினார்.
8. ஆங்கிலேயரை மட்டுமின்றி அதேநேரத்தில் இந்தியர்களை ஆக்ரமித்திருந்த மதவேறுபாடு, தீண்டாமை, பெண் அடிமை போன்ற கொடுமைகளுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தார்.
9. "செய் அல்லது செத்துமடி" (Do or Die) இதுவே காந்திஜியின் முழக்கம்.
10. மகாத்மா காந்தியின் மறைந்த நாளான ஜனவரி 30 அன்று தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
நன்றி!
நேரு பற்றி 10 வரிகள்:-
1. ஜவகர்லால் நேரு 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்தார்.
2. நேருவின் தந்தை மோதிலால் நேரு, தாயார் சொரூபராணி அம்மையார்.
3. 1912-ல் லண்டனில் சட்டம் பயின்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.
4. நேருவின் மனைவி கமலா நேரு. இவர்களுக்கு இந்திராபிரியதர்ஷினி (இந்திரா காந்தி] என்ற மகள் பிறந்தார்.
5. 1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம், நேருவை சுதந்திர பேராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம்.
6. நேரு சுதந்திர போராட்டத்தின் போது பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். நேரு சிறையில் இருந்த நாட்களில் ஒரு சில நூல்களை எழுதினார். "இந்தியாவின் கண்டுபிடிப்பு", அவர் படைப்புகளில் சிறந்தது.
7. இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமை இவரையே சேரும்.
8. இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். குழந்தைகள் அனைவரும் இவரை செல்லமாக "நேரு மாமா" என்று அழைப்பார்கள்.
9. இந்தியாவின் ஆபரணம், ரோஜாவின் ராஜா, ஆசிய ஜோதி, சமாதானப் புறா போன்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
10. 1964 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி நேரு அவர்கள் மரணம் அடைந்தார்.
நன்றி!
பத்தொன்பதாம். நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மறைந்தவர் சி. சுப்பிரமணிய பாரதியார். அவரை மகாகவி எனவும் புதுமைக்கவி எனவும் அழைப்பர். முப்பத்தொன்பது ஆண்டுகளே வாழ்ந்தாலும் அவர் புரிந்த சாதனைகளோ பல. மொழி, நாடு, சமுதாயம் பற்றிய எழுச்சிமிகு பாட்டுகளால் மக்களின் இதயங்களைத் தொட்டவர்.
திசை எட்டும் புகழ்கொண்ட எட்டயபுரத்திலே 1882 டிசம்பர்த் திங்கள் 11 ஆம் நாள் சின்னச்சாமிக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாகப்பிறந்தார். சுப்பையா எனச் செல்லமாய் அழைக்கப்பட்டார், சுப்ரமணியன்.
5 வயதிலே அன்னையை இழந்த சுப்ரமணியம், 11 வயதில் எட்டயபுரப் புலவர் அவையில் சோதிக்கப் பெற்றுக் கலைமகள் என்னும் பொருளுடைய பாரதி என்னனும் பட்டப்பெயர் பெற்று ஏற்றம் பெற்றார். 15 வயதில் தந்தையும் மறைய அத்தைக் குப்பம்மாளுடன் காசிக்குச் சென்றார். இந்துக் கலாசாலையில் சமஸ்கிரதம், இந்தி மொழிகளும் கற்றார். பன்மொழி படித்து வேத உபநிடதங்கள் படித்து, ஆங்கிலப் புலமையும் அதிகம் பெற்று, தமிழ்ப்புலமை ஏற்க அழைத்திட, தமிழுக்குத் தன்னையே அளித்தார்.
மொழியைத் தம் விழியாகக் கருதியவர் பாரதியார். நம் அன்னைத் தமிழுக்கு அணிகளைப் பூட்டி மகிழ்ந்தவர் அவர். வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! எனப் பாடினார். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்! என முழங்கினார்.
தமிழ் நாட்டையும் பாரத நாட்டையும் அவர் பாடும் அழகே அழகு. செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே! என்றார். பாரத நாடு விடுதலை பெற வேண்டும் என்பதே பாரதியின் உயிர் வேட்கை. ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே -ஆனந்த சுதந்தரம் அடைந்து விட்டோமென்று! என்று பாடினார். மொழி, நாடு ஆகிய பற்றுக்கு சற்றும் குறையாத சமுதாயப் பற்றைக் கொண்டிருந்தார் பாரதியார். சாதி,மத வேறுபாடுகள், பெண் அடிமை போன்றவற்றை தன் பாடல் வரிகளால் எதிர்த்தார். ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை சாதியில் ! மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொள்ளுத்துவோம் ! ஆகிய வரிகள் பாரதியின் சமுதாயப் பற்றினையும், நம் சமுதாயத்தில் காணப்படும் சகதியும் சேறும் நீங்க வேண்டும் என்பதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் வெளிப்படுத்தும் வீர வரிகள்.
பாரதியாரைப் போலவே நாமும் மொழி, நாடு சமுதாயப் பற்றுணர்வுடன் வாழ்வோம்.
நன்றி.
பாவேந்தர் பாரதிதாசன் பற்றிய 10 வரிகள்:-
1. பாரதிதாசன் அவர்கள் புதுவையில் ஒரு மிகப் பெரிய செல்வந்தர் கனக சபைக்கும், இலக்குமி அம்மாளுக்கும் மகனாக 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி பிறந்தார்.
2. இவரது இயற்பெயர் சுப்புரத்தினம் ஆகும். இவர் தந்தையின் மீது கொண்ட அன்பினால் தந்தையின் பெயரில் உள்ள முதற் பாதியை தன்னுடைய பெயரில் இணைத்து கனக சுப்புரத்தினம் என்று அழைத்துக் கொண்டார்.
3. பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தனது பதினாறாவது வயதில் புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி பயின்றார்.
4. பாரதிதாசன் அவர்கள் தமிழாசிரியராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலேயே அதாவது 1920 ஆம் ஆண்டு பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
5. பாரதிதாசன் அவர்கள் தனது மானசீக குருவான சுப்ரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.
6. பாரதிதாசன் அவர்கள் எழுத்தாளர், திரைப்படக் கதை ஆசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்டவர் ஆவார். இவர் குயில் என்னும் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.
7. தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக மத எதிப்பு, சாதி மறுப்பு போன்றவற்றினை தனது பாடல் மூலம் பதிவு செய்தார்.
8. இவரது படைப்புகளில் சில பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, பெண்கள் விடுதலை ஆகும்.
9. பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார் "புரட்சி கவிஞர்" என்ற பட்டமும், அறிஞர் அண்ணா "புரட்சிக்கவி " என்ற பட்டமும் வழங்கினர்.
10. பாரதிதாசன் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
நன்றி!!
அனைவருக்கும் வணக்கம். கல்வி தந்தை, ஏழை பங்காளர், படிக்காத மேதை, தென்னாட்டுக் காந்தி, கருமவீரர், கிங்மேக்கர் என்றெல்லாம் அழைக்கபட்ட பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளை கொண்டாட இங்கு நாம் கூடியுள்ளோம்m இவரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.
கட்டாயக் கல்வி, இலவச மதிய உணவுத் திட்டம், சீருடைத் திட்டம் போன்ற திட்டத்தால் கல்வி துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் காமராசர் என்று அனைவரும் அறிந்ததே. இங்கு அவர் வேளாண் வளர்ச்சிக்காக செய்த பணிகளைப் பற்றி பேச எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து தன்னிகரில்லாத தலைவராக உயர்ந்த காமராசர் அவர்கள் 1903 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் நாள் குமாரசுவாமி மற்றும் சிவகாமி அம்மாளுக்கு மகனாக விருதுநகரில் பிறந்தார்.
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மண்
இந்த திருக்குறளுக்கு சான்றாக தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர் காமராசர் அவர்கள். சிறு வயதிலேயே நாட்டு விடுதலைக்காகப் போராடினார். 8 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். நாட்டுப்பற்றுக் கொண்ட காமராசர் வீட்டுப்பற்று ஏற்பட்டால் நாட்டுக்காக உழைத்திட முடியாது என்று அஞ்சி திருமணம் செய்யாமல் தன் வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணித்தார்.
மக்களின் நலன் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தினார், காமராசர். அதனால் இவர் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்த ஒன்பது ஆண்டுகளும் தமிழகத்தின் பொற்காலம் என்று கூறுவதுண்டு. ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படைத் தேவைகள் கிட்ட வேண்டுமெனப் பாடுபட்டார்.
விவசாயம் என்பது நமது பாரம்பரியமான தொழில். மனித குலத்திற்கே உயிர்நாடியான தொழில். விவசாயம் தழைத்தால் தான் மக்கள் பசியின்றி வாழ முடியும் என்று அறிந்தவர் காமராசர். அவர் ஆட்சி செய்த தமிழகத்தில் விவசாய நிலங்களுக்கு பஞ்சமில்லை. விவசாய உற்பத்தியை அதிகரிக்க நீர்ப்பாசனங்கள் முக்கியமானவை என்று அறிந்த காமராசர் அதற்கான திட்டங்களைச் செயல்படுத்தினார். அதன் விளைவாக கிடைத்ததுதான் வைகை அணை, அமராவதி அணை, மணிமுத்தாறு அணை, சாகர் அணை என பல அணைகள்.
காமராசரால் அமைக்கப்பட்டு 60 ஆண்டுகள் மேல் கடந்து கம்பீரமாக நிற்கும் அணைகளால் தமிழ்நாட்டில் இன்றும் வேளாண் வளர்ச்சிக்கு உதவுகிறது. பெரிய பெரிய அணைகள் மட்டும் கட்டாமல் உள்ளூர் சிறு நதிகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் போன்றவற்றை எல்லாம் சீர்படுத்தி, மேம்படுத்தி விவசாயத்தைக் காப்பாற்றினார்.
ஒரு நாட்டில் கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால் தான் அந்நாடு வளம்பெறும் என்ற காந்தியடிகளின் கூற்றை மேற்கொண்ட காமராசர். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்த வேண்டும் என்றால் வேளாண் துறையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் கிராமங்களை வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்.
கிராமங்கள் தோறும் சாலைகள், மின்சாரம், போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பை மேம்படுத்தினார். இதன் மூலம் விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைக்கு எடுத்து செல்ல முடிந்தது. காமராசர் காலத்தில் பல தொழிற்சாலைகள் திறக்கப்பட்டன. விவசாயிகள். தங்கள் வேளாண் பொருட்களை தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களாக விற்றனர். இதன் மூலம் வேளாண் துறையும் வளர்ச்சி அடைந்தது. தமிழ்நாட்டின் பொருளாதாரமும் உயர்ந்தது.
காமராசர் காலமானபோது அவரது சட்டைப் பையில் 100 ரூபாய்க்கும் குறைவாக பணம் இருந்தது. ஆனால் அவர் தனது முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியபோது மாநிலக் கருவூலத்தில் கோடிக்கணக்கான பணத்தை விட்டுச் சென்றார். அவர் பணத்தை மட்டும் விட்டு செல்லவில்லை அவர் ஆற்றிய பணிகள் மற்றும் திட்டங்கள் இன்றும் நிலைத்து நின்று மக்களுக்கு பயன் அளிக்கிறது. காலன் அவரைக் கொண்டு சென்றாலும் காலங்கள் கடந்து அவர் புகழ் ஓங்கி நிற்கும் என்பதில் ஐயமில்லை. வாய்ப்பளித்த அவைக்கு நன்றி!
எங்கள் கனவுகளை நனவாக்க உறுதுணையாக இருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும், வளமான இந்தியாவை உருவாக்க கனவு காணும் அனைத்து மாணவர்களுக்கும் என் காலை வணக்கங்கள்.
"உங்கள் கனவுகள் நனவாகும் முன் நீங்கள். கனவு காண வேண்டும்", என்று நம் ஆசைகளுக்கு உயிர் கொடுக்க சொன்ன இந்தியாவின் ஏவுகணை நாயகனான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் பற்றி நான் இங்கு பேசவந்துள்ளேன்.
தமிழகம் தந்த தவப்புதல்வர்களுள் ஒருவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள். சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து தன் அயராத உழைப்பால் உலகம் போற்றும் விஞ்ஞானியாகத் திகழ்ந்து பல சாதனைகள் படைத்தவர்.
தமிழகத்திலுள்ள இராமேசுவரத்தில் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் நாள் அப்துல்கலாம் அவர்கள் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் ஜெயினுலாம்தீன். தாய் ஆஷியம்மா. இவரது முழுப் பெயர் டாக்டர் அபுல் பக்கிர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்.
கலாம் அவர்கள் ஆரம்பக்கல்வி முதல் உயர்நிலைப் பள்ளி வரை இராமேசுவரத்தில் கற்றார். சென்னையில் பொறியியல் படிப்பை முடித்தார். கல்வி கற்கும் காலத்திலேயே சாதிக்கும் ஆசையையும் இந்தியநாட்டின் வளர்ச்சியைப் பற்றியும் லட்சியம் கொண்டார்.
கலாம் அவர்கள் துவக்கத்தில் விமான உற்பத்தி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு நந்தி என்ற ஜெட் விமானத்தை உருவாக்கினார். கலாமின் திறமையைக் கண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அவரை அங்கு பணியில் அமர்த்தியது. விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் போது செயற்கைக் கோள்களை வானில் ஏவும் ஏவுகணைகளை உருவாக்கும் பணியில் சிறந்து விளங்கினார். தகவல் துறையிலும் பாதுகாப்புத் துறையிலும் அவர் ஆற்றியப் பணிகள் எண்ணிலடங்காதவை.
சிறந்த விஞ்ஞானியாக மட்டுமின்றி சிறந்த தேசப்பற்றாளராகத் திகழ்ந்த இவரது மாண்பைக் கண்டு மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் கலாம் அவர்களை இந்திய நாட்டின் குடியரசுத் தவைவர் பதவியில் அமர்த்தினர். 2002 முதல் 2007 குடியரசு தலைவராக பணியாற்றிய போது, தன்னுடைய தன்னலமற்ற சேவையாலும், அரசியல் பார்வையற்ற வாழ்வாலும் அனைவராலும் போற்றப்பட்டார்.
அப்துல் கலாம் அவர்களின் சேவையைப் பாராட்டி பல விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. பல பல்கலைக் கழகங்கள் அவருக்கு சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கியது. 1998-ம் ஆண்டு கலாம் அவர்களுக்கு இந்திய நாட்டின் மிகச்சிறந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
கலாம் அவர்கள் தமது மனமார்ந்த பேச்சுகள் மற்றும் புத்தகங்களின் மூலம் இளைஞர்களுக்கு ஊக்கமும் வழிகாட்டுதலையும் அளித்தார்.
விசுவாசம், உழைப்பு, உயர்ந்த கனவுகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அவர் மக்களின் மத்தியில் வழிகாட்டும் நாயகராக இருக்கிறார்.
அயராத உழைப்பும், திறமையும், சுறுசுறுப்பும் எளிமையும் பல நற்குணங்களை கொண்ட கலாம் அவர்கள் ஜூலை 25, 2015 அன்று மறைந்தார்.
அவரது மறைவு நாட்டுக்கு தீராத இழப்பு.
" கஷ்டம் வரும் போது கண்களை மூடி கொள்ளாதே கண்களை திறந்துபார் நீ அதை வென்று விடலாம்"
என்று கூறி நமது நாட்டுக்கும் மக்களுக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்த இவரின் கனவு இந்தியா, உலகில் சிறந்த வல்லரசாக வர வேண்டும் என்பதாகும். இவரது கனவை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போமாக.
reference tags:
Tamil Speech | Speech in Tamil | Republics speech in tamil | Independence speech in tamil | teachers day speech in tamil | teachers day pechu poti | tamil pechu poti | suthauthanthira thinam speech in tamil | August 15 speech in tamil | kudiyarasu thina speech in tamil | pechu potti | childrens day speech in tamil | kulathaigal dhinam pechu potti | சுதந்திர தின பேச்சு போட்டி | குடியரசு தின பேச்சு போட்டி | குழந்தைகள் தின பேச்சு போட்டி
© 2025. All rights reserved.