Never Stop Learning
(click heading to learn how to read)
சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரை | Sutrusulal Katturai
முன்னுரை:-
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. நோயற்ற வாழ்வில் நாம் வாழவேண்டும் என்பது தான் வள்ளலார் இறைவனிடம் வேண்டும் வேண்டுகோள். இதற்கு நம் வீட்டுத் தூய்மை மட்டும் போதாது. சுற்றுச் சூழல் தூய்மையும் இன்றியமையாது வேண்டப்படுவதாகும்.
நீரின் தூய்மை:-
பல்வேறு நோய்களுக்குக் காரணமாகத் திகழ்வது நீரேயாகும். இன்று ஆறுகள் தூய்மை இழந்து வருகின்றன. சாயப்பட்டறைகளும், தொழிற்சாலைக் கழிவுகளும் ஆற்றில் கலக்கின்றன. இதனால், நீரை உபயோகிப்பவருக்குப் பல தீங்குகள் ஏற்படுகின்றன. குடிநீரைக் கூட காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என்ற நிலை வளர்ந்து வருகிறது. இத்தீமைகள் அகல ஆறுகளைத் தூய்மைப்படுத்த வேண்டும். சாக்கடைகளையும், தொழிற்சாலைக் கழிவுகளையும் தூய்மை படுத்தி மாசுகளை நிலத்தில் புதைத்து எஞ்சிய நீரை ஆற்றில் விட வழிவகை செய்ய வேண்டும். கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டத்தை விரைவுபடுத்தினால் தூய நீர் கிடைக்க வழி பிறக்கும்.
நிலத்தூய்மை:-
வேளாண்மையில் இரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுவதால் நிலம் நச்சுத் தன்மை அடைகிறது. பயிர்களை நஞ்சு கெடுக்கிறது. அதனால் உண்ணும் உணவுகள் பல நோய்களை உண்டாக்குகிறது. இதனால் இயற்கை உரங்களின் மூலம் வேளாண்மையைப் பெருக்கும் வழி வகைகள் காணப்பட வேண்டும்.
காற்றுத் தூய்மை:-
ஊர்திகள், தொழிற்சாலைகள், அனல் மின் நிலையங்கள், விண்வெளி ஆய்வுகள் போன்றவற்றால் காற்று தூய்மை இழந்து வருகிறது. புகையும் தூசும், சாம்பலும், கதிர் வீச்சும் நம் உடல் நலத்தைக் கெடுக்கிறது. நச்சுத் தன்மையான காற்றால் விண்வெளியில் உள்ள ஓசோன் படலம் கிழிபடுகிறது. அதனால் நிலத்தில் வெப்பம் மிகுகிறது. அவ்வெப்பம் மனிதனைக் கொல்லுகிறது. இத்தீமைகள் அகற்றப்பட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் செயல்பட்டு வருகிறது. அறிவியல் அறிஞர்களால் தான் அச்சிக்கலுக்கு விடை காணமுடியும்.
மாணவர் கடமை:-
மாணவர்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்பின் தேவையைப் பொதுமக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும். கண்ட இடங்களில் எச்சில் துப்புதல், மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல், குப்பை கொட்டுதல் போன்றவற்றைத் தவிர்க்குமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்குதல் வேண்டும்.
முடிவுரை:-
சுற்றுச் சூழல் பாதுகாப்பு உணர்வை மக்கள் நடுவே பரப்புவதற்கு ஒவ்வொரு சூன் மாதம் ஐந்தாம் நாள் உலக சுற்றுச் சூழல் பாதுகாப்பு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் அருமை பெருமைகளை உணர்ந்து சுற்றுச் சூழல் மாசுபடாது காப்பது அறிவறிந்தோர் கடமையாகும்.
நன்றி!
முன்னுரை:-
இயற்கை மிக அழகானது. அற்புதமானது. மனதுக்கு இன்பத்தை வழங்கக் கூடியது. அந்த இயற்கையை நாம் காக்கும் வழிமுறைகளை இக்கட்டுரையில் காண்போம்.
இயற்கைச் சூழல்:-
இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களும் இயற்கையோடு இயைந்த வாழ்வினை மேற்கொள்கிறது. அந்த இயற்கைச் சூழலை நாம் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை ஆகும்.
இயற்கை மாசடைதல்:-
இயற்கை பல விதங்களில் மாசு அடைகிறது. மனிதர்களாகிய நாம் நம்முடைய சுயலாபத்திற்காக பல்வேறு விதங்களில் இயற்கையை மாசுபடுத்துகிறோம்
→நெகிழ்களோடு குப்பைகளை எரித்தல்.
→நீர் நிலைகளில் கழிவுப் பொருட்களை கலக்குதல்.
→ வேளாண்மையில் இரசாயன உரங்கள் பயன்படுத்துவது.
இயற்கையைப் பாதுகாக்கும் வழிமுறைகள்:-
கழிவுப் பொருட்களை நீர் நிலைகளில் கலக்காமல் இருப்பது.
நெகிழி பயன்பாட்டை தவிர்க்கனும்.
குப்பைகளை எரிக்காமல் மறுசூழற்ச்சி செய்வது.
மின், நீர் ஆகியவற்றை சிக்கனமாக பயன்படுத்துவது.
இயற்கை உரங்களை பயன்படுத்துவது.
முடிவுரை:-
இயற்கையை பாதுகாக்கும் வழிமுறைகளை அறிந்து அவற்றைப் பாதுகாத்து நாம் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு தூய்மையான இயற்கையை வழங்கிடுவோம் .
முன்னுரை:-
இயற்கையானது மனித வாழ்வுக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம், பல கவிஞர்கள் எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் பலர் அவர்களின் படைப்புகளில் இயற்கையை மதித்தார்கள், போற்றினார்கள். இணையற்ற அழகு உடைய இயற்கையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
எண்ணற்ற இயற்கை :-
இயற்கை இல்லாமல் மனிதகுலம் உயிர்வாழ்வது சாத்தியமற்றது, அதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கைதான் பூமியில் வாழ்வின் செயல்பாட்டிற்கு பொறுப்பாகும். மனித இனம் செழிக்க இயற்கை இன்றியமையானது. நாம் காணும் அனைத்தும் இயற்கையின் படைப்பே ஆகும். இயற்கையானது ஓடும் ஆறுகள், அழகான பள்ளத்தாக்குகள், உயரமான மலைகள், பாடும் பறவைகள், கடல்கள், நீல வானம், மழை, அழகான நிலவொளி, வண்ணப் பூக்கள், எண்ணற்ற விலங்குகள் ஆகும்.
இயற்கை நம் அன்னை:-
இயற்கை உண்மையில் பூமிக்கு கடவுள் கொடுத்த விலைமதிப்பற்ற பரிசு. இயற்கையை 'அன்னை இயற்கை' என்று அழைக்கிறோம். நம் தாயைப் போலவே அவள் நமக்கு தேவையான அனைத்தும் கொடுக்கிறாள். பறவைகள் ஒலியுடன் கூடிய இனிய காலை பொழுது, தூய குடிநீர், சுவாசிக்க தூய்மையான காற்று, நாம் பசியாற பழங்கள், தானிய வகைகளை கொடுக்கிறது.
இத்தகைய பேரன்பை காட்டும் இயற்கையை காப்பதே ஒவ்வொரு மனிதனின் தலையாய கடமையாகும்.
இயற்கையை சேதப்படுதல்:-
ஆனால் இன்று நாம் இயற்கையை அழித்துக் கொண்டு இருக்கிறாம். ஆறுகள் தூய்மை இழந்து வருகின்றன. சாக்கடைகளும், தொழிற்சாலைக் கழிவுகளும் ஆற்றில் கலக்க விடப்படுகின்றன. வேளாண்மையில் இரசாயன உரங்கள் பயன்படுத்தப் படுவதால் நிலம் நச்சுத் தன்மை அடைகிறது. ஊர்திகள் தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்கள், விண்வெளி ஆய்வுகள் போன்றவற்றால் காற்று தூய்மை இழந்து வருகிறது.
இயற்கையை பாதுகாத்தல்:-
பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் இயற்கையைப் பாதுகாக்க பல்வேறு வழிகளை பயன்படுத்தினாலும் தனிநபர்களும் தங்கள் பங்களிப்பை வழங்க முன் வர வேண்டும். மரங்கள் நடுதல், காகிதப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல், தண்ணீர், மின்சாரம் மற்றும் எரிப்பொருள் வீணாவதைத் தடுப்பது, நெகிழி பயன்பாட்டைத் தவிர்ப்பது,தங்கள் பகுதியைச் சுற்றியுள்ள இடத்தை தூய்மையாக வைத்திருந்தல் போன்ற வழிமுறை பின்பற்ற வேண்டும்.
முடிவுரை:-
நம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இயற்கை இன்றியமையாதது. எனவே அதை தூய்மையாக வைத்து நமது வருங்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டும்.
முன்னுரை:-
மனிதன் உயிர் வாழ்வதற்கு முக்கியமானவை உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் ஆகும். நாம் உணவு இன்றி வாழ்க்கை நடத்த முடியாது. அவ்வுணவுப் பொருளை, உழவு தொழில் மூலமே அடைய முடியும். எனவே எல்லாத் தொழிகளிலும் சிறந்தது உழவு தொழிலேயாகும்.
முதன்மைத் தொழில்:-
நம் தாய்திருநாட்டின் முதன்மைத் தொழிலாக விளங்குவது உழவுத் தொழில். வேளாண்மை என்ற சொல் விருப்பத்துடன் பிறரைப் பேணுதல் என்று பொருள். உலகமாகிய சக்கரம் சுழலுவதற்கு உழவுத்தொழிலே அச்சாணியாக விளங்குகிறது. உழவுத்தொழிலில் சிறப்படையாத நாடு வறுமையால் துன்புறும். விவசாயி சேற்றில் கை வைக்காமல் நாம் சோற்றில் கை வைக்க முடியாது.
உழவின் சிறப்பு:-
"உழவுக்கும் தொழிலுக்கு வந்தனை செய்வோம்" என்றார் பாரதி. அதில் கூட உழவைத்தான் முதலில் வைத்தார். திருவள்ளுவர் அதற்கும் மேலாக
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு என் செல்பவர்" - என்றார். "செங்கோல் நடத்துவது உழவனின் ஏரடிக்கும் சிறுகோல்" என்றுரைத்தார் கம்பர்.உழவுத் தொழிலின் மகிமை கூறும் இலக்கியங்கள் பல உள்ளன. அத்தகைய உன்னதமானது உழவு தொழில்.
இன்றைய நிலை:-
இந்தியாவின் முதுகெழும்பு விவசாயம் என்றார் அண்ணல் காந்தியடிகள். ஆனால் இன்று கிராமப்புற மக்கள் தம் உழவுத் தொழிலை விட்டு நகர் புற வாழ்வை நோக்கி அதிகமாக மக்கள் நகர்வதால் உணவு உற்பத்தியில் வீழ்ச்சி கண்டு வருகிறோம்.ஒரு விதையை விதைத்தால் அதற்கு ஈடாக பல லட்சமாக விதையைத் தரும் அற்புத இயற்கையின் சக்தியை உணராத சிலர், விவசாயத்தில் நஞ்சை கலந்து இயற்கையையும் கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்து கொண்டு வருகின்றனர்.இயற்கைக்கு எதிராக செய்யும் செயல்களால் காலநிலை மாற்றம் காரணமாகவும் விவசாயம் பாதிப்படைகிறது.
முடிவுரை:-
வேளாண்மைக்கு தீங்கும், சுற்றுச்சூழலை பாதிக்கச் செய்யும் எந்த திட்டம் வந்தாலும் புறக்கணிப்போம், என்ற உறுதிமொழி எடுப்போம்.அரசாங்கம் மட்டும் உழவர்களையும் உழவு தொழிலையும் பாதுகாத்தல் போதாது.இம்மண்ணில் வாழும் நாம் அனைவரும் நம்மால் ஈன்ற வரை உழவர்களுக்கு உதவி செய்து அவர்களை மதிக்க வேண்டும்.
உழவர் பெருமக்களை உயர்த்துவோமாக!
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பிடப் பயிர்த் தொழிலைப் போற்றி பாதுகாப்போமாக!
நன்றி!
முன்னுரை:-
நிலத்தின் ஐவகைப் பிரிவுகளுள் முல்லையும் ஒன்று. இதுகாடு, புறவம் எனவும் வழங்கப்படுகிறது. ஒரு நாட்டின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு காடாய் இருத்தல் வேண்டும் . "காடுகள் நாட்டின் அரண்" என்பர் சான்றோர். அத்தகைய காடுகளைப் பற்றியும் அதன் பாதுகாப்பை பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.
நீர்வளமும் நிலவளமும்:-
காடுகளே மழைக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. அடர்ந்த மரங்கள் கொண்ட காடுகளே கார்மேகங்களை குளிர்வித்து மழையைப் பொழிவிக்கின்றன. மழையில்லை என்றால் நாட்டில் வளம் ஏது? மழை பெய்யாவிடில் நாட்டில் வறட்சி, பஞ்சம், குடிநீர் தட்டுப்பாடு, தானியங்கள் விளையாமை என பல தீமைகள் விளையும்.காடுகளிலுள்ள மரங்களின் வேர்கள் மண்ணில் ஊடுருவி இருப்பதாலேயே மண்ணின் கெட்டித்தன்மை மாறாதிருக்கிறது. மரங்கள் இல்லை என்றால் மண் இளகி ஆங்காங்கே நிலச்சரிவு, புதைமணல் என்ற நிலையாகிவிடும்.
காட்டு விலங்குகள்:-
பறவைகளின் சரணாலயங்களாகவும், விலங்குகளின் சரணாலயங்களாகவும் விளங்குவது காடுகள். விலங்குகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இயற்கை சமநிலையாக இருக்கவும் உதவுகின்றன. தேனீக்கள் வண்டுகள், பட்டாம்பூச்சிகள் போன்றவை தாவர இனப்பெருக்கத்திற்கு முக்கியமானவை.
இன்றைய நிலை:-
மனிதனின் ஆசைகளும் எண்ணங்களும் மருத்துவம் மற்றும் உணவு தேவைகளும் காடு அழியக் காரணமாகும். மக்கள் தொகைப் பெருக்கத்தினால் குடியிருப்புக்கும், பயிரிட நிலங்களைப் புதுப்பிக்கவும், கொடிய விலங்குகளிடம் இருந்து பயிர் வகைகளைக் காக்கவும் காட்டில் உள்ள மரங்களும் விலங்குகளும் அழிக்கப் படுகின்றன.
முடிவுரை:-
இயற்கை அன்னை உறையும் எழில் இடமாம் காடுகள். காடுகளின் பயனைத் தெரிந்த நாம் அதனைப் பாதுகாக்கும் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.நல்ல காற்றையும் மழையையும் உணவையும் தந்து வாழவைக்கும் காடுகளைப் பாதுகாத்து பதில் நன்றியைச் செலுத்துவோம்.


முன்னுரை
'தெய்வீகத்திற்கு அடுத்தது தூய்மை' என்ற பழமொழிக்கு ஏற்ப நமது சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்பது நமது வாழ்வின் மிக முக்கியமான பகுதியாகும். சுற்றுச்சூழல் தூய்மை என்பது மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு சிறந்த பழக்கமாகும். இக்கட்டுரையில் நாம் சுற்றுச்சூழல் தூய்மை பற்றி காண்போம்.
சுற்றுச்சூழல் தூய்மையின் முக்கியத்துவம்
நமது சுற்றுச்சூழல் தூய்மையாக வைப்பதன் மூலம் நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது. ஆரோக்கியமான மற்றும் நிம்மதியான வாழ்க்கையை வாழ உதவுகிறது. சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கும் போது, அது வளிமண்டலத்தை சுத்தமாக்கி அமைதியைப் பராமரிக்கிறது. சுத்தமான வளிமண்டலம் நமக்கு ஒரு புதிய உணர்வை அளிக்கிறது, இது நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதன் மூலம் சிறந்த வாழ்க்கையை வாழ உதவுகிறது. ஒரு தனி மனிதனின் வாழ்க்கை தரத்தை மட்டும் மேம்படுத்தாமல் சுற்றுச்சூழல் தூய்மையின் மூலம் ஒரு நாட்டின் தரமே உயரும்.
இன்றைய சுற்றுச்சூழல்
நம் அவசர வாழ்க்கையில் சுற்றுச்சூழலை தூய்மையாக வைக்க அவ்வப்போது மறந்துவிடுகிறோம். நாம் எளிமையாக வாழ சுற்றுச்சூழலுக்கு எதிரான பல கண்டுப்பிடிப்புகளைப் பயன்படுத்துகிறோம். நெகிழினால் செய்யப்பட்ட பொருட்களை அதிகமாக பயன்படுத்துகிறோம். தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் பெரும்பாலும் இயற்கை நீர்நிலைகளில் கலக்கப்படுகிறது. கடல்கள், ஆறுகள், ஏரிகள், ஓடைகள் போன்றவை மாசடைகின்றனது. தொழிற்சாலை கழிவுகளை நிலத்தினுள் கொட்டுவதால் நிலத்தடி நீரானது பெருமளவில் மாசடைகின்றனது, மற்றும் மண்ணில் நச்சு தன்மை அதிகமாகிறது. பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதனால் மண்ணின் வளம் குறைகிறது. தொழிற்சாலை மற்றும் போக்குவரத்து மூலம் வெளியேறும் புகை காற்றை மாசுபடுத்துகிறது.
செயல்முறைகள்
தூய்மை செய்வது ஒரு முறை நடக்கும் நிகழ்வு அல்ல; சுற்றுச்சூழல் சுத்தமாக பராமரிக்க ஒரு வழக்கமான அடிப்படையில் செயல்பட வேண்டும். குப்பைத் தொட்டிகளை வீதிகள் தோறும் அமைத்திட வேண்டும். குப்பைகளை மறுசுழற்சி செய்து அதனை பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, சில நாடுகளில் அவர்கள் குப்பைகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறார்கள். நமது அரசாங்கம் இதுபோன்ற செயல்முறைகளை செய்ய வேண்டும். சுற்றுச்சூழ லை சுத்தம் செய்யும் போது சுற்றுச்சூழல் பாதிக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும். இயற்கை வளங்களை அளவோடு பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் கல்வி திட்டங்களில் பங்கேற்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் வருங்கால உலகம் சுத்தமான இருக்கும்.
முடிவுரை
வருங்கால சந்ததியினருக்காக சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியிருப்பதால் சுற்றுச்சூழல் தூய்மையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
முன்னுரை:-
சூழல் என்பது நாம் இருக்கும் சுற்றுப்புரத்தைக் குறிக்கிறது. இது பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் மிக அடிப்படையான ஆதரவு அமைப்பாகும். உணவு, நீர்,காற்று, உடை, தங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவைகளை நமக்குச் சூழலே வழங்குகிறது.
சுற்றுக்குழலின் முக்கியத்துவம்:-
நமது சூழல் என்பது மரங்கள், ஆறுகள் மலைகள் மற்றும் விலங்குகளின் தொகுப்பு மட்டுமல்ல. அது நமது இருப்புக்கான அடித்தளம். அனைத்து உயிரினங்களும் ஒன்றோடொன்று இணைந்து இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு உயிரினமும் சுற்றுக்சூழல் அமைப்புகளின் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான சமூகம் மற்றும் நாட்டைப் பெற நமக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான சூழல் தேவை.
இன்றைய சுற்றுச்சூழல்:-
சமீபத்திய ஆண்டுகளில் சுற்றுச்சூழல் மிக அதிகமாக சுரண்டப்படுவதால் சுற்றுச்சூழல் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றன. சுற்றுச்சூழல் சீரழிவை ஏற்படுத்தும் மனிதர்களின் செயல்பாடுகள் எண்ணற்றவை. சுரங்கம், தொழில் மயமாக்கல், நவீன நகரமயமாக்கல், காடழிப்பு, இரசாயன கழிவுகள் ஆகியவை சுற்றுச்சூழலின் படிப்படியான சீரழிவை ஏற்படுத்தும் முக்கிய காரணகளாகும்.
சுற்றுச்சூழல் அன்னை:-
சுற்றுச்சூழல் அன்னை நாம் செழிக்க தேவையான அனைத்தையும் வழங்குகிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சூழல் நமக்கும் பிற உயிரினங்களுக்கும் எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது. சுற்றுச்சூழலுடன் இணைந்த வாழ்க்கையை நம் முன்னோர்கள் வாழ்ந்ததனால் நீண்ட காலம் நோயற்ற வாழ்வு நடத்தினர். சுற்றுச்சூழலின் உண்மையான மதிப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழல் நேயம்:-
இவ்வுலகில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. ஆனால் இதில் மனித இனம் ஒன்றே சுற்றுச்சூழலை சேதப்படுத்தியுள்ளனர். ஆகையால் நமது இயற்கை அன்னை நம் மீது பொழியும் அதே அன்புடனும் மென்மையுடனும் நாமும் நமது சுற்றுச்சூழலை நேசித்தால், சுற்றுச்சூழலுக்கு எதிரான எந்த ஒரு செயலையும் செய்ய மாட்டோம். சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் செயல்களை கட்டுப்படுத்த வலுவான சட்டங்கள் மட்டும் அவசியம் அல்ல, அதனை மேலும் சேதப்படுத்தாமல் பாதுகாத்து அன்புடன் பராமரிக்க வேண்டும்.
முடிவுரை:-
நமது சுற்றுச்சூழலை அன்புடன் பராமரிப்போம் என்று உறுதிமொழி எடுப்போம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோம் .
முன்னுரை
நம் இந்திய நாட்டில் எண்ணற்ற வற்றா நதிகள், வானைத் தொடும் மலைகள், அடர்ந்த காடுகள், கனிமங்கள் போன்ற எல்லா வளங்களைப் பெற்ற பசுமை இந்தியாவில் மாணவர்களின் பங்கைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இன்றைய இந்தியா
வேளாண் சமூகமான இந்தியா தற்போது நகரமயமாக்கல் மற்றும் நவீனமயமாக்குதலால் தனது பாரம்பரிய விவசாயத்தையும் இயற்கையையும் இழந்து வருகிறது. இந்தியாவின் நிலங்கள் மிக குறைந்த விளைச்சலையே தருமளவுக்கு நலிவடைந்துவிட்டது. எங்கு திரும்பினாலும் குப்பைகள் மற்றும் நெகிழிகள் மட்டும் தான் இருக்கிறது.
வேளாண்மை - தீர்வு
வேளாண்துறை ஒன்றே நம் தாய்மண்ணுக்கு எந்த ஒரு தீங்கும் விளைவிக்காமல் இந்தியாவை பசுமையாக வைக்க முடியும். விவசாயிகள் தெருவில் வந்து போராட்டம் செய்வது மட்டும் இங்கு பேசப்படுகிறது. ஆனால் பல காலங்களாக உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் சாகுபடி செய்து மற்றும் நம் தாய் மண்ணை பாதுகாத்து புரட்சி செய்தவர்கள் அவர்கள் மட்டும்.
விவசாயம் இல்லை என்றால் எதும் இல்லை. ஆகையால் வெற்றியாளர்களான விவசாயிகளைப் பற்றியும் விவசாயத்தைப் பற்றியும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
மாணவர்களை தங்கள் வீடுகளிலும் பள்ளிகளிலும் விவசாயம் செய்ய ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு இயற்கை மீதான ஈடுபாடு அதிகமாகும். எதிர்கால தலைமுறையினர்களான அவர்கள் இந்தியாவை பசுமையாக வைத்துக்கொள்வார்கள்.
இந்தியாவை மாற்றும் சக்தி
பள்ளிகள் ஏட்டுக்கல்வியை மட்டும் புகுட்டி மேதாவிகளை உருவாக்கி அவர்களால் இப்பொழுது தொழில்துறைகள் மற்றும் சேவைத் துறைகள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. அதே பள்ளிகளில் மாணவர்களுக்கு இயற்கை சார்ந்த வேளாண்மையை கற்றுக் கொடுத்தால் பசுமை இந்தியா பாதுகாக்க முடியும்.
பசுமை இந்தியாவை காக்கும் பணியை மாணவப் பருவத்திலிருந்து தொடங்கவேண்டும். மாணவர்கள் ஒன்றிணைந்தால் பசுமை இந்தியாவை அழிவு பாதையில் இருந்து மீட்க முடியும்
முடிவுரை
எதையும் எளிதில் மற்றும் விரைவில் செய்யக் கூடிய திறன் மாணவர்களிடையே உள்ளது. ஆகையால் பசுமை இந்தியாவை பாதுகாக்கும் பங்கு மாணவர்களுக்கு அதிகம். பசுமை இந்தியாவே நம் நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று ஒவ்வொரு மாணவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
முன்னுரை
மரங்களாகிய நாங்கள் சுற்றுச்சூழலில் முக்கிய பங்கு வகிக்கிறோம். சுற்றுச்சூழல் சுத்தமாகவும் சமநிலையாகவும் இருந்தால் மட்டுமே எந்த ஒரு உயிரினத்தாலும் வாழமுடியும். சுற்றுச்சூழலின் பாதுகாப்பைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
மரங்களும் சுற்றுச்சூழலும்
நாங்கள் விலங்குகளின் வாழ்க்கையின் அடிப்படை தேவையாகும். அதுபோல நாங்கள் இனப்பெருக்க செய்ய விலங்குகள் பெரிது உதவி செய்கின்றன. மாசு காற்றை நாங்கள் சுத்தம் செய்கிறோம். பூமியில் மழை பெய்வதற்கு நாங்களும் ஒரு முக்கிய காரணம். அதுபோல நாங்கள் உயிர்வாழ நிலம், நீர், காற்று, சூரிய வெளிச்சம் என அனைத்தும் எங்களுக்கு தேவை .
அனைவரும் சமம்
மரங்களாகிய நாங்கள், விலங்குகள், நிலம், நீர், காற்று, சூரிய வெளிச்சம், ஆகாயம் மட்டுமே சுற்றுச்சூழலை உருவாக்கவில்லை. மனிதனாகிய நீங்களும் சுற்றுச்சூழலில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறீர்கள், இவற்றுள் ஏதேனும் ஒன்று மட்டும் பாதுகாக்கவில்லை என்றால் சுற்றுச்சூழலின் சமநிலை பாதிக்கப்படும். அதன் பின் உலகமே அழிவை நோக்கி போகும்.
மனிதனும் சுற்றுச்சூழலும்
மனிதன் தன் வாழ்க்கையை வாழ சுற்றுச்சூழலை உபயோகித்துக்கொள்கிறான். ஆனால் அதனைப் பாதுகாக்க அவன் அவ்வப்பொது மறக்கிறாண். நிலம், நீர், காற்று என அனைத்தையும் மாசுப்படுத்துகிறான். விலங்குகளையும் மரங்களையும் தங்கள் தேவைக்காக அழிக்கிறான்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க சில வழிகள்
சுற்றுச்சூழலை பாதுகாக்க நிறைய வழிகள் இருந்தாலும் சில எளிய முறைகளை அன்றாட வாழ்க்கையில் பின்பற்றினால் மனிதன் சுற்றுச் சூழலை பாதுகாக்கலாம்.
மரக்கன்றுகள் நிறைய நட வேண்டும்.
நெகிழியை பயன்படுத்தக் கூடாது.
இயற்கையை சார்ந்து வாழ வேண்டும்.
குப்பைகளை சரியான முறையில் மறுசூழற்சி செய்ய வேண்டும்
விலங்குகள் வாழும் இடத்தை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்.
எல்லா வளங்களையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
முடிவுரை
கடவுளைப் போல் மனிதனால் ஒரு நல்ல சுற்றுச்சூழலை உருவாக்க முடியும். ஆகையால் மனிதர்கள் இந்த அழகான சுற்றுச்சூழலை சமநிலையில் வைக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.
சுழல் காப்போம்! தேசம் காப்போம் !
நன்றி!
கடல் அலைகள்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அலைகள் உருவாகும் விதம்
கடல் அலைகள் பயன்
அலைகளின் அழகு
அலைகளும் சுற்றுச்சூழலும்
அலைகளின் மற்றொரு முகம்
முடிவுரை
முன்னுரை:-
கடல் அலைகள் !! நினைக்கும் போதே மனதுக்கு நிம்மதியும் அமைதியும் தரும். புலவர்களையும் கலைஞர்களையும் விஞ்ஞானிகளையும் ஈர்க்கும் அழகையும் பல அதிசயங்களையும் கொண்ட கடல் அலைகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அலைகள் உருவாகும் விதம்:-
காற்று கடலின் மேற்பரப்பில் வீசும்போது அதன் ஆற்றலை தண்ணீருக்கு மாற்றி அலைகளை உருவாக்குகிறது. கடல் அலைகள் உருவாகும் விதம் மற்றும் அது இயங்கும் முறை மிகவும் சுவாரஸ்யமானது. சிறிய அலைகள் முதல் ஆழிப்பேரலைகள் வரை கடல் அலைகள் பல வகைப்படும்.
கடல் அலைகள் பயன் :-
கடல் அலைகள் கடல் வளங்கள் வளர்வதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. கடல் அலைகள் கடல் வாழ் உயிரினங்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜன் காற்றை விநியோகிக்கிறது. மணல் அரிப்பு மற்றும் படிவு செயல்முறைகள் மூலம் கடல் அலைகள் கடற்கரைகளை உருவாக்குகிறது. மனிதன், அலைகளை சாகச விளையாட்டுகளுக்கு பயன்படுத்துவதோடு, அலை மின்னோட்டம் மூலமாகவும் மின் உற்பத்தியையும் செய்கிறான். பல கவிதைகள் கதைகள் பாடல்கள் மற்றும் ஓவியங்கள் கடல் அலைகளின் அழகினால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன..
அலைகளின் அழகு:-
கடல் அலைகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் மற்றும் அதன் ஒலியும் ஒளியும் நம்மை மயக்கும். இதன் அழகு மனித மனதுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஓடிப்பிடித்து விளையாடும். வெள்ளை நுரைச்சுடருடன் வரும் அலைகள் நம்மை வியக்கவைக்கும்.
அலைகளும் சுற்றுச்சூழலும்:-
அலைகள் கடலின் நீர் சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை கடலின் வெப்ப நிலையை கட்டுப்படுத்தி, பருவநிலையிலும் வளிமண்டல பரிமாற்றங்களிலும் முக்கிய பங்காற்றுகின்றன. ஆகையால் கடற்கரைகளை மாசுபடுத்தாமல் சுத்தமாக வைக்க வேண்டிமது நமது கடமை.
அலைகளின் மற்றொரு முகம் :-
புயல் காலங்களில் ஏற்படும் பெரிய கடல் அலைகள் இயற்கையின் சக்தியை உணர்த்துகிறது. அமைதிக்கும் அழகுக்கும் பெயர் போன கடல் அலைகள் அதன் மற்றொரு முகமான ஆழிப்பேரலை மனித சக்திக்கு அப்பாற்பட்டது. இனியும் நிகழாமல் இருக்க கடல் அன்னையை வணங்குவோம்.
முடிவுரை:-
கடல் அலைகளின் அழகைக் கண்டு மயங்காமல் இருப்பது அரிது; இது, நம்மை இயற்கையோடு இணைக்கும் ஒரு அரிய தருணம். பல வளங்களை தரும் கடல் அன்னையின் அலைகளுடன் கொஞ்சி விளையாடுவோம்! எப்போதும் பாதுகாப்போம்!
நன்றி!
Reference tags:
Tamil katturai | தமிழ் கட்டுரை | katturai eluthum murai | katturai eluthuvathu eppadi | கட்டுரை எழுதுவது எப்படி | கட்டுரை எழுதும் முறை | Tamil katturaigal | தமிழ் கட்டுரைகள்
Reference videos:
© 2025. All rights reserved.