Never Stop Learning
முன்னுரை
இன்றைய உலகில் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார் கள். காலத்தை முந்திக்கொண்டு பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து சிக்கல்களுக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் திருக்குறளில் தீர்வுகளை எடுத்துரைத்துள்ளார். உலகின் எழுத்தோவியமாகத் திகழ்வது திருக்குறள். திருக்குறளை உலக பொதுமறை என்பார்கள். ஏனெனில் அது எந்தவொரு மதம், இனம், நாடு, மொழி குறித்து பேசாமல் பொதுவாக உலகம் குறித்தே பேசுகின்றது. இங்கு நாம் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு திருவள்ளுவர் கூறும் தீர்வுகளை விரிவாகப் பார்க்கலாம்.
இளைஞர்களும் சாதியமும் மதமும்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (குறள்: 972)
மக்கள் தங்கள் திறமைகளால் மட்டுமே வேறுபடுகின்றனர். ஆனால் பிறப்பால் அனைவரும் சமம் என்று மிக சிறப்பாக திருவள்ளுவர் கூறுகிறார்.
இந்தியாவில் பல மதங்களும் எண்ணற்ற சாதிகளும் நிலவுகின்றன. என் சாதி பெரிது உன் சாதி சிறிது என்ற பிற்போக்குத் தன்மை நம் பாரதத் திருநாட்டில் இருந்து வரும் கொடுமையாகும். இதனால் இளைஞர்கள் பலர் பல இடங்களில் ஒதுக்கப்படுகின்றனர். அவர்கள் திறமைகள் சாதி என்ற பெயரால் அழிக்கப்படுகின்றன. நாம் கல்வி அறிவு பெற்றாலும் மனவிரிவு பெறவில்லை. அதனால் தான் நம்மால் மதத்தையும் சாதியையும் அழிக்க முடியவில்லை. நாட்டைக் காடாக்கும் இத்தீயச் செயலை நாம் பிறரை மதிக்கும் நம் குணமே போக்கும். அதனை,
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். (குறள் :95)
பிறரை பார்க்கும்போது அவர்களை தாழ்வாக பார்க்காமல், முகத்தை நேருக்கு நேர் இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களை பேச வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
இளைஞர்களும் இகல் உணர்வும்
இன்றைய இளைஞர்கள் தான் நம் நாட்டின் எதிர்காலம். இளைஞர்கள் சரியான வழிகாட்டுதலுடன் வளர்ந்தால் சமூகம் நல்ல வளர்ச்சி அடையும். ஆனால் சாதி, மதம், மொழி மற்றும் பொருளாதார வேறுபாடுகள் இளைஞர்களின் இகல் உணர்வை ஊக்குவிக்கின்றன.
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்ணும்
துன்பத்துள் துன்பம் கெடின். (குறள்:854)
துன்பத்துள் பெரிய துன்பம் தரக்கூடியது நம்மில் இருக்கும் இகல் உணர்வு. அந்த உணர்வு அழிந்து போனால் நமக்கு இன்பத்திலும் பெரும் இன்பத்தைக் கொடுக்கும் என்று கூறியுள்ளார். அத்தகைய துன்பத்தை அகற்ற அவர் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறி அப்படி இருந்தோம் என்றால் நம்மை யாராலும் வெல்ல முடியாது என்று அழகாக கூறியுள்ளார்.
இகலெதிர் சாம்ந்தொழுக வல்லாரை யாரே
மிகவூலூக்கும் தன்மை யவர். (குறள் 855)
இளைஞர்களும் பகை உணர்வும்
நம்மை வெறுப்பவர்கள் நாக்கு பகைவர்கள் இல்லை. நம்மால் வெறுக்கப்படுபவர்களே தம் பகைவர்கள். இன்றைய சூழ்நிலையில் இளைநர்கள் தங்கள் பெற்றோர்களைக் கூடவெறுக்கிறார்கள்.
நம்மில் பகைமை வளர்ப்பது என்பது நமக்கு மிகுந்த கெடுதியைத் தரும். இதனால் நம் சிந்தனைகளும் எண்ணங்களும் நஞ்சாக மாறுகின்றன என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பலரோடு பகை கொன்பவன் பித்து பிடித்தவரைவிட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான் என்று
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன். (குறள் 873)
இக்குறள் மூலம் பகைமை உணர்வுடன் இருப்பவனின் மதிப்பை பற்றி கூறியுள்ளார் வள்ளுவர்.
பகைமையை மறந்து அன்பு செலுத்தி வாழ்ந்தால் நம் வாழ்வும் சிறப்படையும், நம்முடைய பண்பை இவ்வுலகம் போற்றும். அதனை
பகைநட்பாக கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு. (குறள் 874)
இக்குறள் மூலம் திருவள்ளுவர் மிக அன்புடன் கூறியுள்ளார். ஆகையால் எல்லோரிடமும் அன்பு செலுத்தி நண்பகளாக வாழ்வோம்.
இளைஞர்களும் போர் உணர்வும்
எதைக் கொண்டு வந்தோம் எதைக் கொண்டு போகப்போகிறோம், என்று வாழ்க்கையின் நிலையாமையை சிறிதளவு சிந்தித்தால் நம் வரலாற்றில் பல போர்களை தவிர்த்திருக்கலாம், பல உயிர்கள் காப்பாற்றபட்டிருக்கும்.
இன்றும் இளைஞர்கள் தங்களுடைய ஆபத்தான ஆசை அவர்களையும் அவர்கள் சுற்றியுள்ளவர்களையும் அழிக்கிறது. இதனைதான் திருவள்ளுவர்
அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம்; அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். (குறள் 368)
என்னும் குறளில் அறிவுறுத்துகிறார். ஆசையற்றவர்க்குத் துன்பம் இல்லை, ஆசையுடையவர்க்கு துன்பம் மேன்மேலும் வளரும்.
போர்புரிந்து அதில் வெற்றி பெறும் இன்பம் நிலையானது அல்ல.
இளைஞர்களும் வறுமையும்
தொழில்நுட்ப துறையில் நம் நாடு எண்ணற்ற வெற்றிகள் அடைந்தாலும் வறுமை என்னும் கொடிய நோயை வெல்ல முடியவில்லை. இளைஞர்கள் அவர்களுக்கான தருந்த வேலை கிடைக்காமல் அல்லது வேலை இல்லாமல் வறுமையில் போராடுகிறார்கள். வறுமையை வெல்ல திருவள்ளுவர் வறுமையில் இருப்பவர்களுக்கும் செவ்வந்தனுக்கும் சிறந்த முறையில் அறிவுரை கூறியுள்ளார்.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றிமை
இன்மை புகுத்தி விடும். (குறள்: 616)
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும். முயற்சி செய்யாமல் இருந்தால் அவனுக்கு வறுமை வந்து சேரும். முயற்சியும் உழைப்பும் ஒருவனை செல்வ நிலையை அடைய செய்யும் என்கிறார் வள்ளுவர். மற்றும்
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி (குறள் 226)
வறுமையில் இருப்பவர்களின் பசியைத் தீர்க்க வேண்டும். அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்கு பிற்காலத்தில் உதவுமாறு சேர்ந்து வைக்கும் இடமாகும். இதன் மூலம் வள்ளுவர் செல்வந்தனாலும் வறுமை என்னும் நோயை அழித்து, அனைவரும் இன்புற்று வாழலாம் என்று கூறியுள்ளார்.
இளைஞர்களும் காதலும்
தற்காலிய வாழ்க்கை முறை தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக பார்வைகள் ஆகியவை இன்றைய காதலில் பல சிக்கல்களை தருகிறது. இன்றைய இளைஞர்கள் தங்கள் சுய சுதந்திரம், தனிப்பட்ட விருப்பங்கள் என்று கூறி உண்மையான காதலை இழக்கின்றார்கள்.
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு. (குறள் 1122)
உடல் உயிர் இவற்றில் இரண்டில் எது இல்லை என்றாலும் மற்றொன்று இயங்காது. அதுபோன்று உண்மைமான காதலர்கள் இருக்க வேண்டுமென வலியுத்துகிறார்.
இளைஞர்களும் பாலியல் சிக்கல்களும்
இன்று நம் சமுதாயத்தில் கண்டிப்பாக தீர்க்க வேண்டிய ஒன்று பாலியல் வன்முறைகள். பாலியல் வன்முறையால் இன்று பெண்களின் உயிருக்கு கூட உத்தரவாதமில்லை. காம வேட்கை மனிதனை மிருகமாக்குகிறது. அது அவனுக்கு அழிவை மட்டும் தான் தருகிறது.
அதனை
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும். (குறள் :902)
என்று குறளில் ஆண்மையைக் காக்காமல் பெண் ஆசை கொள்பவனுக்கு இழிவு உண்டாகி அவனை நாணும்படி செய்யும்.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும். (குறள்:138)
நல்லொழுக்கம் என்றும் நல்லின்பம் தரும். தீய ஒழுக்கம் எப்பிறவியிலும் துன்பத்தைக் கொடுக்கும். ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் இந்த சமுதாயத்தில் பாலியல் வன்முறைகள் குறையும்.
முடிவுரை
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் (குறள்:620)
சோர்வு இல்லாமல் இடைவிடாமல் உழைத்து முயற்சி செய்பவர்கள் தன் வாழ்க்கையில் வரும் சிக்கல்களையும் கெடுதலான விதியையும் கூட வெல்ல முடியும் என்று திருவள்ளுவர் நம்மை ஊக்குவிக்கிறார்.
இளமைக் காலத்தில் ஒழுக்கத்துடன், பொறுமையுடன், தன்னம்பிக்கையுடன் மற்றும் அன்புடன் வாழ்ந்தால் வாழ்க்கை பயனனுள்ளதொன்றாக மலரும்.
© 2025. All rights reserved.