முன்னுரை:-

நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நூல்கள் எண்ணற்றவை. அதில் வாழ்க்கை நூலாக விளங்கும் முப்பாலாகிய திருக்குறளே என்னைக் கவர்ந்த நூலாகும்.

திருக்குறளின் அமைப்பு:-

திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்கள் வீதம் 1330 குறள் வெண்பாக்களை உடையது.

திருக்குறளின் பெருமை:-

திருக்குறள் நூலானது உலக மக்களுக்காக இயற்றப்பட்டது. வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நல்வழிகளையும் அந்த ஒரே நூலில் குறள் வழிமாக நமக்கு எடுத்துரைத்துள்ளார் திருவள்ளுவர். திருக்குறள் இன, சாதி, சமயம், மொழி, நாடுகளுக்கு அப்பாற்பட்ட அறநூலாகவும், உலகப் பொதுமறையாகவும் விளங்குகின்றது.

திருக்குறளின் சிறப்புகள்:-

திருக்குறள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்பைப் பெற்றுள்ளது. பலரும் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளனர். இன்றும் பல மேடைகளில் எடுத்தாளப்படக்கூடியது. பொய்யா மொழி, வாயுறை வாழ்த்து, தெய்வநூல், முப்பால், உத்தரவேதம் எனப் பல பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறது.

முடிவுரை:-

இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்.

திருக்குறளை கற்போம்!

கற்றபடி நிற்போம்!

முன்னுரை:-

உலக பொதுமறை என்று அனைவராலும் அழைக்கப்பெற்ற ஒரே நூல் திருக்குறள். வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நல்வழிகளையும் ஒரே நூலில் குறள் வழியாக எடுத்துரைத்துள்ளார் திருவள்ளுவர்.1330 குறட்பாக்களை கொண்ட திருக்குறளில் 332 வது குறளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

332 வது குறள்:-

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று

நிலையாமை என்னும் அதிகாரத்தில் இக்குறள் இடம் பெற்றுள்ளது. இக்குறளின் பால் அறத்துப்பால் ஆகும்.

நிலையாமை :-

நிலையாமை என்பது வாழ்வின் நிதர்சனம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அனைத்துமே எல்லா நேரங்களிலும் மாறக்கூடியது. எதுமே மாறாமல் அப்படியே இருக்கப் போவதில்லை. நாம் இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டால் ஏதோ ஒன்றை பற்றிக் கொண்டு, அது எப்போதும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைப்பது பயனற்றது என்பதை உணரலாம். இத்தகைய கருத்தை மக்களுக்கு உணர்த்த திருவள்ளுவர் நிலையாமைக்கு அழுத்தம் கொடுத்து பாடியிருக்கிறார்.

குறளின் பொருள்:-

நாடகத்திற்கு வரும் போது தனித்தனியாக வந்த மக்கள் நாடகம் முடிந்த பிறகு ஒன்று. சேர்ந்து ஒரேயடியாய் போய் விடுவதைப் போல, வருங்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் வந்த செல்வம், போகுங்காலத்தில் ஒரேயடியாய் போய் விடும் என்ற உண்மையை இக்குறள் கூறுகிறது.

நயம் பாராட்டல்:-

செல்வம் வரும் போது மகிழ்வும், போகும் போது சோர்வும் ஒருவனுக்கு எப்படி உண்டாகும் என்பதைக் காட்ட நாடகத்தைக் காணவரும் மக்களிடம் வரும் போது காணப்படும். மகிழ்வையும், போகும் போது காணப்படும் சோர்வையும் உவமையாக காட்டியிருப்பது பெரிதும் நயமுடையதாகக் காணப்படுகிறது.

புதைந்துள்ள கருத்து:-

செல்வம் நிலையானது அல்ல! அது என்றும் உன்னிடம் நிற்கும் என்று எண்ணி ஏமாற்றம் அடையாதே! அது ஒருநாள் உன்னைவிட்டு ஒழிந்து போய்விடும். அதனால் அறம் செய். அதுவே நலம் என்று வள்ளுவர் கூறுகிறார்.

முடிவுரை:-

இச்சமூகம் சிறப்பாக அமைவதற்கு தேவையான வழிமுறைகளை கூறும் திருக்குறளை கற்போம். கற்றப்படி வாழ்வோம்.

நன்றி!

முன்னுரை
"ஒழுக்கம் விடுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்."

என்பது வான்புகழ் வள்ளுவன் தந்த குறள் நெறியாகும். எனவே இக்கட்டுரையில் ஒழுக்கத்தின் மேன்மையையும் அதன் அவசியத்தையும் காண்போம்

எது ஒழுக்கம் ?

ஒழுக்கம் என்னும் சொல்லுக்கு ஒழுகுதல், நடத்தல் என்பது பொருளாகும். உன்னிடத்தில் மற்றவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாயோ, அவ்வாறே நீ மற்றவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். அதுவே ஒழுக்கம் எனப்படும்.

ஒழுக்கத்தின் மேன்மை

ஒழுக்கத்தை பின்பற்றும் சமுதாயம் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் இருக்கும். ஒழுக்கம் ஒருவருக்கு நல்லறிவையும் நற்பண்புகளையும் வளர்க்கும். தவறான வழியில் அடைந்த வெற்றி தற்காலிகமாக இருக்கும், ஒழுக்கமான முறையில் அடைந்த வெற்றி வாழ்நாள் முழுவதும் இன்பத்தையும் மரியாதையும் கொடுக்கும்.

ஒழுக்கத்தின் அவசியம்

ஒழுக்கம் நமது எண்ணங்கள், சொற்கள் மற்றும் செயல்களில் நியாயம், நேர்மை,பொறுப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். ஒழுக்கம் நம்மை உயர்விற்கு அழைத்து செல்லும். ஒழுக்கம் குறைந்தால் சமூகத்தில் பிரச்சனைகள் தோன்றும். ஏமாற்றுதல், மோசடி, திருட்டு போன்றவை நடக்கும். ஆகையால் நாம் அனைவரும் ஒழுக்கத்தின் அவசியம் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வாழ்ந்து காட்டியோர்

உலகத் துன்பகளுக்கு எல்லாம் காரணம் ஆசை என்றார் புத்தர்; தன்னைக் கொல்ல வந்தவர்கள் மீது கருணை காட்டினார் நபிகள் நாயகம்; பிறர் மனதை நோகாமல் வாழ்ந்தவர் இராமன்; தனக்கு தீங்கு செய்தவர்களையும் மன்னிக்குமாறு இறைவனிடம் வேண்டியவர் ஏசுபிரான். நமக்கு நல்வழி காட்டிய இவர்கள் காட்டிய நெறி போற்றி வாழ்ந்தால் உலகில் உயர்ந்தோர் ஆகலாம்.

முடிவுரை

ஒழுக்கம் மனிதனை உன்னதமான வாழ்க்கையை நோக்கிச் செலுத்தும் என்பது உண்மை. ஆகவே, ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து, நம்மையும் நமது சமுதாயத்தையும் மேம்படுத்துவோம் .

முன்னுரை

நீர் இல்லாமல் இந்த உலகத்தில் எந்த உயிரினமும் நிலைப் பெற்று வாழ முடியாது. அனைத்து வளங்களுக்கும் தாய்வளம் நீர். அத்தகைய நீரின் சிறப்பை பற்றியும் அதன் முக்கியத்துவத்தையும் இக்கட்டுரையில் காண்போம்.

நீரின் சிறப்பு

இந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும் தான் தண்ணீர் உள்ளதால் இங்கு உயிரினங்கள் வாழ முடிகிறது. இதை உணர்ந்த நம் முன்னோர்கள் நீரை தெய்வமாக போற்றி வந்துள்ளனர். எந்த ஒரு பயனையும் எதிர்பார்க்காமல் நம் வாழ்க்கை சக்கரம் சுழல்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது மழைநீர் மட்டுமே. ஆகையால் தான் திருவள்ளுவர் அன்றே "நீர்இன்று அமையாது உலகு" என்று கூறியுள்ளார்.

நீரின் பயன்

மனிதனின் அன்றாட தேவையான உணவுகளை விளைவி்க்க நீர் மிகவும் அவசியமானது. ஒரு நாட்டின் வளத்தையும் அதன் பொருளாதாரத்தையும் நிர்ணயிக்கும் விவசாயத்துறை, நீரால் மட்டும் செழிப்படைகிறது. மனிதன் தான் செய்யும் அன்றாட வேலைகள் அனைத்திற்கும் நீர் தேவைப்படுகிறது. ஏன்! மனிதனின் உடலே 60 சதவீதம் நீரால் ஆனது. மனிதர்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள விலங்குகள், செடி கொடிகள், மரங்கள் என அனைத்திற்கும் நீர் இன்றியமையாததாக விளங்குகின்றது.

நீர் இல்லாத உலகம்

குறைந்த அளவில் தரையை தோண்டினால் நிலத்தடி நீர் கிடைத்த காலங்கள் மாறி, இன்று பல அடி ஆழம் தோண்டினாலும் வறண்ட நிலையிலேயே இருக்கிறது பூமி. நீரின் முக்கியத்துவத்தை உணராத மனிதன் நீரை பல்வேறு வழிகளில் மாசுப்படுத்துகிறான். இவ்வுலகை நீர் இல்லாத பாதைக்கு எடுத்து செல்கிறான். இதனால் உலகம் மட்டும் அழிய போவதில்லை மனித குலமே அழிந்துவிடும்.

நீர் பாதுகாப்பு

மழைநீரை அணைக்கட்டுக்கள், குளங்கள், ஏரிகள் என்று அமைத்து சேகரித்து அதனை வேளாண்மைக்கு பயன்படுத்த வேண்டும் . ஒவ்வொரு வீடுகளிலும் மழைநீர் சேமிப்புத் தொட்டிகளை அமைத்து நீரை சேமிக்க வேண்டும் . மழையை உருவாக்குவதற்கு மூல காரணமாக விளங்கும் காடுகளை அழிக்காமல் பாதுகாப்பது மிகவும் அவசியமானது.

முடிவுரை

விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி என்று உணர்ந்து நீரை பாதுகாத்து, எதிர்கால சந்ததியினர் வளமாகவும் ஆரோக்கியமாக இருக்க வழி செய்வோம்.

முன்னுரை

இறைவன் மனிதனுக்கு சொன்னது கீதை. மனிதன் இறைவனுக்கு சொன்னது திருவாசம்

மனிதன் மனிதனுக்கு சொன்னது திடுக்குறள். பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் பாடல் அளவினாலும் பொருளின் நுட்பத்தாலும் தலை சிறந்து விளங்குவது திருக்குறளேயாகும்.

திருக்குறள்

திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பிரிவுகளை உடையது. பாரதியார், பாரதிதாசன் மற்றும் பல அறிஞர்களும், போப் போன்ற மேலை நாட்டு ஆராய்ச்சி வித்தகர்களும் திருக்குறள் போல் உலகில் ஒரு பொதுநூல் இல்லை என்னும் உண்மையை ஆய்வு பூர்வமாக அறிவித்துச் சென்றுள்ளனர்.

திருவள்ளுவர்

திருவள்ளுவர் வாழ்ந்த காலம் குறித்தும், பிறப்பு குறித்தும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அதனால் எது உண்மை என்பதை அறிய முடியவில்லை. தமிழ்நாடு அரசு அவர் கி .மு 31 ஆம் ஆண்டு பிறந்த ஆண்டாக அறிவித்து அதன் அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டை கணக்கிடுகிறது. தேவர், செந்நாப் புலவர், பெருநாவாலர், முதற்பாவலர், மாசானுபங்கி, நான்முகனார் என்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

நூற்குறிப்பு

திருக்குறள் இரண்டு அடிகளாலான குறள். வெண்பாக்களால் ஆனது. திருக்குறளின் முதல பெயர் முப்பால். இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்று பால்களையும், இல்லறவியல், துறவறவியல், அரசியல், அங்கவியல், ஒழிபியல், களவியல், கற்பியல் என்னும் ஏழு இயல்களையும் உடையதாகப் பகுக்கப்பட்டுள்ளது. திருக்குறளில் அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக 133 அதிகாரங்களையும், 1330 குறள்களையும் கொண்டது.

நூலின் சிறப்பு

திருவள்ளுவர், தமிழ், தமிழ்நாடு,தமிழன் என்னும் உணர்வுகளையும் வார்த்தைகளையும் எந்த ஓர் இடத்தில் கூட உரைத்து சொல்லவில்லை. இதன் மூலம் திருவள்ளுவர் உலகிற்குப் பொதுமறை வழங்க வேண்டும் எனத் திட்டமிட்டே இந்நூலை இயற்றியுள்ளார். அதனால் திருக்குறள் உலக பொதுமறை யாக போற்றப்படுகிறது. உலக மொழிகளில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறளாகும். திருக்குறளுக்கு உத்திரவேதம், பொய்யாமொழி, வாயுரை வாழ்த்து, தெய்வநூல், பொதுமறை, தமிழ்மறை என்று வேறு பல பெயர்களும் உள்ளன.

முடிவுரை

திருக்குறள் சண்டைகளற்ற சமூகத்துக்கு உரியது. அறநெறிவழி அரசியல், பொருளியல், இன்பவியல் என்னும் மூலம் அமைதியான இன்ப உலகத்திற்கு மனித குலத்தை இட்டுச் செல்வது திருக்குறள் . அந்நூலை அறிந்து அதன்படி நடந்து வாழ்கையை வளமாக வாழ்வோமாக!

முன்னுரை:-

உலகத்தில் அழியாத செல்வமாக விளங்குவது கல்வி. கரை காண முடியாத கல்விச் செல்வத்தை உடைய கற்றவர்களின் சிறப்பை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

கற்றவர் சிறப்பு:-

அறிவு படைத்தவன் எங்கு சென்றாலும் பிழைத்து விடலாம், கல்லாதவன் சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கிறான். ஏழைக் குடும்பத்தில் படித்த ஒருவனை பொருள் படைத்தோரும் வரவேற்றுச் சிறப்புச் செய்வதை இன்றும் நாம் காண்கிறோம்.

கற்றவர்களை போன்றும் சான்றோர்கள் :-

ஒரு நாட்டின் மன்னனையும் நன்கு படித்தவரையும் ஒப்பிட்டு பார்த்தால் கல்வி கற்றவரே உயர்ந்தவராக கருதப்படுவர் என்கிறார் ஒளவையார். அறிவுடையோன் வழி அரசும் செல்லும், பெற்ற தாயும் கல்வி அறிவில் சிறந்த மகனிடத்துக் கூடுதல் அக்கறை காட்டுவாள் என்பர் சான்றோர்.

கல்வியால் உயர்ந்தவர்கள் :-

கல்வியை சிறந்த முறையில் கற்று தமது வாழ்க்கையில் உயர்வடைந்து நாட்டிற்காக பல சாதனைகளைப் படைத்தவர்கள் பலர். அவர்கள் தம் நாட்டில் மட்டுமல்லாமல் உலகளவிலும் புகழ் பெற்று விளங்குகின்றனர்.

கல்வியில் சிறந்தவர்களான அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், பாரதியார், மகாத்மா முதல் அப்துல் கலாம் கல்பனா சாவ்லா, சுந்தர் பிச்சை வரை அனைவரும் தாங்கள் சென்ற இடம் எல்லாம் வெற்றியும் மரியாதையும் பெற்றவர்கள் என்று நாம் நன்கு அறிவோம். இவர்கள் அனைவரும் சமூகத்தில் உயர்ந்த இடத்திலேயே மதிக்கப்படுகின்றனர்.

கற்றோர் அழிவதில்லை:-

"கல்விக்காக உயிர் கொடுத்தோர் என்றும் மரணிப்பதில்லை" கல்வி கற்றவர் மரணித்து விட்டாலும் அவர் கற்பித்த கல்வி இந்த உலகம் அழியும் வரை இருந்து அவரை போற்றிக் கொண்டே இருக்கும். நாம் இன்றும் பாரதியார், திருவள்ளுவர், ஒளவையார், நபிகள் நாயகம் போன்ற எண்ணற்ற பலரின் கல்வி அறிவைப் போன்றுகிறோம்.

முடிவுரை:-

இருள் நிறைந்த குகையில் இருந்த மனிதன் இன்று கற்றவர்களின் கண்டுப்பிடிப்புகளால் ஒளி நிறைந்த உலகத்தில் வாழ்கிறான். ஆகையால் கல்வியை கற்போம் சிறப்பை அடைவோம். கற்றவர்களை மதிப்போம்.

நன்றி!

Reference tags:

Tamil katturai | தமிழ் கட்டுரை | katturai eluthum murai | katturai eluthuvathu eppadi | கட்டுரை எழுதுவது எப்படி | கட்டுரை எழுதும் முறை | Tamil katturaigal | தமிழ் கட்டுரைகள்

Reference videos: