முன்னுரை:-

இந்திய மக்களில் பெரும்பாலோரால் கொண்டாடப்படும் விழா தீபாவளி. ஏழை முதல் பணக்காரர் வரை எல்லா மக்களாலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது, என்று கூறினால் அது மிகையல்ல. பிறமதத்தவர்களும் கூட இந்துக்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்ளும் இத்திருநாளைத் தேசியத் திருநாள் என்று அழைப்பது மிகவும் பொருத்தமானதாகும்.

தீபாவளியின் பொருள்:-

தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். எங்கும் திருவிளக்கு ஏற்றி வைத்துக் கொண்டாடப் பெற்றதால் இது இப்பெயரைப் பெற்றது. ஆகவே இதனை ஒளித் திருநாள் என்றும் கூறலாம்.

கொண்டாடக் காரணம்:-

நாகாசுரன் என்னும் கொடிய அரக்கன் மக்களுக்கும் தேவர்களுக்கும் பல துன்பங்களைக் கொடுத்து வந்தான். அதனால் அனைவரும் கிருஷ்ண பரமாத்மாவை வேண்டினர். கிருஷ்ண பிரான் அருளால் அவன் கொல்லப்பட்டான். அந்த நன்னாளே இப்போது தீபாவளித் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தீபாவளியால் மகிழ்ச்சி :-

தீபாவளி என்றாலே சிறுவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி தான். அதற்கெல்லாம் காரணம் சிவகாசி பட்டாசு தான். பட்டாசு வெடித்து அவர்கள் மகிழும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. புத்தம் புதிய ஆடைகளைச் சிறியவரும் பெரியவரும் அணிந்து மகிழ்வதே ஓர் ஆனந்தம் தான். தீபாவளியன்று பண்டங்கள் செய்து உறவினர்களுக்கும் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கும் பகிர்வது வழக்கம். தக்கவர்க்கும் கொடுத்துத் தாமும் உண்ணும் போது பருத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பு வளர்ச்சி அடைகிறது.

பிறர்கொண்டாடும் தீபாவளி:-

தீபாவளியைச் சமணர்கள் மாகாவீர் பிறந்தநாளாகக் கொண்டாடுகிறார்கள். ராஜஸ்தானில் வீர விளையாட்டு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ரஜபுத்திரர்கள் தீபாவளியை ராமர் பட்டாபிஷேக நாளாகக் கொண்டாடுகிறார்கள்.

முடிவுரை:-

தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவதோடு எல்லாரும் எல்லாமும் எந்நாளும் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும் என்று. இறைவனை வேண்டுவதை நம் தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும்.

நன்றி

பொங்கல் திருநாள்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
போகித்திருநாள்
பொங்கல் திருநாள்
மாட்டுப் பொங்கல்
காணும் பொங்கல்
முடிவுரை
முன்னுரை

இயற்கையோடு இணைந்து வாழ்வதே தமிழரின் வாழ்க்கை முறையாகும். தமிழர் கொண்டாடும் பல விழாக்கள் இயற்க்கையைப் போற்றும் வகையில் அமைந்துள்ளது அவற்றுள் சிறப்பானது பொங்கல் விழாவாகும் அத்தகைய பொங்கல் விழாவைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்‌

போகித் திருநாள்

"பழையன கழிதலும் புதியன புகுதலும் " என்பது சான்றோர் வாக்கு வீட்டில் உள்ள பயனற்றப் பொருளை நீக்கி வீட்டை தூய்மை செய்யும் நாள் போகித்திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாளாகும்.

பொங்கல் திருநாள்

தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாள். இத்திருநாளன்று வாசலில் வண்ணக் கோலமிடுவர், மாவிலை தோரணம் கட்டுவர், புதுப்பானையில் புத்தரிசியோடு, வெல்லம், முந்திரி, நெய் சேர்த்து பொங்கலிடுவர் பொங்கல் பொங்கி வரும் வேளையில் "பொங்கலோ பொங்கல்" என்று மங்கல ஒலி எழுப்பிப்போற்றுவர். பின்னர் தலைவாழை இலையிட்டு பொங்கல், கரும்பு, மஞ்சள் கொத்து, தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வைத்து கதிரவனை வழிபடுவர்.

மாட்டுப்பொங்கல்

பொங்கலுக்கு அடுத்தநாள் மாட்டுப் பொங்கல். மாட்டுப்பொங்கலன்று மாடுகளை நீராட்டுவர், கொம்புகளில் வண்ணம் தீட்டுவர், மாட்டுக்கு மஞ்சள், குங்குமம் இடுவர். பொங்கல், தேங்காய், வெற்றிலை பாக்கு போன்றவற்றைப் படைத்து வழிபடுவர். உழவுக்கும் உழவர்க்கும் உற்ற துணையாக விளங்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப்பொங்கள் கொண்டாடப்படுகிறது.

காணும் பொங்கல்

காணும் பொங்கலன்று உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர் குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதைக் கழிப்பர். விளையாட்டுப் போட்டிகள் நடத்துவர்.

முடிவுரை

இயற்கை, உழைப்பு, நன்றியுணர்வு, பண்பாடு ஆகியவற்றை போற்றும் விழாவே பொங்கல் விழாவாகும்

முன்னுரை:-

நாம் எத்துணையோ விழாக்களைக் கொண்டாடி வருகிறோம். அவற்றுள் தமிழகத்தில் கொண்டாடப்படும் தலைசிறந்த விழா பொங்கல் விழா ஆகும். இது தமிழர்களின் திருநாள்.

வரலாறு:-

பொங்கல் விழா தமிழ்நாட்டில் பழங்காலம் தொட்டே கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை இந்திரவிழா என்று சிலப்பதிகாரம் பேசுகிறது. இவ்விழா அறுவடை விழா, உழவர் திருநாள். தமிழர் திருநாள், சங்கராந்தி, தைத் திருநாள் என்றெல்லாம் பல பெயர்களைப் பெற்றுள்ளது. இப்பெயர்களே பொங்கள் திருநாளின் சிறப்பைப் புலப்படுத்தும்.

தமிழர் திருநாள் :-

உழுது உழைத்துப் பயன் கண்ட உழவர்கள் அறுவடைக்குப் பின்வரும் தை முதல் நாளை மகிழ்வோடு கொண்டாடுகிறார்கள். இது இறைவனுக்கு நன்றி செலுத்தும் விழாவாகும். இவ்விழா பல நாடுகளிலும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அறுவடை நாள் கொண்டாடியதாகப் பையிள் கூறுகிறது.

பொங்கல் விழா:-

பொங்கல் வருமுன்னே பழையன கழியும். புதியன புகும். வீடுகள் வண்ணம் பூசப்பெற்று ஒளி பெற்றுத் திகழும். எங்கும் கோலங்கள் காட்சியளிக்கும். மக்கள் நாட்காலை எழுந்து நீராடி, புத்தாடை அணிவார்கள். வீட்டிற்கு முன் விளக்கு வைத்து காயும் கிழங்கும், பழமும் கரும்பும், மலரும் படைத்து புதுபானையில் புத்தரிசியிட்டுப் பொங்குவார்கள் . பொங்கி வரும் பொங்கல் கண்டு வாழ்வில் வளம் பொங்க, மகிழ்வு பொங்க இன்பம் பொங்க `பொங்கலோ பொங்கல்' என்று குரலெழுப்பிக் கொண்டாடி மகிழ்வார்கள். கூடி இருந்து உண்டு களிப்பார்கள்.

மாட்டுப் பொங்கல் :-

மறுநாள் மாட்டுப் பொங்கல் உழவுக்கு உதவிய எருதுகளுக்கு எடுக்கும் விழா. அன்று அவற்றை அழகுப்படுத்திக் கழுத்தில் மாலை சூட்டி வேட்டி கட்டி ஓட்டி மகிழ்வார்கள். பண்டைக்காலத்தில் இவ்விழா ஏறு தழுவுதல் என்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

காணும் பொங்கல் :-

உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்வார்கள். பெரியோர்களிடம் சிற்றார்கள் ஆசிபெறுவர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

முடிவுரை:-

பொங்கல் நாளில் வீட்டின் புதியன புகுதலோடு நாட்டிலும் நன்மை செழிக்க வேண்டும். நம்மிடையே நற்பழக்கங்கள் வளர வேண்டும். பழையன கழிதல் போல் தீமையும், பொறாமையும், அறியாமையும் அகல வேண்டும். அவற்றை அகற்றி நாட்டை செழிப்பாக்கிட பொங்கல் புதுநாளில் அனைவரும் உறுதி செய்வோம்.

முன்னுரை

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் " என்றார் வள்ளுவர். அத்தகைய பெருமையுடைய உழவர்கள் கொண்டாடும் நன்றித் திருநாளே பொங்கல் திருநாளாகும். உழவுக்கும் உழவர்க்கும் வந்தனை செய்யும் பண்டிகையாகவும் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

இயற்கைக்கு நன்றி

உலகம் உய்ய உழைக்கும் உழவர்கள் உழைப்பின் பயனைக் கண்டு நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் பண்டிகை. மார்கழி மாதம் இறுதிநாளில் வீட்டை சுத்தம் செய்து தேவையற்ற பொருட்களை கழிப்பர். இதுவே போகிப் பண்டிகை.

தைமாதம் முதல்நாள் அதிகாலையில் எழுந்து வீடு கழுவி கோலமிட்டு அதில் சாணியின் நடுவே பூக்களை நட்டு வைப்பர். அதுபோல் வீட்டின் வாசலில் வேப்பிலையும் கண்பூளைச் செடியும் நட்டு வைப்பர்.

புத்தாடை உடுத்தி காய்கறிகள், பழங்கள், கரும்பு, மஞ்சள் போன்றவற்றை சூரியனுக்குப் படைப்பர். புதிய பானையில் புத்தரிசி வெல்லம் கலந்து பொங்கவிடுவர், பானையில் பால் பொங்கி வருகையில் "பொங்கலோ பொங்கல்' என்று ஓசை எழுப்புவர். வெற்றிலை, பாக்கு, தேங்காய் போன்றவற்றை பொங்கலோடு வைத்து சூரியனை வணங்குவர்.

பிறகு பொங்கலை வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் உண்டு மகிழ்வர்.

மாட்டுப்பொங்கல்

பொங்கலின் மறுநாள் கொண்டாடுவதே மாட்டுப் பொங்கல். உழவர்கள் தங்களுடன் உழவுத் தொழிலுக்கு உழைத்த மாடுகளுக்கு நன்றி செலுத்தும் பண்டிகையாக இதனைக் கொண்டாடி மகிழ்வர்.

மாடுகளை குளிப்பாட்டி மஞ்சள், சந்தனம் இட்டு, அதன் கொம்புகளுக்கு வண்ணம் பூசி கழுத்தில் மாலை கட்டுவர். மாடுகளுக்கு நன்றி தெரிவித்து பொங்கலும் கரும்பும் உண்ணக் கொடுத்து மகிழ்வார்கள். தமிழகத்தின் சில பகுதிகளில் 'ஜல்லிக்கட்டு' என்ற வீரவிளையாட்டுக்களும் நடைபெறும்.

காணும் பொங்கல்

மாட்டுப் பொங்கலின் மறுநாளே காணும் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. உழைத்து களைத்த மக்கள் தங்களுக்கு உற்சாகம் தருவிக்க இந்நாளை காணும் பொங்கலாகக் கொண்டாடுகிறார்கள். உறவினர்களுடன் கூடி அன்றைய தினத்தை இன்பமாகக் கழிப்பர்.

முடிவுரை

நன்றியுடைமை, உறவினர்களை உபசரித்தல், உழவுத் தொழிலுக்கு பெருமை சேர்த்தல் போன்ற நற்குணங்களின் அடையாளமாகத் திகழும் பொங்கல் திருநாளை ஒவ்வொருவரும் போற்றிக் கொண்டாடி மகிழ்வோமாக.

முன்னுரை:-

நாட்டில் தீமைகள் தலை விரித்து ஆடும் போது இறைவன் மனிதனாகப் பிறந்து மக்களைக் காத்தருளுவான் என்று எல்லா மதத்தவர்களும் நம்புகிறார்கள். அது போலவே பாவிகளை இரட்சிப்பதற்காக இறைவன் இயேசு நாதராக மனித உருக் கொண்டு இம்மண்ணுலகில் அவதரித்தார். அந்த நன்னாளையே உலகக் கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

பிறப்பு:-

ஜெருசலேம் நாட்டில் யூத மதம் சிறப்புற்று விளங்கியது.மதபோதகர்கள் மக்களுக்கு மூடநம்பிக்கைகளைப் போதித்து காசு சம்பாதித்து வாழ்ந்தார்கள். மக்கள் உய்ய வழி தெரியாது தவித்த போது இயேசு பிரான் பெத்லேகம் நகரில் சூசையப்பருக்கும் கன்னி மரியாளுக்கும் மகனாகப் பிறந்து நல்வழி காட்டினர். அந்த நாள் தான் டிசம்பர் 25, அன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.

சிறப்பு:-

கிறிஸ்து அவதரித்த போது வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றியது. அதைக் கண்டு கீழ்த்திசை அரசர்களும், சான்றோரும் வந்து குழந்தையை வாழ்த்திச் சென்றனர். வளர்ந்த பின் இயேசு தன் ஞானத்தால் தண்ணீரைத் திராட்சை ரசம் ஆக்கினார். ஐந்து அப்பங்களை பல்லாயிரம் அப்பங்களாக மாற்றி மக்களுக்கு உணவு ஊட்டினார். நோயாளிகளைக் குணப்படுத்தினார். இப்படி இவர் செய்த அற்புதங்களை மக்கள் கண்டனர். அவர் போதனைகளைக் கேட்டு அவர் வழி நடந்தனர்.

கிறிஸ்துமஸ் விழா:-

இயேசுவின் போதனை உலகெங்கும் பரவியது. மதம் தழைத்தது. கிருஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அவர் தோற்றத்தை உலகத்துக்கு அறிவுறுத்திய நட்சத்திரத்தை எல்லா வீடுகளிலும் தொங்கவிட்டு மகிழ்ந்தார்கள்.

குடிலும் தாத்தாவும்:-

ஏழை பங்காளராக விளங்கிய இயேசுபிரான் மாட்டுத் தொழுவில் பிறந்தார். அந்த எளிமையை நினைவுறுத்த வீடுகளிலும் ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் குடில்கள் நிறுவப்பட்டன. ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து மக்களுக்கு நல்லாசி வழங்கி பரிசுகளும் கொடுத்து மகிழ்வுறுத்துவது இன்றும் வழக்கமாக இருந்து வருகிறது.

கிறிஸ்துமசுக்கு முன்:-

விழா தொடங்குவதற்கு முன்னரே வீடுகள் தூய்மைப் படுத்தப்படும். வண்ண விளக்குகள் அமைத்து ஆலயங்களையும் வீடுகளையும் அலங்கரிப்பார்கள். தொலைவில் உள்ள உறவினர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அனுப்பி அன்பைப் புலப்படுத்திக் கொள்வார்கள்.

கிறிஸ்துமஸ் விழா:-

காலையில் எழுந்து புத்தாடை புனைந்து ஆலயம் செல்வார்கள். சிறுவர்கள் பட்டாசு வெடித்து தம் மகிழ்ச்சியைப் புலப்படுத்துவார்கள். ஆலயங்களில் சிறப்பு பிராத்தனை நடைப்பெறும். மத குருமார்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துரை வழங்குவார்கள். பின்னர் வீடு திரும்பியதும் பல்வகைப் பண்டங்களை உறவினரோடு கூடி இருந்து உண்டு மகிழ்வார்கள்.

முடிவுரை:-

'யாம் செய்வது இன்னது என அறியார், அவர் பிழையை மன்னியும்' என்று வேண்டிய பாவ மன்னிப்பின் பெருமையை உலகத்துக்கு உணர்த்திய இயேசு பெருமானின் பொன் உரைகளை மனதுட்கொண்டு வாழ்வாங்க வாழ வேண்டும்.

கிறிஸ்துவ மதத்தின் கடவுளாகக் கருதப்படுபவரும், தியாகத்தின் திருவுருவமாய் விளங்குபவருமான இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளே கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. உலகம் அனைத்தும் கொண்டாடும் பண்டிகையும் இதுவே ஆகும்.

யூதர்களும் இன்னும் சில இன மக்களும் பல மூடநம்பிக்கைகளையும் சுயநலத்தையும் கொண்டிருந்தனர். இதனால் சமுதாயம் பல இன்னல்களுக்கு ஆளாயின. அக்கொடுமையை ஒழிக்கும் பொருட்டு ஜெருசலேம் நகரில் கன்னி மரியாளுக்கு மகனாக அவதரித்தவர் இயேசு பெருமான்.

இயேசு கிறிஸ்து மக்களுக்கு அன்பை போதித்தார். பல நற்கருத்துக்களை எடுத்துரைத்து சமுதாயத்தை சீர்படுத்தினார். இன்னலுற்ற பல மக்களுக்கு நன்மைகள் செய்தார். அண்டை நாடுகள் மட்டுமின்றி அவரை பல்வேறு நாட்டு மக்களும் தொழுது வணங்கினர்.

சில நூறு வருடங்களுக்கு முன்புவரை கிறிஸ்துமஸ் திருநாள் பல்வேறு நாடுகளில் பல்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் உலகிலுள்ள கிறிஸ்தவ சபையினர் அனைவரும் ஒன்று கூடி டிசம்பர் 25ம் நாளை கிறிஸ்துமஸ் தினமாக அறிவித்தனர். அன்றிலிருந்து இந்த நாளிலேயே இப்பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது.

கிறிஸ்துமஸ் திருநாளான டிசம்பர் 25 உலகின் பலபாகங்களில் குளிர்காலமாகும். அக்காலகட்டத்தில் பல கிறிஸ்துவர்கள் இரவில் பல பாடல்களை இசைத்த படி ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று வாழ்த்து தெரிவிப்பர். வீடுகளில் பல வண்ண விளக்குகளை எரியவிடுவர், குடில்களை அமைப்பர். கிறிஸ்துமஸ் தினத்தன்று பேராலயங்களில் சிறப்பு பிராத்தனைக் கூட்டங்கள் நடைபெறும். மக்கள் இனிப்புகளை பகிர்ந்து உண்டு மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

பிறர் நலத்திற்காக தியாகங்கள் பல செய்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் அனைவருக்கும் அன்பையும் தியாகத்தையும் போதிக்கும் நாளாகும். அவர் காட்டிய வழியில் நாம் ஒவ்வொருவரும் அன்பை கொண்டு வாழ வேண்டும். பிறருக்காக தியாகம் செய்யும் மனப் பான்மைமையும் வளர்க்க வேண்டும்.

Reference tags:

Tamil katturai | தமிழ் கட்டுரை | katturai eluthum murai | katturai eluthuvathu eppadi | கட்டுரை எழுதுவது எப்படி | கட்டுரை எழுதும் முறை | Tamil katturaigal | தமிழ் கட்டுரைகள்

Reference videos: