Never Stop Learning
Teacher's day speech in Tamil | ஆசிரியர் பற்றிய பேச்சு
அனைவருக்கும் வணக்கம். நமது எதிர்காலத்தை கட்டியெழுப்ப அயராது முயற்சிகளை எடுக்கும் நமது ஆசிரியர்களை கவுரவிக்கும் ஒரு சிறப்பு நாள் இன்று.
ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
தன் வாழ்நாள் முழுவதும் ஒரு நல்ல ஆசிரியராக வாழ்ந்து காட்டிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாளை தான் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.
ஆசிரியர் தினம் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 1962- ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர் தினம் கொண்டாப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நாட்டின் எதிர்கால வளர்ச்சி அந்த நாட்டின் வகுப்பறையில் தான் உருவாக்கப்படுகிறது.
மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.
ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உலகம் இன்றளவும் பல்துறை அறிஞர்களை பெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒரு குழந்தையை முதன் முதல் இந்த பூமிக்கு கொண்டு வருபவள் தாய். இரண்டாவதாக அந்த குழந்தையை சான்றோன் ஆக்குபவர் தந்தை. மூன்றாவதாக அந்த குழந்தையை தன் சொல்லாலும் எழுத்தாலும் ஒரு மனிதனாக உருவாக்குபவரே ஆசிரியர். எனவே தான் தெய்வத்திற்கு முன் மூன்றாமிடத்தில் ஆசிரியரை வைத்திருக்கின்றனர். நம் மூதாதையர்.
ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவர் அவன் ஆசிரியர் தான்.
ஆசிரியர் தினமானது நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இதில் பல பேச்சுப் போட்டிகள், ஓவியப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் நடத்தி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி மகிழ்வார்கள்.
மேலும் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நல்லாசிரியர் விருதுகளை வழங்கும்.
இந்நாளில் கல்லாகவும் மண்ணாகவும் இருந்த நம்மை நல்ல பண்பாளர்களாக்கி சமுதாயத்திற்குப் பயனுள்ளவர்களாக உயர்த்திய, என்றும் அணையா தியாக தீபங்களாகத் திகழும் ஆசிரியர்களை நினைவில் கொள்ள வேண்டியது நம் அனைவரின் தலையாயக் கடமையாகும்.
நன்றி!
கல்வி என்னும் உளியைக் கொண்டு எங்களை ரசித்து ரசித்து செதுக்கும் சிற்பிகளான ஆசிரியப் பெருமக்களுக்கும் என்னுடன் சேர்ந்து ஒளிர்கின்ற என் நண்பர்களுக்கும் என் இனிய காலை வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல, அது ஒரு மாபெரும் தொண்டு. மாணவர்களின் அறியாமை என்னும் இருளை நீக்கி அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுபவர்கள் ஆசிரியர்கள்.
நாம் பிறக்கையில் இவ்வுலகிற்கு எதையும் கொண்டு வரவில்லை அதுபோல போகும் போது எதையும் கொண்டு செல்வதுமில்லை. வாழும் வாழ்க்கையின் இடைப்பட்ட காலத்தில் அழியாதச் செல்வமான கல்வி செல்வத்தை வழங்குபவர்கள் ஆசிரியர்கள். குருவாகிய ஆசிரியர் தாயாகவும். தந்தையாகவும் விளங்கி அறிவையும் ஆற்றலையும் மாணவர்களுக்கு அளித்து தெய்வத்தை உணர வைப்பார்கள்.
ஆசிரியர்கள் வெறும் எழுத்தறிவை மட்டும் நமக்கு போதிப்பதில்லை. அவர்களை நாடி வரும் மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தையும் சமூகத்தை எதிர்கொள்வதற்கான தைரியத்தையும் கற்றுக்கொடுத்து அவர்களை வளப்படுத்துகிறார்கள். இதைத்தவிர விடாமுயற்சி, தன்னம்பிக்கை, ஊக்கம், நற்பழக்கங்கள் , பொது அறிவு மற்றும் வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுத்தருகிறார்கள். கட்டுப்பாடுகளை தளர்த்தி சுயசிந்தனையால் மாணவர்கள் வளர ஆசிரியர்கள் பாதை அமைத்துக் கொடுக்கிறார்கள்.
ஆசிரியர்கள் சுயநலமற்றவர்கள், மாணவர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பரந்த
மனப்பான்மை உடையவர்கள். ஒவ்வொரு ஆசிரியரின் குறிக்கோள், மாணவர்கள் நல்லறிவுடனும், சமுதாயத்தில் வளமுடனும் சிறந்து விளங்கவேண்டும். என்பது தான். மாணவர்களை தன்பிள்ளை என எண்ணி அவர்களின் வெற்றியை தம் வெற்றி போல் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு மாணவர்களின் பலத்தையும் பலவீனத்தையும் கண்டறிந்து அடையாளப்படுத்துவார்கள் ஆசிரியர்கள். ஒரு தவறான மாணவனைக் கூட சிறந்த ஆசிரியரால் நல்வழிப்படுத்த முடியும்.
ஆசிரியர் பணியானது இன்று சவால்கள் நிறைந்த ஒன்றாக மாறியுள்ளது. இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் அதிகரித்து வரும் தொழில்நுட்ப பயன்பாட்டால் மாணவர்களிடையே கல்வியின் மீதுள்ள நாட்டம் குறைந்து வருகிறது. நாட்டின் கலாச்சாரம், மரபு, பண்பாடு, நாகரிகம் போன்ற அனைத்தையும் இந்த காலகட்டத்தில் குழிதோண்டி புதைக்கக்கூடிய அவலநிலைக்கு ஆளாகி இருக்கிறோம். அதனால் சிறுவர்களை திறம்பட வழி நடத்தி சமூக வளர்ச்சியையும் அவர்களிடையே சுய ஒழுக்கத்தையும் வளர்த்து சிறப்படையச் செய்ய வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கிறது.
மற்ற துறையில் செய்யும் தவறுகள் அந்த துறையோடு நின்றுவிடும். ஆனால் கல்வித்துறையில் ஏற்படும் தவறுகள் ஒரு நாட்டின் எதிர்காலத்தையே சீரழித்துவிடும். இந்நாட்டின் தூண்களான இளைஞர்களை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் தான். சுருக்கமாக கடவுள் தன்னால் எல்லா இடத்திலும் இருந்து கவனிக்க முடியாது என்பதினால் தான் ஆசிரியரை படைத்தார் என்று கூறலாம்.
ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் இந்நாளில், தங்களது பணியின் மகத்துவத்தையும் புனிதத்தையும் உணர்ந்து, சிறந்த வழிகாட்டிகளான ஆசிரியர்களுக்கு நன்றிகள் பல கூற கடமைப்பட்டுள்ளேன். உங்களால் எதிர்கால இளைய சமுதாயம் பிரகாசமாக ஒளிர்ந்து உயரத்தில் நிற்கும் என்பதில் ஐயமில்லை. சேவை எனக் கருதப்படும் பணிகள் பல இருந்தாலும் அவை அனைத்திலும் முதன்மையானதாகவும் சிறப்பித்து போற்றப்படுவதுமான ஆசிரியர் பணியை செய்யும் உலகத்தில் உள்ள எல்லா ஆசிரியர்களுக்கும் நான் தலைவணங்கு கிறேன்.
நன்றி
ஆசிரியர் தின உரை
மாணவர்களின் வாழ்க்கையில் ஆசிரியரின் தாக்கம்
மாணவர்களின் அறியாமை என்னும் இருளை போக்க வந்த அழியாத சுடர் ஒளிகளான என் ஆசிரியர்களுக்கும், இங்கு கூடியுள்ள எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவர்களுக்கும் என் காலை வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். முதலில் எனது அனைத்து ஆசிரியர்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும், அவர்களால் தான், நான் இன்று உங்கள் முன் பேசவந்துள்ளேன்.
மாணவர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஒரு மாணவரின் வாழ்க்கையில் ஆசிரியரின் தாக்கம் வகுப்பறைக்கு அப்பாலும் நீண்டுள்ளது. குருவாகிய ஆசிரியர் தாயாகவும் தந்தையாகவும் விளங்கி அன்பையும் அறிவையும் மாணவர்களுக்கு அளித்து வாழ்க்கையில் வெற்றி பெறச்செய்கிறார்கள்.
முதலில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. அவர்கள் புதிய பாடங்கள் கருத்துகள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். புதிய விஷயங்களை கற்க ஆர்வத்தை தூண்டுகிறார்கள். இதன் மூலம் மேலும் கற்றலுக்கான திறனை வளர்க்கிறார்கள் ஆசிரியர்கள். ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட திறனை அங்கீகரித்து கற்றல் பாணிகளுக்கு ஏற்றவாறு அவர்களின் கற்பித்தல் முறைகளை வடிவமைக்கிறார்கள். இது மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையில் அனைத்தையும் எளிதாகக் கற்கச்செய்கிறது, பின்னர் தங்கள் அனுபவத்திருலிருந்து நல்லதைக் கற்றுக் கொண்டு மேன்மேலும் வாழ்க்கையில் சிறப்படைகிறார்கள்.
பெரும்பாலும் பல மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பாடத்தை எந்த ஆசிரியர் கற்றுத் தருகிறார் என்பதைப் பொறுத்து அவர்கள் அந்தப் பாடத்தை விரும்புகிறார்களா ! அல்லது வெறுக்கிறார்களா ! என்று தீர்மானிக்கப்படுகிறது. சுருக்கமாக, மாணவர்களின் தலைவிதி அவர்களின் ஆசிரியர்களின் கையில் இருக்கிறது என்று கூட சொல்லலாம். உதாரணமாக, அறிவியல் ஆசிரியர் தன் பாடத்தை மாணவர்களுக்கு எளிதாக புரிந்து கொள்ள கற்றுக் கொடுத்தார் என்றால் அவரின் ஈடுபாட்டால் பல விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.
அடுத்து மாணவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியிலும் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். உதாரணமாக, இரக்கம் மற்றும் மன்னிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு ஆசிரியர் மூலம் இந்த குணங்கள் மாணவர்களிடம் வளர்ந்து அவர்கள் அனைவரையும் மன்னித்து அரவணைப்பார்கள். ஆதரவான ஆசிரியர் தன்னம்பிக்கை இல்லாத ஒரு மாணவனை அவனின் கனவை அடைய ஊக்குவித்து, அவனை வெற்றி அடையச்செய்வார்.
இது மட்டுமல்லாமல் பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, கலை நிகழ்ச்சிகள் போன்ற முக்கிய விழாக்களை நடத்தி மாணவர்களை தங்கள் சுயசிந்தனையால் வளர ஆசிரியர்கள் பாதை அமைத்துக்கொடுக்கின்றனர். இதன் மூலம் மாணவர்கள் சுதந்திரமாக காற்றாடி போல வானுயர பறந்து வெற்றிகள் படைக்கலாம். கட்டுப்பாட்டிற்காக ஆசிரியரின் கையில் நூல் இருக்குமே தவிர அது மாணவர்களின் விண்ணோட்டத்திற்கு தடையாக இருக்காது.
‘தடைக்கல்லே உனக்கோர் படிக்கல்' என்று ஊக்கத்தையும் தன்னம்பிக்கையும் ஆசிரியர்கள் ஊட்டுவதினால், மாணவர்கள் சாதனையாளராக மாறுகின்றனர். ஒவ்வொரு மனிதனின் சாதனைக்குப் பின்னால் ஆசிரியர்களின் பங்கு ஏதோ விதத்தில் ஒளிந்திருக்கிறது.
"ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கு நீ அர்ப்பணி" என்ற பொன்மொழிக்கேற்ப ஆசிரியர்கள் தங்கள் முழு ஈடுபாடுடன் மாணவர்களை வழிநடத்து கிறார்கள். அதனால் தான் அம்பேத்தர், பில்கேட்ஸ், அப்துல்கலாம், சச்சின் போன்றவர்கள் உலக அளவில் சாதனை படைத்துள்ளனர்.
ஆசிரியர்கள் வெறும் எழுத்தறிவை மட்டும் போதிப்பது இல்லை. குணநலம, தன்னம்பிக்கை, அடிப்படை கடமைகள், கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம். நல்லொழுக்கம் தலைமை தகுதி, நாட்டுப்பற்று போன்ற அனைத்தையும் கற்றுக்கொடுக்கிறார்கள் ஆசிரியர்கள் அனைவரின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே தெளிந்த நீரோடை போல் அமைதியான ஒரு நல்லுறவு இருந்தால் எதிர்கால இந்தியா வளமாக இருக்கும்.
'நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்' என்றார் உலகப் புகழ்பெற்ற மாவீரன் அலெக்சவாண்டர். ஆம், நாம் ஒவ்வொருவரும் நம் ஆசிரியர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம். ஆசிரியர் தினத்தன்று மட்டுமல்லாமல் நாம் எப்போதும் எந்நாளும் நாம் அவர்களுக்கு நன்றியுடன் இருப்போம். இங்குள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக் கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி!
1. என் அன்பான ஆசிரியரின் பெயர் திரு. கண்ணன்.
2. அவர் எனக்கு அறிவியல் கற்பிக்கிறார்.
3. அவர் அனைத்து மாணவர்களிடமும் அன்பு கொண்ட ஒரு இனிமையான நபர்.
4. அவர் மிகவும் கண்ணியமாகவும் நட்பாகவும் இருப்பார்.
5. அவர் அறிவியல் உண்மைகளை விளக்கத் தொடங்கும் போது, ஆர்வமுள்ள மாணவர்கள் கற்பனையில் தொலைந்து போவார்கள்.
6. தன் வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவரும் அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்டு புரிந்துக்கொள்வதை அவர் எப்போதும் உறுதி செய்வார்.
7. வகுப்பறையில் கல்வி பாடங்கள் தவிர பல விஷயங்களை அவர் எங்களுக்கு கற்றுக் கொடுப்பார்.
8. வகுப்பில் பலவீனமான மாணவர்களுக்கு அவர்களின் கருத்துகளை தெளிவுபடுத்துவதற்காக அவர் சிறப்பு கவனம் செலுத்துவார்.
9. விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அவர் எப்பொழுதும் எங்களை ஊக்குவிப்பார்.
10. என் வாழ்வில் இப்படி ஒரு ஆசிரியர் கிடைத்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
என் பள்ளி வாழ்க்கையை சீரும் சிறப்புமாய் தருகிற என் பள்ளியின் தலைமையாசிரியருக்கும் எங்களுக்கு அழிவில்லாத கல்வி செல்வத்தை அள்ளித் தரும் ஆசிரியர்களுக்கு என் தோழி தோழர்களுக்கும் முதற்கண் என் வணக்கத்தை தெரிவிக்கிறேன்.
மாணவர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்கள் அறிவை மட்டும் வழங்குவதில்லை, பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிய பாதையை வழிகாட்டும் வெளிச்சமாய் இருப்பர். "சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்" . மனிதன் ஆறு அறிவுடன் பிறந்திருந்தாலும் அவனுடைய அறிவை பயன்படுத்துவதற்கு ஒரு வழிகாட்டி தேவை. அந்த வழிகாட்டி தான் ஆசிரியர்கள். அப்படி என் வாழ்க்கையை வழிகாட்டிய வெளிச்சம் தான் திருமதி.அனிதா அவர்கள்.
மாணவர்களிடம் கற்றல் மீதான அன்பையும் ஆர்வ உணர்வையும் வளர்க்கும் தனித்திறமை அவருக்கு உண்டு. அவரின் தாக்கம் வகுப்பறைக்கு அப்பால் நீண்டுள்ளது. பெரிய பெரிய கனவுகளை காணவும், இலக்குகளை நிர்ணயிக்கவும், அவற்றை அடைய இடைவிடாமல் உழைக்கவும் அவர் எங்களை ஊக்குவிப்பார். வாழ்க்கைக்கு தேவையான அனைத்து திறன்களையும், ஒழுக்கங்களையும், பண்புகளையும் கற்றுக் கொடுப்பார், நான் சவால்கள் அல்லது சுய சந்தேகத்தை எதிர்கொள்ளும் போதெல்லாம், அவருடைய வழிகாட்டுதல் தடைகளை கடக்க எனக்கு உதவும். நான் தவறு செய்யும் போதெல்லாம் அவர் கூறிய அன்பான அறிவுரைகள் என்னை நேர்வழி நடத்தும்.
அவர் அன்பானவர், எளிமையானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் கடின உழைப்பாளி சில சமயங்களில் கண்டிப்பானவரும், அவர் வகுப்பில் பாடம் நடத்தும்போது மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பார். நாங்கள் அவரிடம் எந்த சந்தேகத்தையும் ஒரு முறைக்கு மேல் கேட்டாலும் அவர் கோபப்படுவதில்லை. கருணை மற்றும் கண்டிப்பு ஆகியவற்றின் சிறந்த கலவை அவர். அவர் தனது வகுப்பறையில் எந்த பாகுபாடும் இல்லாமல் ஒவ்வொரு மாணவருக்கும் உதவுவார்.
எனக்கு கிடைத்த அனைத்து ஆசிரியர்களும் பொக்கிஷங்கள். ஒவ்வொரு பள்ளியிலும் இதுபோன்ற ஆசிரியர்கள் இருந்தால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். இதுபோன்ற ஆசிரியர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் குழந்தைகளும் நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொண்டு அவர்கள் வளரும்போது சிறந்த சமுதாயத்தை உருவாக்க பங்களிப்பார்கள்.
முடிவாக, எனது ஆசிரியர்கள் வெறும் கல்வி கற்றுக்கொடுப்பவர்கள் அல்ல, அவர்கள் எங்கள் உத்வேகம். மாதா, பிதா, குரு, தெய்வம். இறைவனுக்கும் மேலாக கருதப்படும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி.
நன்றி!
reference tags:
Tamil Speech | Speech in Tamil | Republics speech in tamil | Independence speech in tamil | teachers day speech in tamil | teachers day pechu poti | tamil pechu poti | suthauthanthira thinam speech in tamil | August 15 speech in tamil | kudiyarasu thina speech in tamil | pechu potti | childrens day speech in tamil | kulathaigal dhinam pechu potti | சுதந்திர தின பேச்சு போட்டி | குடியரசு தின பேச்சு போட்டி | குழந்தைகள் தின பேச்சு போட்டி
© 2025. All rights reserved.