இங்கு கூடியுள்ள அனைவருக்கும் என்காலை வணக்கங்கள். நம் பள்ளியில் ஆண்டுதோறும் பல விழாக்களைக் கொண்டாடுகிறோம். விழாக்கள் மாணவர்களிடையே பொது அறிவை வளர்க்கின்றன. நற்பண்பை உண்டாக்குகின்றன. மேடையில் இங்கு பேசும் வார்த்தைகள் மாணவர்களின் மனதில் பதிந்து அவர்கள் வாழ்க்கையை பக்குவமாக்குகிறது.

இந்த அரிய வாய்ப்பை எடுத்துக்கொண்டு அன்று உயிர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களை வணங்கியும் வாழ்த்தியும் இன்று வாழ்க்கையின் போராட்ட வீரர்களான விவசாயிகளை போற்றியும் எனது உரையில் பேசப்போகிறேன்.

இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் நமது மண்ணின் சுதந்திரப் பேரராட்ட வீரர்களின் தியாகங்கள், இடைவிடாத முயற்சிகள் மற்றும் அசைக்க முடியாத துணிச்சலால் கிடைத்தது. நாட்டில் பன்முகத்தன்மை இருந்த போதிலும் இந்திய சுதந்திரப் போராட்டம் ஒற்றுமையின் விளைவாகும். அன்று நம் தாய்மண்ணைக் காக்கவும் அடிமைப்பட்டு கொண்டு இருக்கும் சகமக்களின் உரிமைக்காகவும், எதிர்கால சந்ததியினர்களுக்கும் சுதந்திரம் வாங்க பெயர் தெரியாத எத்தனையோ சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தனர்.

அதுபோல இன்று சகமக்களின் பசிக்காகவும், இயற்கை அன்னையை பாதுகாக்கவும், எத்தனையோ விவசாயிகள் தன்னலமின்றி வாழ்க்கையில் போராடுகிறார்கள். விவசாயிகள் சக உயிரினங்களுக்கு மூன்று வேளை சுவையான உணவைக் கொடுத்து , அவன் வீட்டில் கஞ்சி மட்டுமே குடிக்கிறான் . மழை, வெயில் என்று எதையும் பாராமல் நமக்காக உழைக்கிறான் .

ஏன் நம் விவசாயியையும் விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் ? இதற்கு பதில் திருவள்ளுவர் அன்றே கூறியுள்ளார்.

"சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை"

இதன் பொருள், உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் அதில் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது. அன்றே திருவள்ளுவர் உழவன் பல துன்பங்களை கடந்து தான் நமக்கு உணவு அளிக்கிறான், என்கிறார்.

நம் நாட்டின் கொடியில் உள்ள மூவர்ணத்தில் பச்சை நிறம், பசுமை, அது நம் நாட்டின் முதுகெலும்பான வேளாண்மையைக் குறிக்கிறது. அத்தகைய விவசாயத்தையும் விவசாயியையும் காப்பாற்றுவது யார் கடமை? நம் கடமையே!

நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தவர்களுக்கும், இளமைக் காலத்தை சிறைகளில் கழித்தவர்களுக்கும், தூக்குமேடை ஏறியவர்களுக்கும் சத்யாகிரகம் மூலம் அஹிம்சையின் உத்வேகத்தை உருவாக்கியவர்களுக்கும் எப்படி நாம் மரியாதை செலுத்தி அவர்களை போற்றுகிறோமோ அதுபோல நாம் விவசாயிகளை போற்றவேண்டும், பாதுகாக்க வேண்டும்.

நாளைய தலைமுறைகளாகிய மாணவர்களே! மாற்றம் என்பது உங்கள் கையில் தான் உள்ளது. நம் சுதந்திரத்தைப் பேணி காப்பது போல் நம் முதன்மை தொழிலையும் பேணி காப்போம்.

விவசாயம் என்பது தொழில் மட்டுமல்ல நம் ஒவ்வொரு உயிரின் ஆதாரம். ஆதலால் உணவூட்டும் விவசாயத்திற்கு உயிரூட்டுவோம் என்று இந்நன்னாளில்

சபதம் எடுப்போம். நன்றி. 'வாழ்க பாரம்! வாழ்க விவசாயம்!

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழுக்கும்,வீரம் நிறைந்த தமிழ் மண்ணுக்கும் எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். இங்கு சுதந்திர காற்றை சுவாசிக்கும் அனைவருக்கும் என் காலை வணக்கத்தை தெரிவித்து என் உரையை தொடங்குகிறேன் .

நாம் இங்கு 78 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட கூடியுள்ளோம். நம் இந்திய நாடு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. ஆங்கிலேயரிடம் இருந்து நாம் அரசியல் சுதந்திரம் மட்டும் பெறவில்லை தனிமனித சுதந்திரமும் பெற்றோம். தனிமனித சுதந்திரம் என்றால் சுதந்திரம் வாங்கித் தந்த காந்தியை கூட கொல்ல சுதந்திரம் கிடைத்தது. ஆனால், அன்று ஆங்கிலேயர் நம் நாட்டை ஆட்சி செய்யும் போது தனி மனிதன் தன் விருப்பத்தை தேர்ந்தெடுக்க அனுமதி தரவில்லை. அது உணவாக இருந்தாலும் சரி படிப்பாக இருந்தாலும் சரி. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சில மக்களை தீண்டத்தகாதவர்கள் என்று கூறி ஒதுக்கினார்கள். அவர்களை மிருகங்களை விட மோசமாக நடத்தினார்கள். ஏன்! சில இந்திய மக்கள் கூட அவர்களை மதிப்பதில்லை. எத்தனையோ பெயர் தெரியாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் செய்த தியாகங்களின் விளைவு தான் நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரமும் ஜனநாயகமும்.

"என்று தணியும் இந்த

சுதந்திர தாகம்

என்று மடியும் இந்த

அடிமையின் மோகம்"

-என்று ஏங்கினார் பாரதியார். இந்த சுதந்திர தாகம் தண்ணீரால் தணியவில்லை இரத்தத்தாலும் கண்ணீராலும் தணிந்தது.

"விட்டு விடுதலையாகி நிற்பாய்

இந்த சிட்டு குருவியைப் போல" -என்று பாரதி கண்ட கனவு பல போராட்டங்களுக்கு பிறகு நினைவானது. இன்று நாம் ஒரு பறவை போல் எட்டுத் திசையும் நமக்குப் பிடித்தவாறு பறந்து செல்கிறோம், பற்பல சாதனைகள் படைக்கிறோம். நம் கனவுகளை நனவாக்குகிறோம். ஆனால் நாம் சுதந்திரம் வாங்கித் தந்த வீரர்களின் வழி நடப்பதில்லை. அவர்கள் நம் இந்திய நாட்டின் மண்ணையும் பண்பாட்டையும் காப்பாற்ற வெள்ளையனை வெளியேறச் சொன்னார்கள். ஆனால் நாமோ அந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி நம் இஷ்டப்படி நடந்து கொள்கிறோம். நம் மண்ணணுக்கு எதிராக புது புது கண்டுப்பிடிப்புகளை கண்டுப்பிடித்து நம் நாட்டின் இயற்கை வளத்தை அழித்துக் கொண்டு இருக்கிறோம். ஆங்கிலேயர்களின் வாழ்க்கை முறையில் தான் இப்போது நமக்கு ஈடுபாடும் மதிப்பும் இருக்கிறது. உணவு, உடை, நாகரிகம் என அனைத்திலும் அவர்கள் போல வாழ விருப்பம் கொள்கிறோம். அவர்களின் வாழ்க்கை முறைக்கு அடிமைப்பட்டு உண்மையான சுதந்திரத்தை உணரவில்லை. உலகியல் வாழ்வில் மிக எளியவர்களாகவும். உள்ளத்தால் மிகப் பெரியவர்காக இருப்பதே பாரத கலாச்சாரம். அடுத்த தலைமுறைகளாகிய மாணவர்களே ! நீங்கள் தான் இந்நாட்டின் தூண்கள். நம் தாய் நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு உங்களுடையது. நமது உரிமைக்காக போராடிய வீரர்களின் தியாகங்களை நாம் எப்போதும் நினைவில் வைத்து நமது நாட்டையும். பண்பாட்டையும் பாதுகாப்போம்.

வாய்ப்பளித்த என் பள்ளிக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். வாழ்க பாரதம்! வாழ்க தமிழ்! நன்றி!

Reference tags:

Tamil katturai | தமிழ் கட்டுரை | katturai eluthum murai | katturai eluthuvathu eppadi | கட்டுரை எழுதுவது எப்படி | கட்டுரை எழுதும் முறை | Tamil katturaigal | தமிழ் கட்டுரைகள்

Reference videos: